”சமூகநீதி அக்கறையே எங்களை காதலர்கள் ஆக்கியது!” - சமூகநீதி கண்காணிப்புக் குழு உறுப்பினர் டாக்டர் சாந்தி ரவீந்திரநாத்


மருத்துவர் ரவீந்திரநாத்துடன் மருத்துவர் சாந்தி ரவீந்திரநாத்

நாட்டிலேயே முதன்முறையாக சமூகநீதி கண்காணிப்புக் குழு தமிழகத்தில் அமைக்கப்பட்டிருப்பது, பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது. அதேநேரம் கல்வி, வேலைவாய்ப்பு, நியமனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் சமூகநீதி பின்பற்றப்படுகிறதா என்பதை சரிபார்க்கும் குழுவில், ஒரு பெண் உறுப்பினர்கூட இல்லாதது சமூகநீதியா என்ற விமர்சனமும் வலுத்தது.

மக்களின் குரலுக்கு உடனடியாக செவிமடுத்து மருத்துவர் சாந்தி ரவீந்திரநாத்தை, சமூக நீதிக் கண்காணிப்புக் குழு உறுப்பினராக நியமித்து முதல்வர் ஸ்டாலின் நேற்று முன்தினம் அறிவித்தார். இந்த முடிவு சமூக அக்கறை கொண்ட அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. நீட்டுக்கு எதிராக வலுவாகப் போராடிவருபவர்களில் மாநிலம் அறிந்த பெண் மருத்துவர் சாந்தி ரவீந்திரநாத். சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் மாநிலச் செயலராக முழுவீச்சில் செயலாற்றிவருபவர்.

’பள்ளிக் காலத்திலேயே உணர்ந்துவிட்டேன்!’

கும்பகோணத்தில் பிறந்தவர் மருத்துவர் சாந்தி. கணித மேதை ராமானுஜன் படித்த பெருமையும் பழமையும் வாய்ந்த அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழ்வழிக் கல்வி கற்றவர். 10-ம் வகுப்பில் பள்ளி முதல் மாணவியாக வந்தவர். தஞ்சை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்துவிட்டு, சென்னை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராக 22 ஆண்டுகள் பணிபுரிந்தவர். சமூகப் பணியில் முழுநேரம் ஈடுபடவே விருப்ப ஓய்வு பெற்றவர். பேச்சுலர் ஆஃப் ஜெனரல் லா முடித்தவர். சட்டரீதியான படிப்புகளை தற்போதும் படித்து வருபவர்.

பொதுச்சமூகத்தில் மட்டுமல்ல தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் சமூகநீதியைப் பின்பற்றி வரும் மருத்துவர் சாந்தியுடன், இத்தருணத்தில் உரையாடினோம். தனது பள்ளி நாட்களிலேயே சாதிய பாகுபாடும் பெண் அடிமைத்தனமும் இந்தியச் சமூகத்தில் வேரூன்றியிருப்பதை உணரத் தொடங்கிய தருணங்களை நினைவுகூர்ந்தார்.

”நான் படித்த பள்ளியிலேயே இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிறப்பிப்பதற்கு முன்னால் மாணவர்கள் மத்தியிலும் சாதிய அடக்குமுறை எவ்வளவு கொடூரமாக கடைபிடிக்கப்பட்டது என்பதை என்னுடைய வரலாற்று ஆசிரியர் விளக்கியுள்ளார். ஒடுக்கப்பட்ட சாதி குழந்தைகள் அங்கு பொதுவில் நீர் அருந்த அனுமதிக்கப்படவில்லை என்பதையும் பிற சாதி குழந்தைகள் அவர்களுக்குத் தென்னம்பாளையில் நீர் கொடுத்த கொடுமையான சம்பவங்களையும் விவரித்துள்ளார். இது என் மனத்தில் ஆழப்பதிந்துவிட்டது. அதேபோல நான் வளர்ந்த சூழ்நிலையிலும் பெண் குழந்தைகள் மருத்துவம் போன்ற தொழிற்கல்வி படிப்பது வீண் செலவு எனவும் அதற்கேற்ற மாப்பிள்ளை தேடுதல் சிக்கல் என்றுதான் பார்க்கப்பட்டது. இவற்றைக் கடந்து வளர்ந்து வந்ததால் நாம் உயர்ந்த நிலை அடைந்தால், நம்மால் முடிந்த அளவு அமைப்புசாரா தொழிலாளர்கள் உள்ளிட்ட குரலற்றவர்களுக்கான குரலாக ஒலிக்க வேண்டுமெனத் தீர்மானித்தேன்” என்றார்.

மகளிர் 40% நடைமுறைப்படுத்துவோம்!

பாலின சமத்துவம், நிதிச் சுதந்திரம், சம உரிமை ஆகியவற்றுக்கு பெண்கள் பொருளாதார தன்னிறைவு அடைதல் முக்கியமானது. அந்த வகையில் பெண்களை அதிகாரப்படுத்தும் முனைப்பில் அரசுப் பணிகளில் 30 சதவீதமாக இருந்த மகளிர் இட ஒதுக்கீட்டை, 40 சதவீதமாக உயர்த்தி திமுக அரசு தனது தேர்தல் வாக்குறுதியை காப்பாற்றியுள்ளது. இத்தகைய அறிவிப்பை நிஜமாக்கும் பொறுப்பு மருத்துவர் சாந்தி ரவீந்திரநாத் இடம்பெற்றுள்ள குழுவுக்கு கொடுப்பட்டுள்ளது நிச்சயமாக நம்பிக்கை அளிக்கும் செய்தியாகும்.

இதுதவிர, பள்ளிகள், மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை, கல்விக் கட்டணம் வசூலித்தல், உதவித்தொகை வழங்குதல் ஆகியவற்றில் இடஒதுக்கீடு சட்டத்தைக் கடைபிடிப்பதில் நிலவும் சிக்கல்களைக் களையும் பொறுப்பையும் சாந்தி ஏற்றிருக்கிறார். அதேபோல, எல்லாவிதமான வேலை நியமனங்களிலும் அது தற்காலிக பணியானாலும் நிரந்தரப் பணியானாலும் இட ஒதுக்கீட்டுக் கொள்கை சார்ந்த பிரச்சினைகள் பல இருக்கவே செய்கின்றன. ரோஸ்ட்டர் முறையை நிலைநாட்டுவதில் சறுக்கல்கள் உள்ளன. இவற்றையெல்லாம் மகளிருக்காக மட்டுமல்லாது சமூக அடுக்கில் நீதி சென்றடைய வேண்டிய அனைவருக்காகவும் செயல்படுத்த உறுதி கொண்டிருக்கிறார் சாந்தி.

’சாதி மறுப்பு திருமணங்களை செய்துவைத்திருக்கிறோம்!’

அமைப்பாக இயங்குவதன் பலத்தை பறைசாற்றும் பொதுவுடமை கொள்கை மீது பிடிப்பு கொண்டவர் சாந்தி என்பது, அவரது ஒவ்வொரு சொல்லிலும் பிரதிபலிக்கிறது. செல்வாக்கும் உயரிய சமூக அந்தஸ்தும்கூடிய மருத்துவ தொழிலைச் செய்தபோதும், மக்கள் பிரச்சினைகளை நோக்கி எது அழைத்து வந்தது என்பது குறித்து பேசுகையில், “தஞ்சை மருத்துவக் கல்லூரி மாணவியாக சங்கப் போராட்டத்தில் ஈடுப்பட்ட தருணத்தில்தான் எனக்கும் மருத்துவர் ரவீந்திரநாத்துக்குமான முதல் சந்திப்பு நிகழ்ந்தது. சமூகநீதி குறித்த அக்கறைதான் எங்களைக் காதலர்களாக மாற்றியது. சாதி மறுப்புத் திருமணமும் செய்துகொண்டோம்.

என்னுடைய மாமனார்-மாமியார் முதல் எங்களுடைய மகன்வரை சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்கள்தான். நாங்கள் தலைமை பொறுப்பேற்றிருக்கும் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்திலும் பல சாதி மறுப்பு திருமணங்களை முன்னின்று நடத்தியுள்ளோம். சாதியற்ற சமூகத்தை ஏற்படுத்தும் முனைப்பில் வருடாவருடம் காதலர் தினத்தன்று கருத்தரங்குகள் நடத்திவருகிறோம். 2003-ல் எனது கணவர் இந்தச் சங்கத்தை உருவாக்கியதே, மருத்துவர்களின் பிரச்சினைகளை மட்டும் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கல்ல. இந்த அமைப்பில் மருத்துவர்கள் மட்டுமே உறுப்பினர்களாக இருந்தாலும் பொதுச் சுகாதாரம், மருத்துவ கல்வி, பொதுவாகக் கல்விச்சூழலில் நிலவுகின்ற சமூகநீதி பிரச்சினைகளுக்குக் குரல் கொடுத்து வந்திருக்கிறோம்.

கல்விச்சூழலில் சமூகநீதியை நிலைநாட்ட மாநாடுகள் ஏற்பாடு செய்வது, சட்டரீதியாக வழக்குத் தொடுப்பது, போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுப்பது ஆகியவற்றைச் செய்துள்ளோம்.

2006-ல் இட ஒதுக்கீட்டுக்கான போராட்டக்குழுவை உருவாக்கி அதில் அனைத்து கட்சியினரை ஒருங்கிணைத்தோம். பல அமைப்புகளுடன் கைகோத்து, மத்திய அரசு உயர்கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுகீட்டை அமல்படுத்த மாபெரும் பேரணி, மனிதச் சங்கிலியை முன்னெடுத்தோம். ஒன்றுகூடியதால் அதில் வெற்றியும் கண்டோம். அகில இந்திய ஒதுக்கீட்டிலும் சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு இல்லாமல் இருந்தது. 2007-ல் பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகே எஸ்.சி - எஸ்.டி.கான இட ஒதுக்கீடு அதில் அமலானது. இருப்பினும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுகீட்டு சிக்கல் அதில் இன்னமும் தீரவில்லை.

இதுதவிர, கல்விச்சூழலில் சமூகநீதியை நிலைநாட்ட மாநாடுகள் ஏற்பாடு செய்வது, சட்டரீதியாக வழக்குத் தொடுப்பது, போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுப்பது ஆகியவற்றைச் செய்துள்ளோம். அகில இந்திய முற்போக்கு பேரவையின் உறுப்பினராக 2019-ல் சமூகநீதிக்கான 3 நாள் பயிலரங்கத்தை நடத்தினோம். ஏஐடியூசி தொழிற்சங்கத்தின் முக்கிய உறுப்பினராக அனைத்திந்திய உழைக்கும் பெண்களுக்கான மாநாடு நடத்தியுள்ளோம். இந்த அடிப்படையில் சமூகநீதி கண்காணிப்புக் குழுவுக்கு என்னை முதல்வர் ஸ்டாலின் தேர்வு செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, இத்தகைய குழு அமைக்கப்பட வேண்டிய தேவை இருப்பதையும் சரியான நேரத்தில் உணர்ந்து செயலாற்ற சமூகநீதி குறித்த அக்கறை கொண்ட முதல்வரால் மட்டுமே முடியும். இதில் எனக்கு ஒரு வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ஏற்றுக்கொண்ட பணியை சிறப்பாகச் செய்யும் முனைப்பில் இருக்கிறேன்” என்றார் சாந்தி.

செய்ய வேண்டியவை!

இட ஒதுக்கீடு உள்ளிட்ட சட்டரீதியாக உறுதிசெய்யப்பட்டுள்ள சமூகநீதி உரிய மக்களைச் சென்றடைகிறதா என்பதை கண்காணித்து வழிநடத்தும் பொறுப்பு, சாந்தி உட்பட சமூகநீதி கண்காணிப்பு குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக, பெண் பாதுகாப்பு சார்ந்து ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களை முழுமையாக நிலைநாட்டும் நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டும். உதாரணத்துக்கு, பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல், குடும்ப வன்முறைகள் வழக்கத்தைவிட கரோனா காலத்தில் பல மடங்கு அதிகரித்துவிட்டதை செய்திகள் அம்பலப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. அவற்றை தடுக்க ‘காவலன் செயலி’ வழி புகார் அளித்தல் போன்ற பாதுகாப்பு வசதிகளைத் தமிழக அரசு செய்திருக்கிறது. ஆனாலும் இன்னமும் இந்தத் தகவல் பலருக்குத் தெரியாமல் இருக்கிறது. இதுபோக ராஜஸ்தான் உள்ளிட்ட வேறு சில மாநிலங்களில் பெண்களுக்கென தனிப்பட்ட கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளன. அவ்வாறே தமிழகத்தில் புதிய கொள்கைகள் விரைவில் வகுப்பப்பட வேண்டும்.

சமூக ஏற்றத்தாழ்வுகளை, பாலின பாகுபாடுகளைக் களையச் சட்டம் இயற்றப்படுவது எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு அதை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டமும் சரியான மனிதர்களும் வேண்டும். இதை உணர்ந்தே, மருத்துவர் சாந்தி ரவீந்திரநாத் போன்றோரைத் தமிழக அரசு நியமித்திருப்பது சிறப்பான நகர்வு.

x