எல்லாரும் ஒரே க்ரூப்பா கெளம்பீட்டாங்க!


அம்மிணி மிரட்டுனாங்க. "நம்ம பூக்காரம்மா ரெண்டு நாளா வரவே இல்லை. சும்மா தானே மொபைலை நோண்டிக்கிட்டு இருக்கீங்க... கீழே போய் வேற பூக்காரம்மா யாராச்சும் வந்தா பூ வாங்கிட்டு வாங்க.”

ஒரு ஏழரை எனக்காகக் காத்துக்கிட்டிருக்குன்னு தெரியாம கீழே வந்தேன். அடுத்த ப்ளாக் அண்ணாச்சி கும்பிடு போட்டார்.

“நம்ம அபார்ட்மென்ட்ல மீட்டிங் போட்டு ரொம்ப நாளாச்சே”ன்னு கொக்கி போட்டார். “ஆமா. போடணும்”னு வாய் விட்டுட்டேன்.

“எல்லாரும் வாங்க. அவசரக் கூட்டம்”னு சவுண்டு விட்டார். ஏற்கெனவே சொல்லி வச்ச மாதிரி 20 பேர் இன்ஸ்டன்ட்டா கூடிட்டாங்க.

“எந்தத் தகவலுமே தெரிய மாட்டேங்குது”னு மொட்டையா ஒருத்தர் சொன்னார்.

அப்பாவியா கேட்டேன். “ஏன்... டிவி பேப்பர்லாம் பார்க்கிறதில்லியா?”

“நக்கலு. ஹ்ம்ம்... போன மாசம் டேங்க் க்ளீன் செஞ்சீங்க. தகவலே இல்லை. குளிக்கப் போனா தண்ணியே வரல.”

“நோட்டிஸ் போர்டுல போட்டுருந்தோமே. அதுவும் மதிய நேரம் தானே க்ளீன் செஞ்சோம்”னு சொன்னதும் இன்னும் எகிறுனாரு.

“நான் எப்ப வேணா குளிப்பேன். என் இஷ்டம்.”

ஒவ்வொருத்தரும் ஆளுக்கொரு புகார் சொன்னாங்க. வேற வழி தெரியாம சரண்டர் ஆயிட்டேன். “வேணா... நீங்க யாராச்சும் பொறுப்பு எடுத்துக்குங்க.”

“அதுக்காவ சொல்லல”ன்னு ஜகா வாங்குனாங்க. “இப்ப என்னதான் செய்ய”ன்னு கேட்டேன்.

“வாட்ஸ் அப் க்ரூப் ஆரம்பிங்க. நம்ம அபார்மென்ட்டுக்கு. தகவல்கள அதுல போட்டுருங்க.”

கையில் வச்சிருந்த போனைப் பார்த்த ஒருத்தர் இதைச் சொன்னாரு.

அவ்ளோதான். அடுத்த ஒரு மணி நேரத்துல டொய்ங் டொய்ங்னு என் போன் அலறிக்கிட்டே இருந்துச்சு. ஒவ்வொரு நம்பரா சேர்த்துகிட்டே வந்தேன்.

“மூணு நாளா ஒரு தபால் பொட்டியிலேயே கிடக்குது. சம்பந்தப்பட்டவர் அதை எடுக்கல”ன்னு ஒருத்தர் க்ரூப்ல முதல் மெசெஜ் போட்டாரு.

“யார் அவரு”னு கேட்டா இவரோட பக்கத்து வீடாம். “மெசெஜ் போட்டதுக்கு நேர்ல சொல்லிரலாமே”ன்னு கேட்டா, அவரு குடும்பத்தோட ஊருக்குப் போயிருக்காரு, அடுத்த வாரம்தான் வருவாராம். “இப்படி எதுவா இருந்தாலும் சொல்லலாம்னு தெரிஞ்சுக்க போட்டேன்”னு ஸ்மைலி போட்டாரு.

“இன்று எங்கள் வீட்டில் நிலக்கடலை சுண்டல்”னு அடுத்த மெசெஜ் வந்துச்சு. “கட்டாயம் வரோம்”னு அடுத்ததா ஒரு பதில் வந்துச்சு.

“இதைப் பார்த்ததும் 20 நபர்களுக்கு அனுப்பவும். ஒரு மணி நேரத்தில் அதிர்ஷ்டம் அடிக்கும். அனுப்பாவிட்டால் நஷ்டம் வரும்”னு ஒண்ணு வந்துச்சு. இது ஏதுரா தொல்லைன்னு பார்த்தா, அடுத்த பத்து நிமிஷத்துல அத்தனை பேரும் க்ரூப்லயே அனுப்பிட்டாங்க.

அம்மிணி எரிச்சலாயிட்டாங்க. “அதென்ன ஓயாம ஒங்க போன் அலறிக்கிட்டே இருக்கு”. விவரத்தைச் சொன்னதும் இன்னும் கடுப்பாயிட்டாங்க.

மகனார் சொன்னாரு. “ம்யூட்ல வைங்க. தொல்லை இருக்காது.” அம்மிணி மகனாரைப் பெருமையா பார்த்தாங்க. “நல்ல வேளை இவன் தன்னைப் போல பொறந்துட்டான்”னு.

ம்யூட்ல போட்டதுல, பாஸ் போன் செஞ்சது தெரியல. ஒரு மணி நேரங்கழிச்சு பார்த்தா பக்னு ஆயிருச்சு.

“ஒரு அவசரம்னா உங்களைப் பிடிக்க முடியல”னு அதிருப்தியைக் காட்டுனாரு.

ம்யூட்ல வச்சுட்டு போனையே உத்துப் பார்த்துக்கிட்டு இருந்தேன்.

‘காலை வணக்கம்’னு சாயங்காலம் வரைக்கும் வந்துக்கிட்டு இருந்துச்சு. ஒருத்தர் நேராவே வீட்டுக்கு வந்துட்டாரு.

“திடீர்னு எங்க வீட்டுல லைட் எரியல. எங்க வீட்டுக்கு மட்டும் சப்ளை இல்ல. மெசெஜ் போனுன்னு மாத்தி மாத்தி ட்ரை பண்ணா பதிலே காணோம்”னு கத்துனாரு.

20 பேருக்கு அனுப்புங்க அமளில அவரு மெசெஜ் கண்ணுலயே படல. அவரைச் சமாளிச்சு அனுப்பிட்டு அவசரச் செய்தின்னு போட்டேன்.

“தேவை இல்லாத தகவல்களை இதில் பகிர வேண்டாம்”னு, அதை அனுப்பின அடுத்த செகண்ட் ஒரு வீடியோ. “உங்களுக்குத் தெரியாமலே உங்க பணம் பறிபோகும். இந்த வீடியோவைப் பாருங்க”ன்னு.

அவரைக் கூப்பிட்டு பேசறதுக்குள்ர இன்னும் நாலு வீடியோ வந்துருச்சு. என் மெசெஜை யாரும் பார்த்தாங்களான்னே புரியல.

அரசியல் மெசெஜ் ஒண்ணு ஒருத்தர் அனுப்பினாரு. ஒரு கட்சியைத் திட்டி இன்னொரு கட்சி. அதைப் பார்த்துட்டு ஒருத்தரு சூடாயிட்டாரு.

“இதெல்லாம் ஏன் இதுல வருது”ன்னு அவரு கொதிச்சாரு.

“நம் அப்பார்ட்மென்ட்டுக்கு சம்பந்தம் இல்லாததைத் தவிர்க்கவும்”னு மறுபடி போட்டேன்.

“பி பிளாக்கில் என் எதிர்வீட்டுக்காரர் டிவி வால்யூமை அதிகம் வைத்து தொல்லை தருகிறார். நடவடிக்கை எடுக்கவும்”னு ஒண்ணு வந்துச்சு.

அந்த எதிர்வீட்டு அண்ணாச்சி, தம் பங்குக்கு இவரைப் பத்தி ஒண்ணு போட்டாரு. வரிசையா பத்து வீட்டுல இருந்து புகார்ப் பட்டியல் வர ஆரம்பிச்சுது.

“நாம் அனுப்பும் புகார்களை செக்ரட்டரி பார்க்கிறாரா, நடவடிக்கை எடுக்கிறாரா என்றே தெரியவில்லை”ன்னு ஒருத்தர் கோவ ஸ்மைலி போட்டு அனுப்புனாரு.

அஞ்சாறு பேரு வருத்த ஸ்மைலி போட்டு அவருக்கு சப்போர்ட் கொடுத்தாங்க. இந்த அமர்க்களத்துல என் போனை ரெண்டு தடவை சார்ஜ் போடறாப்ல ஆயிருச்சு.

மொட்டை மாடிக்குப் போயிட்டேன். ஏதாச்சும் பிரச்சினை வந்தா அங்கே போனா தீர்வு கிடைக்கும்னு ஒரு நம்பிக்கை. கொஞ்ச நேரம் உலாத்திட்டு மேலேர்ந்து எட்டிப் பார்த்தேன்.

கீழ நாலு சிட் அவுட்லயும் ஆளுங்க ஒக்காந்து இருந்தாங்க. என் பேரும் அவங்க பேச்சுல அடிபட்டுச்சு. அப்பதான் அந்த பளிச் ஐடியா. வேகமா கீழே என் வீட்டுக்குப் போயிட்டு மாடிக்குத் திரும்புனேன்.

“ஹலோ.. நாளைக்கு முடிச்சுரலாம். ஆமா”ன்னு எதையோ தொடர்பு இல்லாம சத்தமா எல்லாருக்கும் கேக்குற மாதிரி கத்துனேன். கீழேர்ந்து ரெண்டு பேர் நிமிர்ந்து பார்க்கவும் என் போனைக் கீழே போட்டுட்டு அய்யோன்னு கத்துனேன்.

“அடடா சுக்கு நூறாப் போச்சே”ன்னு உச்சு கொட்டுனாங்க. அதைத் திரட்டி ஒரு கவர்ல போட்டு கையில எடுத்துக்கிட்டு மேலே வந்தேன்.

அம்மிணி கத்துனாங்க. “போனை ஒடைச்சாச்சா.” அவங்களைப் பார்த்துக் கண்ணடிச்சேன். “பழைய போனு. எப்பவோ தூக்கிப் போட்டுருக்கணும். இப்போ ஒதவுச்சு!”

x