இசைவலம்: கலகலப்பான கல்யாண கானம்!


கலகலப்பான கல்யாண கானம்!

குழந்தைகள் குறுக்கும் நெடுக்குமாக ஓடிக்கொண்டிருக்கும் திருமண வீடுகளை, இப்போதெல்லாம் பார்க்க முடிவதே இல்லை. பெரும்பாலும், குழந்தைகளைத் தவிர்த்துவிட்டு பெரியவர்கள் மட்டுமே திருமணங்களுக்கு வருகின்றனர். பல வீடுகளில் இருக்கும் குழந்தைகளே, “யுவர் ரிலேஷன்ஸ் ஆர் நாட் மை ரிலேஷன்ஸ்” எனும் ரீதியில், பெற்றோர்களுக்கே பாடம் சொல்கிறார்கள். வந்திருக்கும் உறவினர்களிடமும், ஓர் எந்திரத் தன்மை வெளிப்படுவதைத் திருமண வீடியோ பதிவுகள் பளிச்சென்று காட்டிவிடுகின்றன. சந்தோஷமான திருமண வீட்டுப் பாடல்களுக்கென்றே, புகழ்பெற்ற திரைப்படங்கள் வெளிவந்த காலங்கள் ஒன்று உண்டு. அப்படிப்பட்ட திருமண வீட்டின் கொண்டாட்டப் பாடல்களை, இப்போதெல்லாம் திரைப்படங்களிலேயே பார்க்க முடிவதில்லை.

இந்நிலையில், சோனி மியூசிக் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் பாடலில், மறைந்துபோன திருமண வீட்டின் சந்தோஷம் திரும்பக் கிடைத்திருக்கிறது.

‘யாத்தி யாத்தி என்னை மயக்கும் சுந்தரியே

யாத்தி யாத்தி உன் ஸ்டிக்கரு பொட்டுல சட்டுன்னு ஒட்டுற...’

என்று துரிதகால மெட்டுக்குத் துணைபோகும் வேகத்தில், ராம் கணேஷ் எழுதியிருக்கும் பாடலை, அனுராதா ஸ்ரீராம், யாஸின் நிஸார் ஆகியோரோடு இசையமைத்துப் பாடியிருக்கிறார் அபிஷேக். வேகமான மெட்டுக்கு இணையாக வேகமான நடன அசைவுகளைக் குழுவினருக்கு சொல்லிக் கொடுத்து, நேர்த்தியான காட்சி அனுபவத்தைத் தந்திருக்கிறார் நடன இயக்குநரான ஸ்ரீதர். பாடல் காட்சியில் மணமகன் - மணமகளாகத் தோன்றும் அஷ்வின்குமார், ஹஸ்விதா விஜய் ஆகியோரின் தோற்றப் பொலிவு புத்துணர்ச்சியோடு பாடலைக் கேட்பதற்கு துணை செய்கிறது. ‘மழை விட்டாலும் தூவானம் விடாது’ என்பதுபோல், பாடல் முடிந்துவிட்டாலும் தூவானமாய் தம்பதியிடையே மகிழ்ச்சி தொடர்கிறது. பார்க்கும் நம் மனங்களிலும்!

https://www.youtube.com/watch?v=seCVGdhsNYE&list=PLGjAbxgreXJyH_rvahMOQ-VGLpW2K8NWo

தனிமையின் நிழலில் நிஜம்!

‘தனிமையிலே இனிமை காண முடியுமா, நள்ளிரவினிலே சூரியனும் தெரியுமா?’

‘வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்...’

என்பது போன்ற நம்பிக்கை அளிக்கும் பாடல்களைக் கறுப்பு - வெள்ளை திரைப்படங்களில், பல எண்ணங்களின் வண்ணங்களாகப் பார்த்திருக்கிறோம். ஒருவரை ஒதுக்கிவைப்பது வேறு; ஒதுங்கி இருப்பது வேறு. முதலில் சொன்னது, தனிமையை வேண்டா வெறுப்பாக நம் மீது பிறர் திணிப்பது. இரண்டாவது, நாமே தனிமையை விரும்பி ஏற்றுக்கொள்வது.

"யாரும் இல்லேங்கிறது தனிமை இல்லை. நம்மளைச் சுற்றி எல்லோரும் இருந்தும், நமக்காக யாருமே இல்லைங்கிறதுதான் தனிமை..." முன்னொட்டாக இப்படியான விளக்கத்தோடு தொடங்குகிறது, நியூட் சோல் தயாரித்திருக்கும் ‘லோனர்’ எனும் இந்த வீடியோ பாடல்.

‘என் நிழலுக்கும் என்னைவிட்டால் யாரும் துணை இல்லை

எனைச் சுற்றித் தனிமை

கனவுக்குள் கண்ணீர் விட்டும் கரைந்து போகவில்லை

இது என்ன கொடுமை...’

என்று தவிக்கும் மனநிலையை, வார்த்தைகளில் வடித்துள்ளார் மோகன்ராஜன். பாடலின் தன்மைக்கேற்ற இசையை அமைத்திருப்பதோடு இயக்கவும் செய்திருக்கிறார் அடிகிரிஸ். ஆனந்த் அரவிந்தாக் ஷன் குரலில் வெளிப்படும் மென்சோகம், இந்தப் பாடலுக்கு பெரிதும் நியாயம் சேர்க்கிறது. இறுதியில் நம்பிக்கையோடு பாடலை முடித்திருக்கின்றனர். நம்பிக்கைதானே வாழ்க்கை என்பதுபோல் அசரீரியாக ஒரு ஹம்மிங். அது போனஸ் இனிமை!

https://www.youtube.com/watch?v=BTxBa4-U6Uo&list=PLGjAbxgreXJyH_rvahMOQ-VGLpW2K8NWo&index=12

கம்பீரமான நெகிழ்ச்சி!

சண்டிகரில், இசைக் குடும்பத்தில் பிறந்தவர் பிரதீக் பச்சன். இவரின் தந்தை வரீன்தர் பச்சன் பாரம்பரியமான பஞ்சாபி இசைக் கலைஞர். பிரதீக் பச்சன் தன்னுடைய இசைத் திறமையைப் பயன்படுத்தி, ‘ப்ராக்கி பி' எனும் பெயரில் சில இசை ஆல்பங்களைத் தயாரித்தார். ஆனால், எவரும் செவி மடுக்கவில்லை. கடந்த 2012-ல் பாடலாசிரியர் ஜானி என்பவரைச் சந்தித்தார். அதுதான், பிரதீக்கின் இசைப் பயணத்தில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. அவர்கள் இருவரும் இணைந்து உண்டாக்கிய இசை ஆல்பங்கள், இசை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன. ‘பி ப்ராக்’ எனும் பெயரில் இயங்க ஆரம்பித்தார் பிரதீக்.

ஜெஸ்ஸி கில், ஹார்டி சாந்து, ஜிப்பி கிரீவால் உள்ளிட்ட புகழ் பெற்ற பாடகர்கள் இவர்களின் இசைத் தயாரிப்புகளில் பாடினர். 2018-ல், ஜானியின் பாடல்களை இசையமைத்து பி ப்ராக் பாடிய பல பாடல்கள் இசை உலகில் கவனம் பெற்றன.

2019-ல் வெளியான ‘கேஸரி’ இந்திப் படத்தில், இவர் பாடியிருக்கும் `தேரி மிட்டி' பாடலில் ஓர் இந்திய ராணுவ வீரன் அவனுடைய தாய் மண்ணைக் காப்பதற்கான போராட்டம் இம்மி பிசகாமல் வெளிப்பட்டிருக்கும். பிறந்த மண்ணை, எந்த அளவுக்கு தன்னுடைய ரத்தத்தையும் உயிரையும் கொடுத்து ராணுவ வீரன் காப்பான் என்பதையும் ராணுவ வீரர்களின் தியாகத்தையும் தீரத்தையும் உணர்ச்சிப் பிழம்பான உச்ச ஸ்தாயியில் பாடியிருப்பார் பி ப்ராக். கேட்பவர்களையும் கரைய வைக்கும் இவரின் குரலுக்குதான், 67-வது தேசிய விருதுகளின் பட்டியலில் சிறந்த பாடகருக்கான விருது கொடுக்கப்பட்டிருக்கிறது.

தேசத்தை நெகிழ்ச்சியடைய வைத்திருக்கும் அந்தக் குரலைக் கேளுங்கள்:

https://www.youtube.com/watch?v=tionpZAVPd4

நீர்வளம் காக்கச் சொல்லும் குரல் வளம்

பாடகர்களான டாக்டர் ரவீந்திரா - டாக்டர் வந்தனா தம்பதிக்கு மகளாகப் பிறந்தவர் சாவனி ரவீந்திரா. புகழ்பெற்ற பண்டிட் பண்டரிநாத் கோலாப்பூரிடம் இந்துஸ்தானி இசையையும் கஸல் பாடல்களை ரவி தடேவிடமும் கற்றுக்கொண்டார் சாவனி. பல பிரபல இசை மேதைகளோடு இணைந்து இசை நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கும் சாவனி, இளம் வயதிலேயே ‘சரிகமா’ நடத்திய இசைப் போட்டியில் இறுதி 5 போட்டியாளர்களில் ஒருவராகத் தேர்வானவர். எண்ணற்ற இசை ஆல்பங்களில் பாடி, மராத்தி மொழியில் இளம் வயதில் தன்னிகரற்ற புகழோடு விளங்கும் சாவனி ரவீந்திராவுக்கு, அண்மையில் கிடைத்திருக்கும் அங்கீகாரம் - தேசிய அளவில் சிறந்த பாடகிக்கான விருது.

சிறந்த பிராந்திய மொழித் திரைப்படத்துக்கான விருதை பெற்றிருக்கும் மராத்தி திரைப்படம் ‘பார்டோ'. இந்தப் படமும் நம் மண்ணைக் காப்பதற்கான போராட்டத்தை முன்னெடுக்கும் படம்தான். என்ன வித்தியாசம் என்றால், அந்நியர்களிடம் இருந்து அல்ல, இயற்கை வளங்களைக் கூறுபோட்டு விற்கத் துடிக்கும் சில மண்ணின் மைந்தர்களிடம் இருந்தே, நம்முடைய தாய் மண்ணைக் காக்க வேண்டியதன் அவசியத்தைச் சொல்லும் படம். இதில் சாவனி பாடியிருக்கும் ‘ரானு பேட்டலு... ரானு பேட்டலு' பாடலுக்குத்தான் தேசிய விருது கிடைத்திருக்கிறது. மண்ணின் மீதான நேசத்தை குரலில் அவர் வெளிப்படுத்துவதைக் கேளுங்கள்.

https://www.youtube.com/watch?v=bnYNdzUsomM

x