குழந்தை வேண்டுமா என்பதை காதலும் தம்பதிகளும் தீர்மானிக்கட்டும்: 41 வயதிலும் பெறலாம்!


சேலத்திலிருந்து, ஆராய்ச்சிப் படிப்புக்காக தைவானின் ’எலெக்ட்ரானிக் சிட்டி’ என்றழைக்கப்படும் தைபேய் நகரில் வசித்துவரும் தோழியிடம் அலைபேசி வழி பேசிக்கொண்டிருந்தேன். 30 வயதைக் கடந்தவரின் காதல், இணைந்துவாழ்தல், குழந்தைப்பேறு, திருமணம் பற்றி பேச்சு நீண்டது.

மணம் முடித்த தம்பதிகள் மனத்தால் இணையும் முன்பே, உடலால் இணைய நிர்பந்திக்கும் ’முதல் இரவு’ பரிதாபங்கள் தமிழ்ச்சமூகத்தில் இருந்து மெல்ல வழக்கொழிந்திருக்கிறது...(!?)... தாம்பத்தியம் என்பது எத்தனை அந்தரங்கமானதோ, அதே அளவுக்கு அதன் ‘by product’ கொஞ்சமும் அந்தரங்கம் அற்ற விஷயமாக இங்கு அணுகப்படுகிறது.

சரியான வரிசையில்தான் எழுதியுள்ளேன். காதல் ---> இணைந்துவாழ்தல் -----> குழந்தைப்பேறு ----> திருமணம் என்பதே அந்நாட்டு வழக்கமாக உள்ளது. இதற்குப் பொருள், குழந்தை பெற்றுக் கொண்ட பிறகு திருமணம் செய்து கொள்கிறார்கள் என்பதல்ல. குழந்தை பெற்றுக் கொள்வது என்று முடிவெடுத்த காதலர்கள் திருமணப் பந்தத்துக்குள் அடியெடுத்து வைக்கிறார்கள். ஏனென்றால் குழந்தை வளர்ப்பு உள்ளிட்ட குடும்பப் பொறுப்புகளை கணவனும் மனைவியும் சமமாக பகிர்ந்து கொள்ளுதல் என்ற பண்பாடு அங்கு பின்பற்றப்பட்டு வருகிறது. அதிலும் ஆண், பெண் இவருமே 35 வயதுக்கு மேல்தான் மணம் முடிப்பது, அங்கு சகஜமாக இருப்பதாகவும் தோழி சொல்லிக் கொண்டிருந்தார். அதற்கும் இந்தியச் சமூகத்தில் கடைப்பிடிக்கப்படும் திருமணம் ஆனதும் குழந்தை பெறுதல் என்ற திட்டத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சொல்லப்போனால் இரண்டும் எதிர் எதிர் துருவங்கள்.

மணம் முடித்த தம்பதிகள் மனதால் இணையும் முன்பே, உடலால் இணைய நிர்பந்திக்கும் ’முதல் இரவு’ பரிதாபங்கள் தமிழ்ச்சமூகத்தில் இருந்து மெல்ல வழக்கொழிந்திருக்கிறது...(!?) ஆனாலும் பெண்ணும் ஆணும் மணம் முடிப்பதை, உடனடியாக குழந்தைபேறோடுதான் இன்றும் நம் சமூகம் பொருத்திப் பார்த்துக் கொண்டிருக்கிறது. இதனால், கல்யாணமான தம்பதிகளிடம் அடுத்த 3 மாதத்திலிருந்து ‘விசேஷம் உண்டா?’ என்ற கேள்வியைத் தெரிந்தவர் தெரியாதவர்களெல்லாம் கேட்கத் தொடங்கிவிடுகிறார்கள்.

தாம்பத்தியம் என்பது எத்தனை அந்தரங்கமானதோ அதே அளவுக்கு, அதன் ‘by product’ கொஞ்சமும் அந்தரங்கம் அற்ற விஷயமாக இங்கு அணுகப்படுகிறது. இது குடும்ப அமைப்புக்குள் நுழையும் இருவர் மீதும் கடுமையான அழுத்தத்தைச் செலுத்துகிறது. இதனால், ஓராண்டுக்கு மேல் கருத்தரிக்க முடியாதுபோனாலே பதற்றம் கொண்டு ஐவிஃப் சிகிச்சை மேற்கொள்வதா அல்லது வேறென்ன செய்தால் ‘குழந்தை வரப்பிரசாதம்’ கிட்டும் என்று தம்பதிகள் அலைக்கழிகிறார்கள். குடும்பத்துக்குள்ளும் சண்டை சச்சரவுகள் அதிகரிக்கின்றன. இதை ஆதாயமாக வைத்து, குழந்தையின்மை சிகிச்சை மருத்துவமனைகள் பெருகி வரும் விவகாரம் வேறு! அதை இப்போது பேச வரவில்லை.

இதுபோக, ஆரோக்கியமான சந்ததியை உருவாக்கப் பெண் குறிப்பிட்ட வயது வரம்புக்குள் குழந்தை பெற்றாக வேண்டும் என்று நம்பவும் வலியுறுத்தவும்படுகிறது. இதில் மருத்துவரீதியான அறிவியல் உண்மை இருப்பினும் அதை, சரியாக அறிந்துவைத்திருக்கிறோமா என்பதே கேள்வி. இந்நிலையில், நெதர்லாந்து நாட்டின் எராஸ்மஸ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ மையமானது ஆராய்ச்சி நடத்தியுள்ளது. குழந்தை பெறத் திட்டமிடுபவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவற்றை ஆய்வுப்பூர்வமாக இது சுட்டிக்காட்டுகிறது.

ஒரே ஒரு குழந்தை போதும். அதுவும் கட்டாயமல்ல என்று நினைப்பீர்களேயானால், 41 வயதிலிருந்து குழந்தை பெற முயன்றால் போதும்.

குழந்தை பிரசவிப்பதற்கு உகந்த வயது, எத்தனை குழந்தைகள் பெற்றுக்கொள்ள விருப்பம் உள்ளதோ அதற்கான வயது வரம்பு ஆகியவை விளக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இயற்கையாகக் கருத்தரிக்க முடியாத நிலையில் தம்பதியின் கருமுட்டையையும், விந்தணுவையும் உடலுக்கு வெளியே எடுத்து இணைத்துக் கருவுறச் செய்யும் ஐவிஎஃப் வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்த விரிவான விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது. நெதர்லாந்து என்பதால் 3 குழந்தைகள்வரை பெற்றுக் கொள்ளுதல் குறித்த ஆராய்ச்சியாக அது நடத்தப்பட்டுள்ளது. 10 ஆயிரம் தம்பதிகளின் மீது நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில், இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் குறிப்பிடப்பட்டிருப்பவை பெண்ணின் வயதே.

3 குழந்தைகளைப் பெற்றெடுத்து வளர்க்கத் திட்டமிடும் தம்பதிகள் மட்டும் 23 வயதிலிருந்து முயன்றால் போதுமானது.

இந்த ஆய்வின் முடிவுகள் இதோ:

ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு!

ஒரே ஒரு குழந்தை போதும். அதுவும் கட்டாயமல்ல என்று நினைப்பீர்களேயானால், 41 வயதிலிருந்து குழந்தை பெற முயன்றால் போதும். இதன்மூலம் 50 சதவீதம் கருவுறுதல் சாத்தியம்.

கட்டாயம் குழந்தைச் செல்வம் வேண்டும் என்று ஆசைப்படும் தம்பதிகள், 37 வயதிலிருந்து தொடங்கினால் 75 சதவீதம் குழந்தை பிறக்கும். 32 வயதிலிருந்து முயன்றால் 90 சதவீதம் கர்ப்பம் தரிப்பது நிச்சயம்.

ஒரு வேளை இயற்கையாக கருத்தரிக்க முடியாதெனில் ஐவிஎஃப் சிகிச்சைக்குச் செல்லலாம். அதற்கும் பதற்றமடைய வேண்டியதில்லை. ஐவிஎஃப் சிகிச்சை எடுத்துக்கொள்ள முடிவெடுத்துவிட்டால், 35 வயதில் முயன்றால் 100 சதவீதம் குழந்தைப்பேறு சாத்தியம். 39 வயதை எட்டியவர்களுக்கு 75 சதவீதமும் 42 வயதானால் 50 சதவீதமும் வாய்ப்புள்ளது.

நாம் இருவர் நமக்கு இருவர்!

2 குழந்தைகள் வேண்டுமென முடிவெடுக்கும் தம்பதிகள், இயற்கையாக குழந்தை பெற 27 வயதிலிருந்து முயலலாம். இதில் 90 சதவீதம் பலனுண்டு. 34-லிருந்து தொடங்கினால் 75 சதவீதமும் 38 தொடங்கினால் 50 சதவீதமும் வெற்றி நிச்சயம்.

ஐவிஎஃப் சிகிச்சையெனில், 31 வயதிலிருந்து முயன்றால் 90 சதவீதம், 35 எனில் 75 சதவீதம், 39 எனில் 50 சதவீதம் கருத்தரிப்பது உத்தரவாதம்.

மூன்று முத்துகள்!

3 குழந்தைகளைப் பெற்றெடுத்து வளர்க்கத் திட்டமிடும் தம்பதிகள் மட்டும், 23 வயதிலிருந்து முயன்றால் போதுமானது. இதில் 90 சதவீதம் வாய்ப்புள்ளது. இதில் ஐவிஎஃப் சிகிச்சையைப் பின்பற்றும் தம்பதிகள் எனில், 28 வயதானால் 90 சதவீதமும் 33 வயதானால் 50 சதவீதமும் 36-ஆகும் பட்சத்தில் 50 சதவீதம் 3 முத்துகளைக் கண்டெடுக்கத் தொடங்கலாம்.

இவை எல்லாவற்றையும்விட குழந்தை வேண்டுமா என்பதைக் காதலும் தம்பதிகளும் தீர்மானிக்கட்டும்.

x