பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் ’பீரியட் லீவ்’


ஸ்விக்கி பெண் ஊழியர்கள் - மாதிரி படம்

ஸ்விக்கி நிறுவனம் தனது உணவு விநியோக பெண் பணியாளர்களின் மாதாந்திர தேவைக்காக, ’பீரியட் லீவ்’ என்ற சிறப்பு விடுப்பை அறிவித்துள்ளது. அதன்படி, ஸ்விக்கி பெண் ஊழியர்களுக்கு மாதத்துக்கு 2 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு கிடைக்கும்.

மகளிருக்கான மகப்பேறு விடுப்பு வரிசையில், மாதந்தோரும் விலக்காகும் தினங்களில் விடுப்பு அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக தொடர்ந்து கோரப்பட்டு வருகிறது. மகளிரின் ஆரோக்கியம், சுகாதாரம், ஓய்வு ஆகியவற்றை முன்னிறுத்தி இந்த கோரிக்கை எழுப்பப்படுகிறது. ஒருசில தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் சார்பில் நடைமுறையில் உள்ள இந்த விடுப்புக்கு ஆதரவாகவும், எதிராகவும் விவாதங்களும் தொடர்ந்து வருகின்றன.

ஸ்விக்கி நிறுவனம் அறிவித்துள்ள 2 நாள் விடுப்பு என்பது, எந்த குறுக்குக் கேள்வியும் இன்றி வழங்கப்படும் விடுமுறை என்று தெரிவித்துள்ளது. மேலும் இந்த விடுப்பு உரிமை, பெண் ஊழியர்களின் தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது எனவும் அறிவித்துள்ளது. இந்த அனுகூலம் மூலம் கூடுதலாகப் பெண்கள் ஸ்விக்கியில் இணைந்து பணியாற்றுவர்கள் என்றும் வாடிக்கையாளர்கள் மத்தியில் நற்பெயர் கிடைக்கும் என்றும் அந்த நிறுவனம் நம்புகிறது.

தற்போதைக்கு அந்த நிறுவனத்தில் சுமார் 900 பெண் ஊழியர்கள், குறிப்பாக வட இந்திய நகரங்களில் பணியாற்றி வருகிறார்கள். பெண் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெண் உணவு விநியோக ஊழியர்களுக்கு வரவேற்பு அதிகரித்திருப்பதால், அவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இந்த அறிவிப்பு உதவும் என்றும் ஸ்விக்கி கருதுகிறது. பெண்கள் மட்டுமன்றி, மாற்று பாலினத்தவரும் இந்த மாதாந்திர விடுப்புக்கு அனுமதி பெறுகிறார்கள்.

பெண்களுக்கான மாதாந்திர விடுப்பு வழங்கும் ஸ்விக்கியின் அறிவிப்பை, அதன் போட்டி நிறுவனமான சொமேட்டோ ஒரு வருடம் முன்பே நடைமுறைக்கு கொண்டுவந்து விட்டது. அதன்படி, சொமேட்டா பெண் பணியாளர்கள் வருடத்துக்கு 10 நாட்கள் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம். பல்வேறு சிறிய நிறுவனங்களும் இந்த விடுப்பை ஏற்கெனவே செயல்படுத்தி வருகின்றன. பீகார் மாநிலத்தில், பெண் அரசு ஊழியர்களுக்கு மாதந்தோறும் 2 நாள் விடுப்பு அமலில் உள்ளது.

மகளிருக்கு இம்மாதிரி விடுப்பு வழங்கப்படுவது, பாலின சமத்துவத்துக்கு எதிரானது என ஆட்சேபம் தெரிவிப்போரும் உண்டு. சொமேட்டோ அறிவிப்பு வெளியானபோது பத்திரிகையாளர் பர்கா தத் போன்றவர்கள் சொமேட்டோவை சாடி இருந்தார்கள். ’போர் முனையில் செய்தி சேகரிக்கிறோம், ஜெட் விமானங்களை இயக்குகிறோம், விண்வெளியில் நடக்கிறோம். பாலின வேற்றுமையை விதைக்கும் உங்கள் சலுகை எங்களுக்குத் தேவையில்லை’ என அப்போது அவர் ஆட்சேபம் தெரிவித்திருந்தார்.

x