தாய் முகமே சொல்லும் என்ன குழந்தைனு? : அவ(ள்) நம்பிக்கைகள் - 7


நம்பிக்கை :

"கருவுற்ற தாயின் வயிற்றில் தோன்றும் வரிகளை வைத்து வயிற்றில் இருப்பது என்ன குழந்தை என்பதைக் கண்டுபிடித்துவிடலாம்..!"

உண்மை :

கண்டுபிடிக்க முடியுமென்றால் இந்த வரிகள், கவிதையை விட சுவைக்கும் அல்லவா?

உண்மையில், கர்ப்பகாலத்தில் மெலனின் நிறமி அதிகமாகச் சுரப்பதால் முகம், மார்பு மற்றும் கழுத்துப் பகுதிகள் சற்று கருமையாகவும், வயிற்றுப் பகுதியில் கருமை நிறக்கோடுகளும் (linea nigra) தோன்றுவது இயல்பானதுதான்.

ஆனால், பிறக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதற்கும் இந்த வரிகள் எப்படி என்பதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அப்படி எதுவும் நடந்திருக்கிறது என்றால், அது காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதைதான்..!

நம்பிக்கை :

"கர்ப்பகாலத்தில் தாய்க்கு முடி நன்றாக வளர்வதுடன் பொலிவும் கூடுகிறது என்றால், அது நிச்சயம் பெண் குழந்தைதான். இல்லையென்றால் அது ஆண் குழந்தையாய் இருக்கலாம்!"

உண்மை :

அப்படி என்றால் பெண்கள் கர்ப்பகாலத்தில் மட்டும்தான் பொலிவாக இருக்கிறார்கள் என்கிறீர்களா? பெண்கள் எப்போதுமே பொலிவுதானே..?!

நிஜத்தில், கர்ப்பகாலத்தில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன்களின் அளவு என்பது வாழ்நாள் முழுவதும் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன்களைக் காட்டிலும் அதிகமானது. பெண்மை ஹார்மோனான ஈஸ்ட்ரோஜன்கள் அதிகம் சுரக்கும்போது, அது நிச்சயம் பெண்ணின் பொலிவைக் கூட்டுவதும் இயல்பானதுதான்.

கூடவே, நமது உடலின் முடி வளர்ச்சி என்பது சாதாரணமாக மாதத்துக்கு 1.25 சென்டிமீட்டர் அளவில் இருக்கும் என்பதுடன், அது கர்ப்பகாலத்தில் எந்த அளவிலும் மாறுவதில்லை. என்றாலும் இந்த கர்ப்பகாலத்தில் பெண்கள் உட்கொள்ளும் சத்தான உணவுகள், முடி சற்று பொலிவுடன் ஒளிர உதவுகின்றன.

மேற்கூறிய இரண்டுமே வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணாய் இருந்தாலும், பெண்ணாய் இருந்தாலும் எந்த வித்தியாசமும் இல்லாமல் நிகழும் என்பதால், முக அழகும், முடி வளர்ச்சியும் குழந்தையின் பாலினத்தைக் குறிப்பதில்லை. மாறாக தாய் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறாள் என்பதையே குறிக்கிறது என்று புரிந்து கொள்வோம். எல்லாவற்றுக்கும் அப்பால் ஆண் குழந்தையோ, பெண் குழந்தையோ எதுவாக இருப்பினும் ஆரோக்கியத்துடன் பிறக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்.

(நம்பிக்கைகள் தொடரும்)

கட்டுரையாளர் :மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர். தொடர்புக்கு: savidhasasi@gmail.com
குங்குமப்பூ சாப்பிட்டா செக்க செவேலென குழந்தை பிறக்குமா ? :அவ(ள்) நம்பிக்கைகள்-6

x