நிழற்சாலை


பொம்மை மனம்

பொம்மைக்கு

புதுத்துணி

மாட்டிவிடும்போதெல்லாம்

பெருமூச்சு விடுகிறாள்

துணிக்கடைப் பணிப்பெண்


எல்லாப் பெண்களும்

பொம்மைக்கு

தங்கள் தலையைப் பொருத்தி

அழகு பார்க்கிறார்கள்


புதுச்சட்டை எடுத்தாலும்

அந்த பொம்மைதான்

வேணுமென்று

அடம்பண்ணுகின்றன

குழந்தைகள்


பாப்பாக்களின் கையிலுள்ள

பழுப்பேறிய பொம்மைகள்

நினைத்துக்கொள்கின்றன

பிறந்தால் ஜவுளிக்கடை பொம்மையாகவே

பிறக்க வேண்டுமென


எல்லோரும்

கண் வைத்துவிடுவார்கள்

என்பதாலோ

முகம் வைப்பதில்லை

பெரும்பாலும் முதலாளிகள்


ஆனாலும்

எத்தனை நாள்தான்

குளிக்காமலேயே

உடைமாற்றிக்கொள்வதென

சங்கடப்படுகின்றன

ஜவுளிக்கடை பொம்மைகள்.

- காசாவயல் கண்ணன்

வானத்தைத் தகர்த்த சிறுவன்


சலனமற்ற நதியென

வானம் தகதகக்கும்போதெல்லாம்

அதனை ஒரு முறையாவது

நீந்திக் கடக்க வேண்டுமென்று

அவாவுற்றிருந்தான்

அந்தச் சிறுவன்


அனிச்சையாக நதியில் மிதக்கும்

வானத்தைக் கண்டதும்

நீரைக் கிழித்தபடி குதித்து

தீரா ஆசையை நிவர்த்தி செய்கிறான்


அதற்குப் பின்னர் நிகழ்ந்த

எதனையுமே அவன்

கருத்தில் எடுக்கவில்லை

வானம் துண்டு துண்டாக

உடைந்து சிதறியிருந்தது

கரையில் நின்றிருந்த

வயது முதிர்ந்த மரங்கள்

முறிந்து வீழ்ந்துகிடக்கின்றன

எதைப் பற்றியும்

அலட்டிக் கொள்ளவில்லை சிறுவன்

நீந்த நீந்த அடுக்கடுக்காக

உடைந்துகொண்டே இருந்தன

வானமும் மரங்களும்

கரை சேர்ந்த சிறுவனின்

காற்சட்டை காயும்வரை.


- ஜமீல்

பாக்கெட்டுக்கு வெளியே துடிக்கும் இதயம்

எதுவும் சாப்பிடத் தோன்றாமல்

சற்று நேரம் இளைப்பாறிச் செல்ல

நோய்மையின் பிடியில்

மனைவி உறங்கும்

கவலைகளின் கூடாரத்திலிருந்து

மருந்துக் கவுச்சியோடு‌ கழன்று வந்தமர்ந்தவனிடம்

சர்வர் வரிசையாய்

அசைவ உணவுகளின் பெயர்களை

அடுக்கிக்கொண்டிருக்க

பாதியிலேயே

ஒற்றை குஸ்கா போதுமென்றவனை

நம்பாமல் பார்த்தபடி நகர்கிறான்

கனமாகத்தான் இருக்கிறது

சட்டைப்பையோடு

மனதும்.

-ந.சிவநேசன்

உணர்வின் நிறமாற்றங்கள்

ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துவிட்டு

மனம் கனக்க

தொடுதிரையை மேலேற்றினால்

நண்பனின் பிறந்தநாளுக்கு

வாழ்த்தச் சொல்கிறது முகநூல்

சட்டென்ற மனமாறுதலைப் பெற முடிந்த

இயந்திர உலகில்

சற்று முன் அறிவித்த வருத்தங்களைத்

துடைத்தெறிந்துவிட்டு

உடனே சிரித்தபடி சொல்ல முடிகிறது

பிறந்த நாள் வாழ்த்தொன்றை!

- கி.சரஸ்வதி

ஒன்றாம் தேதியின் விடியல்


விட்டத்தின் சுவற்றில்

ஞாபகமாகிறது

வாடகை நிலுவையில்

சுழலும் நிழற்சுவடு


கொஞ்சமாய்

நிறைந்திருக்கும்

மளிகைகளின் பாத்திர

வயிறுகள் பசியில்

கூச்சலிடுகின்றன


விட்டெறிதலில்

சங்கதி சொல்லும்

வாயுருளை

வற்றிய கிணறென மாறியிருக்கிறது


பாலிசியின் முனைமம்

கைப்பேசியின்

வழியே தேம்பித் தேம்பி

உண்டியலேந்துகிறது


மாத இறுதியில்

காலியாகியிருக்கும்

ஓர் இரவின்

கடைசி முனையினை

விடியலாக்க

அவசரப்படுகின்றன

இன்னுமின்னும்

என்கிற இஎம்ஐகளின்

கொக்கரிப்புகள்!

- ரகுநாத் வ

உறவாகு பெயர்

‘ஏம்பா’, ‘டேய்’,

‘பையா’, ‘சர்வர்’ என ஆளாளுக்கு

அலைக்கழிப்பவர்

மத்தியில்

யாரேனும்

‘தம்பி’ என அழைத்தால்

தன்னையுமறியாமல்

போய் நிற்கிறான்

அந்த ஆதரவற்றச்

சிறுவன்

உறவுச்சுவையில்

தன் பசியாற!

-கோவை நா.கி.பிரசாத்

இறுதிப் பிரயாணம்


பயிர்களுக்கு நாள் முழுக்க

ஏற்றத் தண்ணி

இறைத்துக் கொடுத்த கணங்கள்

பட்டிவீரன்பட்டி கோயில் திருவிழா

மாட்டு வண்டி

பந்தயத்தில் முதல் பரிசு வாங்கியபோது

நெற்றியைத் தடவி எஜமான் தந்த முத்தம்

செம்மண் புழுதி பறக்கும்

சாலையில் நெற்கதிர் கட்டுகளை

கழுத்து சலங்கையொலிக்க

சுமந்து சென்ற பொழுதுகள்

என

இனிய நினைவுகளை

மனதில் அசைபோட்டபடியே

சென்றுகொண்டிருந்தது

விவசாயம் மரிக்கப்பட்டதால்

அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்டு

அண்டை மாநிலத்திற்குப்

பயணமாகும் அந்தச் செவலைக் காளை.

- வெ.தமிழ்க்கனல்

பக்தனாகும் கடவுள்

பக்தர்களின் தேவைகளைக் கேட்டபடி

சோர்ந்து அமர்ந்திருக்கும் கடவுள்

தனக்கு முன் வந்தமரும்

குழந்தையைப் பார்த்ததும்

உற்சாகம் கொள்கிறார்.

சம்மணம் போட்டு அமர்ந்து

விரல்களில் மழலை முத்திரை வைத்து

மூடும் அவள் இமைகளை

பிரமிப்புடன் பார்க்கிறார்

மூடிய அவள் கண்களுக்குள்

இருக்கும் தீட்சண்யத்தைப் பார்த்து

அசந்துபோகிறார்

தன் அருள் முழுவதும்

அவள் பக்கம் நகர்வது கண்டு

ஒருகணம் பதறிப்போகிறார்

அவள் மெல்ல கண் விழித்து

கண்களில் ஒற்றிக்கொள்ளும்

லாவகம் பார்த்துப் பரவசம் அடைகிறார்

பின் எழுந்து நடந்துபோகும்

தளிரின் திசை பார்த்து

யாரும் அறியாவண்ணம்

கை எடுத்துக் கும்பிடுகிறார்.

- கி.ரவிக்குமார்

கடவுளின் சமிக்ஞை

‘உண்டியலில்

கொட்டுவதை நிறுத்து!'

என்றோ

'ஏதேதோ கேட்டு

யாசிப்பதை நிறுத்து!'

என்றோ

'காலில் விழுவதை நிறுத்து!'

'விதிக்கப்பட்ட வழியில்

பொறுமையுடன் கட!'

என்றோ

'அழுவதை நிறுத்து!'

என்றோ

உணர்த்துவதாகவும்

இருக்கலாம்.

சற்று நிதானியுங்கள்

கடவுள் ஆசியும் வரமும்

வழங்குவதற்காக மட்டும்

உங்களை நோக்கி

உள்ளங்கையை

உயர்த்திப் பிடித்திருக்க

வாய்ப்பில்லை!

- வீ.விஷ்ணுகுமார்

பறவையாகும் சிறகு

பறவையின் உதிர்ந்த சிறகொன்று

ஓவியனின் கையில்

ஒரு தூரிகையாகிறது

குழந்தையின் புத்தகத்தில்

ஓர் அதிசயமாகிறது

காயம்பட்ட ஒருவனுக்கு

மருந்து தடவும் கரமாகிறது

ஒரு சுகவாசிக்கு

காதுகுடையும் களிப்பானாகிறது

தனிமையில் நடக்குமொருவனுக்கு

நினைவூட்டலாகிறது

யாருக்கும் அகப்படாமல்

காற்றோடு சேர்ந்து பறக்கத் தொடங்கும்

சிறகே

மறுபடியும் பறவையாகிறது.

-சௌவி

x