என்னடா இது கவிஞனுக்கு வந்த சோதனை...


ஸ்ரீரசாவும் அவரது சில படைப்புகளும்

ஓவியர், சிற்பக் கலைஞர், கவிஞர், திரைப்பட ஆய்வாளர் என பன்முகங்கள் கொண்டவர் ஸ்ரீரசா. 'சாதி லிங்கம்', 'கரித்துண்டுகள் ஒளிருங் காலம்’ உள்ளிட்ட கவிதை தொகுப்புகளையும் 'அரசியல் சினிமா' உள்ளிட்ட நூல்களையும் எழுதியவர். செம்மலர் இலக்கிய இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர். யதார்த்தா ராஜன் இயக்கிய கல்வி ஆவணப்படங்கள் உட்பட கிட்டத்தட்ட 260 படங்களுக்கான படத் தொகுப்பாளர்.

இவர் படைத்த ’இறுகப்பற்று’ உள்ளிட்ட கவிதைகள் பட்டப்படிப்பு மாணவர்களுக்குப் பாடத்திடமாக பரிந்துரைக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த சேதி பல ஆண்டுகள் கழித்து தற்செயலாகவே தனக்கு தெரியவந்தது குறித்து, ஸ்ரீரசா தனது முகநூல் பக்கத்தில் எழுதிய பதிவு இது:

சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட அதே விநோத அனுபவம் இன்றும்.

இன்று ஒரு நிகழ்வில் இருக்கும்போது செல்பேசி ஊமைத்தன்மையில் இருந்தது. ஆனால், பையிலிருந்து அதிர்ந்தது. எடுத்துப் பார்த்தேன், வெறும் எண் மட்டும் இருந்தது. பெயர் இல்லை. செல்பேசியை எடுத்துப் பேச முடியவில்லை. அதிர்வு அமர்ந்தது. பின்னர் மீண்டும் அதிர்ந்தது. அதே எண். இப்போதும் எடுக்கவில்லை. அப்புறம் நிகழ்வு முடிந்து இன்னொரு நிகழ்வில் கலந்து கொள்ளப்போகும் முன்னான இடைவெளியில் அந்த எண்ணை அழைத்தேன்.

ஒரு பெண் குரல். ”சார்! உங்க எண்ணை இன்னார் கொடுத்தார்கள். நான் பாத்திமா கல்லூரி மாணவி. உங்களைப் பற்றிய விவரம் பயோடேட்டா வேணும்” என்றார். ”எதுக்கும்மா?” என்றேன். “சார் உங்க கவிதையை எங்களுக்குப் பாடமா வச்சிருக்காங்க. கவிஞரைப் பற்றிய குறிப்பு தேடச் சொன்னாங்க. எனக்குக் கிடைக்கவில்லை. அப்புறம் ஒரு மேடம் தான் உங்க எண்ணைக் கொடுத்தார்கள்” என்றார்.

அடக் கொடுமையே! ‘என்னடா இது கவிஞனுக்கு வந்த சோதனை’ என நினைத்து, ”அது என்ன கவிதையம்மா? அதை அனுப்பி வைங்க” என்றேன்.

இது போலத்தான் சில ஆண்டுகளுக்கும் முன்பு, இங்கே எங்கள் பகுதியில் முடி திருத்தகம் வைத்திருந்த தோழர் சண்முகம் திடீரென்று பேசியில் அழைத்தார். அவரது மகள் அப்போது எங்கள் வீட்டின் அருகில் உள்ள டோக் பெருமாட்டி கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்று கொண்டிருந்தார். அவர் பேச வேண்டுமாம் எனச் சொல்லி பேசியை அவரது மகள் கையில் கொடுத்தார்.

”தோழர் உங்க கவிதையை எங்களுக்குப் பாடமா வச்சிருக்காங்க. உங்களைப் பற்றிய விவரங்கள் கிடைக்காமல் தேட விட்டுவிட்டுட்டாங்க. நான் இவரை எனக்குத் தெரியும், எங்கள் அப்பாவின் நண்பர் என்று சொன்னவுடன், அவர்கள் மகிழ்ந்தனர்” என்றார்.

அப்புறம் சில தினங்கள் கழித்து, அவர்களது தமிழ்த் துறையில் ஆண்டு இறுதியில் மாணவியருக்குச் சிறப்புரை ஆற்ற என்னை அழைத்தனர். நான் அப்போது அவர்கள் துறைக்குச் சென்று அங்கிருந்த துறைத்தலைவர் அம்மாவிடம், அவர்கள் பாடமாக வைத்திருந்த கவிதை எவ்வாறு அவர்களுக்குக் கிடைத்தது எனக் கேட்டேன். அவர்கள், ”பேரா. பி. விஜயகுமார் மகள் திருமணத்தின்போது, ’பரிவானது வீடு’ என்ற இலக்கியத் தொகுப்பு கிடைத்தது. அதிலிருந்து எடுத்தேன்” என்றார்.

அந்தத் தொகுப்பின் கதைகளை பேரா.ச.மாடசாமி தொகுத்துத் தந்தார். கவிதைகளை நான் தொகுத்தேன். வடிவமைப்பும் நான் செய்தேன். அந்தக் கவிதையை எத்தனை ஆண்டுகள் பாடமாக வைத்திருக்கிறார்கள் என விசாரித்தபோது, 8 ஆண்டுகளுக்கும் மேல் என்றார். எனக்கோ அதிர்ச்சி! ”இந்தா நம்ம வீட்டுப் பக்கம் இருக்குற கல்லூரியில நம்ம கவிதையை 8 வருசமா மாணவியர் பாடமாப் படிக்கிறாங்க. நமக்குத்தான் ஒரு சொட்டுச் செய்தி தெரியவில்லையே” என்று நினைத்துக் கொண்டேன்.

அப்புறம் அவர்களிடம் இவ்வாறு பேசினேன்...ஒரு கவி, ஒரு இலக்கியம் என்ன செய்யும்? இலக்கியம் தான் படிக்கிறோம் என்று தாழ்வு மனப்பான்மை எவருக்கும் வேண்டாம். நான் ஏதோ ஓர் சூழலில் எழுதிய ஏதோ சில வார்த்தைகள், எங்கெங்கோ பயணப்பட்டு அவை உங்களை வந்தடைந்துள்ளன. அவைகளைத் தொடர்ந்து நான் உங்கள் முன்னால் நிற்கிறேன்... இந்த உலகம், நாகரிக உலகம் வார்த்தைகளாலாகியது... ஒரு வார்த்தை வெல்லும் ஒரு வார்த்தை கொல்லும்... வார்த்தைகளால் தான் தலைவர்கள் மாபெரும் இயக்கங்களை வடிவமைத்தார்கள்... இராணுவம், சட்டம், போலீஸ், அரசு, கல்வி என அனைத்துமே வார்த்தைகளால் ஆகியவைதான்.... என்று இவ்வாறாகத் தொடரும் வார்த்தைகளின் புராணத்தை அவர்களின் முன்னால் அவிழ்த்து வைத்தேன்....

ஒரு விநோத மனநிலை அன்று வாய்த்தது.

அஃது இன்றைக்கும் அவ்வாறாவே வாய்த்தது.

என்னடா இது கவிஞனுக்கு வந்த சோதனை!

கவிஞனுக்கு சொல்லாமல் பாடமான கவிதைகள்!

மதுரையில் உள்ள டோக் பெருமாட்டி கல்லூரியில் பல ஆண்டுகள் பாடமாக இருந்த கவிஞர் ஸ்ரீரசாவின் கவிதை.

’இறுகப்பற்று'

கைகளைப்

பற்றிக் கொள்

எவருடையதேனும்

யாருடையதேனும்

ஏதேனும்

ஒரு மனிதர்

போலிருக்க முயலும்

மனிதரின் கைகளைப்

பற்றிக் கொள்

பயந்து நடுங்கும்

உலகப் பரப்பில்

கொஞ்சம்

தெம்பு கிடைக்கலாம்

இரண்டு கைகளின்

சூடுகளும் சமனப்பட்டு

உலகச் சூடு

சற்றுத் தணியலாம்

பாலை மனத்தின்

ஓரத்திலொரு

பசிய தளிர்

முகங்காட்ட

முயற்சிக்கலாம்

முந்தாநேற்றின் கையை

நேற்றும்,

நேற்றின் கையை

இன்றும்,

இன்றின் கையை

நாளையும் பற்றி

பேரக் குழந்தைகளின்

கால் வண்டி

உருளலாம்

கைகளைப்

பற்றிக் கொள்

கொள்ளை ஆயுத

நகங்களோடு நீளும்

ஆதிபத்தியக்

கைகளை அல்ல

சூலாயுதம்,

குண்டுகளோடு நீளும்

மதவெறிக்

கைகளை அல்ல

மனங்கோணி

அரிவாள்களோடு நீளும்

சாதிவெறிக்

கைகளை அல்ல

பால்பேத

வெறியோடு நீளும்

பாதகக் கைகளை அல்ல

ஏதாகிலும்

ஒரு மனிதர்

போலிருக்க முயலும்

மனிதரின் கைகளை

இறுக்கமாக

இன்னும்

இன்னும்

எவ்வளவு முடியுமோ

அவ்வளவு இறுக்கமாக!

• ஸ்ரீரசா

மதுரையில் உள்ள பாத்திமா கல்லூரியில் பாடமாக வைக்கப்பட்டிருப்பதாக மாணவி சொன்ன கவிதை.

மரம் அழகியது

மரத்தைப் பற்றிய

கவிதையை விட.

• ஸ்ரீரசா

பொதுவுடைமை ஆக்கப்படாத படைப்புகளை படைப்பாளரின் ஒப்புதல் பெறாமல் கல்விக்கூடங்கள் பயன்படுத்தலாமா என்கிற விவாதத்தையும் கவிஞர் ஸ்ரீரசாவின் பதிவு கிளப்பியுள்ளது. மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத் துறை மாணவர்களுக்குக் கற்பிக்கப்பட்டு வந்த, அருந்ததி ராய் எழுதிய, ‘Walking with the Comrade’ புத்தகம் திடீரென நீக்கப்பட்டது கடந்த ஆண்டு சர்ச்சையானது. அப்போது, தனக்கு தெரிவிக்காமலே தனது புத்தகத்தைப் பல்கலைக்கழகம் கற்பித்துவந்ததைச் சுட்டிக்காட்டினார் எழுத்தாளர் அருந்ததி ராய்.

x