பாலின நீதி வழங்க கனடா பாதுகாப்பு அமைச்சரான அனிதா!


அனிதா ஆனந்த்

’நீதி வழங்கப்படும்’ என்ற உறுதிமொழியோடு கனடா நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பதவியேற்றிருக்கிறார், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த். இவர், தமிழகப் பின்னணி கொண்டவர் என்பது இன்னொரு சிறப்பு!

கனடாவில் பாதுகாப்பு அமைச்சராகப் பொறுப்பேற்கும் 2-வது பெண் இவர் (1990-ல், கனடாவின் முதல் பெண் பாதுகாப்பு அமைச்சராகப் பதவி வகித்தவர் கேம்ப்பெல்). கனடா ஒக்வில்லே பகுதியில் 65 சதவீத வாக்குகளைப் பெற்று வாகை சூடியிருக்கும் அனிதா ஆனந்த், ஏற்கெனவே சேவைகள் மற்றும் கொள்முதல் துறை அமைச்சராக 2019-ல் இருந்து செயலாற்றி வருபவர்.

கரோனா பெருந்தொற்றிலிருந்து மீள முடியுமா என்ற அச்சம் உலகைப் பிடித்தாட்டிய காலகட்டத்தில், கனடாவுக்குத் தேவையான தடுப்பூசிகளை வாங்குவதில் தனது ஆற்றலை வெளிப்படுத்தினார் அனிதா. அதற்காகப் பிரதமரின் பாராட்டுதலையும் பெற்றார். சரி, அதையெல்லாம் தாண்டி, பாதுகாப்புத் துறை அமைச்சர் பதவி அனிதாவுக்கு வழங்கப்பட்டது ஏன்?

அனிதா ஆனந்த், ஹர்ஜித் சஜ்ஜன்

பாலின உரிமை குறித்த நுண்ணுணர்வு மிக்கவரை ராணுவத்தின் தலைமை பீடத்தில் அமர வைப்பது மட்டுமே, இதற்கான தீர்வு என்பதை ட்ரூடோ உணர்ந்தார். அந்த வகையில் கனடா ராணுவப் படையினால் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நியாயம் சேர்க்கக்கூடியவராக அனிதா ஆனந்த் செயல்படுவார் என்று ட்ரூடோவுக்கு உயர்மட்ட ஆலோசகர்களால் அறிவுறுத்தப்பட்டது.

தலைவிரித்தாடும் பாலியல் குற்றங்கள்

கடந்த செப்டம்பர் மாதம் நடந்து முடிந்த கனடா நாடாளுமன்றத் தேர்தலில், லிபரல் கட்சித் தலைவர் ஜஸ்டின் ட்ரூடோ வெற்றி பெற்று 3-வது முறையாகப் பிரதமர் ஆனார். அதை அடுத்து அங்கு புதிய ஆட்சி அமைக்கப்பட்டபோது பாதுகாப்பு அமைச்சராக ஹர்ஜித் சஜ்ஜன் என்ற மற்றொரு இந்தியர்தான் பதவியேற்றார். அனிதாவுக்குக் கொள்முதல் துறையே மீண்டும் வழங்கப்பட்டது. இவர்கள் இருவர் உட்பட 17 இந்திய வம்சாவளிகள், கனடா நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றனர்.

கனடா காவல் துறையில் உளவுத் துறை அதிகாரியாகவும் பின்னர் ராணுவ லெப்டினன்டாகவும் பணிபுரிந்தவர் ஹர்ஜித் சஜ்ஜன். ட்ரூடோ முதன்முறையாக 2015-ல் ஆட்சி அமைத்ததிலிருந்து கனடாவின் பாதுகாப்பு அமைச்சராக சஜ்ஜன் பதவி வகித்துவந்தார்.

ஆனால், கனடா ராணுவத்தில் நிலவிவரும் பாலியல் குற்றங்களைத் தடுத்து நிறுத்தத் தவறிய குற்றச்சாட்டு சஜ்ஜன் மீது நெடுங்காலமாக நீடித்துவந்தது. உடன் பணிபுரியும் பெண்களிடமும், பொதுமக்களிடமும் ராணுவ வீரர்கள் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுவதைத் தடுத்து நிறுத்த, பிரதமர் என்ன செய்தார் என்ற கேள்வியும் வலுத்தது.

வெறும் பெண் என்பதால் அல்ல!

எதிர்க்கட்சியினரும் ஊடகங்களும் சமூகச் செயற்பாட்டாளர்களும் பிரதமரை நேரடியாகக் கேள்வி கேட்டனர். பாலின உரிமை குறித்த நுண்ணுணர்வு மிக்கவரை ராணுவத்தின் தலைமை பீடத்தில் அமர வைப்பது மட்டுமே, இதற்கான தீர்வு என்பதைப் பிரதமர் ட்ரூடோ உணர்ந்தார். அந்த வகையில் ராணுவத்தினரால் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நியாயம் சேர்க்கக்கூடியவராக அனிதா ஆனந்த் செயல்படுவார் என்று ட்ரூடோவுக்கு உயர்மட்ட ஆலோசகர்களால் அறிவுறுத்தப்பட்டது. அனிதாவுக்கு ராணுவ அமைச்சர் பதவி அளிப்பதன் மூலம் கனடா தேசம், ராணுவத்தைச் சீரமைக்கும் முனைப்பில் நேர்மையாகச் செயல்படுவதாக உலகுக்கு உணர்த்த முடியும் என்றும் வழிகாட்டப்பட்டது.

இந்நிலையில், சஜ்ஜனுக்குப் பதில் அனிதாவுக்கு ராணுவ அமைச்சர் பதவியை ட்ரூடோ தற்போது வழங்கியுள்ளார். சர்வதேச வளர்ச்சி முகமை அமைச்சராக சஜ்ஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பதவி ஏற்றுக்கொண்டதும், கனடா ராணுவத்தினர் அனைவரும் பாதுகாப்பாக உணரும்படியான செயல்களை முன்னெடுக்கவிருப்பதாக அனிதா உறுதியளித்திருக்கிறார். தன் மீது நம்பிக்கை வைத்து புதிய பொறுப்பை ஒப்படைத்திருக்கும் பிரதமர் ட்ரூடோவுக்குத் தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி கூறினார். அனிதா குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசும்போது, “உலகத் தரம் வாய்ந்த நிர்வாகத்தைச் செய்யக்கூடியவர் அனிதா ஆனந்த் என்பதை மக்கள் விரைவில் புரிந்துகொள்வார்கள். அதேபோல அற்புதமான ஆண்களும் பெண்களும் சேவை செய்யும் இடமே கனடா ராணுவப் படை என்பதையும் அவரது தலைமை விரைவில் உணர்த்தும்” என்றார் ட்ரூடோ.

சட்டப் பேராசிரியரை வரவேற்ற அரசியல்

அனிதா ஆனந்த், கனடாவின் நொவஸ்கொஷா மாகாணத்தில் உள்ள கென்ட்வில் பகுதியில் 1967-ல் பிறந்தார். இவரது பெற்றோர் இருவருமே மருத்துவர்கள். இவரது தந்தை ஆனந்த் தமிழகத்தைச் சேர்ந்தவர். தாய் சரோஜ் பஞ்சாபைப் பூர்விகமாகக் கொண்டவர்.

அனிதா பள்ளிப்படிப்பை முடித்ததும், கென்ட்வில்லை விட்டு கனடாவின் 2-வது பெரிய மாகாணமான அன்டாரியோவுக்குக் குடிபெயர்ந்தனர் அனிதாவின் பெற்றோர். அங்குள்ள ஒக்வில்லே பகுதியில் வசிக்க ஆரம்பித்த அனிதா, குவீன்ஸ் பல்கலைக்கழகத்தில் இளநிலை அரசியல் ஆய்வுப் பட்டமும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் இளநிலை சட்டத் தத்துவமும் படித்தார்.

இதுபோக, டல்ஹவுசி பல்கலைக்கழகத்திலும் டொரன்டோ பல்கலைக்கழகத்திலும் சட்ட மேற்படிப்புகளை மேற்கொண்டார். 1994-ல் ஆண்டாரோ நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் ஆராய்ச்சியாளராகவும் பணிபுரிந்தார். நிதிச் சந்தை, கார்ப்பரேட் நிர்வாக முறை, பங்குதாரர் உரிமைகள் ஆகியன குறித்தும் விரிவாக ஆராய்ச்சி செய்தார். டொரன்டோ பல்கலைக்கழகத்தில் சட்டத் துறைப் பேராசிரியராகப் பணிபுரிந்து வந்தவரை அரசியல் களம் வரவேற்றது. தான் வாழ்ந்துவரும் ஒக்வில்லே பகுதியில் தேர்தலில் போட்டியிட்டு, 2019-ல் வெற்றி பெற்றார். அப்போதே, பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ அனிதாவைப் பொதுச் சேவைகள் மற்றும் கொள்முதல் துறை அமைச்சராக நியமித்தார்.

இந்திரா காந்தி ஆட்சிக் கால சம்பவம்

பொறுப்பை ஏற்ற அனிதா முன்னெடுத்த முக்கியப் பணிகளில் ஒன்று, 1985 ஜூன் 23-ல் வெடித்துச் சிதறி 329 உயிர்களைப் பலிகொண்ட ஏர் இந்தியா கனிஷ்கா விமான விபத்து சம்பவம் குறித்த விசாரணை. கனடாவில் உள்ள மான்ட்ரியல் நகரத்தில் இருந்து டெல்லிக்குப் புறப்பட்ட விமானத்தில், காலிஸ்தான் சீக்கியப் போராளிகள் குண்டு வைத்தனர். 1984-ல், பொற்கோயிலுக்குள் இந்திய ராணுவப் படையை அன்றைய பிரதமர் இந்திரா காந்தி ஏவிவிட்டதற்கு நடத்தப்பட்ட எதிர் நடவடிக்கை அந்தக் கோரச் சம்பவம். 24 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த அந்தச் சம்பவம் தொடர்பான விசாரணையை அனிதா முடுக்கிவிட்டார்.

தான் பதவி ஏற்றுக்கொண்ட நாளிலிருந்து கனடாவில் பொதுத் துறை மட்டுமல்லாமல், தனியார்த் துறை வளர்ச்சிக்கும் ஒருசேர ஆற்றிய பங்களிப்புக்காக, 2019-ல் 'கனடா ராயல் சொசைட்டி விருது' வழங்கி அனிதாவைக் கவுரவித்தது. இந்நிலையில், ’நீதி வழங்கப்படும்’ என்று பதவிப் பிரமாணம் ஏற்று கனடா ராணுவத்தைச் சீரமைக்க அனிதா துணிந்திருக்கிறார்.

பெட்டிச் செய்தி

பாலின சமத்துவ அமைச்சகம்

ஓரிரு துறைகளில் மட்டுமல்லாமல், ஆட்சி அதிகாரத்திலும் பாலின சமத்துவத்தைக் கடைபிடிப்பவராக ட்ரூடோ திகழ்வதால் அவரது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 38 உறுப்பினர்களில் சரி பாதி பெண்களே. இந்நிலையில் தனது கடந்த ஆட்சியில் பொருளாதார மேம்பாட்டுத் துறை அமைச்சராகச் செயலாற்றிய மெலைன் ஜோலிக்கு, இம்முறை வெளியுறவுத் துறை அமைச்சர் பதவி வழங்கியிருக்கிறார் ட்ரூடோ. துணைப் பிரதமராக கிறிஸ்டினா ஃப்ரீலாந்து நீடிக்கிறார். பசுமை அமைதிக்காக 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடி வரும், சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் ஸ்டீவன் கில்பெல்ட்டு சுற்றுச்சூழல் துறை அமைச்சராகப் பதவியேற்றார். மனநலம் மற்றும் போதை பழக்கத் தடுப்புக்கென புதிய அமைச்சகத்தையும் ட்ரூடோ உருவாக்கியுள்ளார். கனடா பூர்வகுடிகளின் நலத் துறையின் அமைச்சராகச் செயலாற்றிய கரோலின் பென்னட் என்பவர், மனநலம் மற்றும் போதை பழக்கத் தடுப்புத் துறையின் அமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கிறார்.

x