அலுக்காத போராட்டம்... அய்யாக்கண்ணுவின் அணுகுமுறை


பட்டை நாமம் போட்டு போராட்டம்

‘அய்யாகண்ணு என்றால் அலுக்காத போராட்டம்’ என்று அகராதியில் அர்த்தத்தை மாற்றிவிடலாம். அந்த அளவுக்கு போராட்டத்தையே அன்றாட வாழ்க்கையாக கொண்டிருக்கிறார், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு. தற்போது திருச்சி-கரூர் பைபாஸ் சாலை, அண்ணாமலை நகரில் உள்ள தனது வீட்டில் விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 46 நாள் போராட்டத்தைத் தொடங்கியிருக்கிறார். இன்று 22-ம் தேதி, 11-வது நாளைக் கடந்திருக்கிறது போராட்டம்.

மோடியின் காலில் விழும் போராட்டம்

ஆரம்பத்தில் அனைவரையும் போலவே விவசாயிகளின் கோரிக்கைகளுக்காக, ஆட்சியர் அலுவலகம் முன்பாக கவனத்தை ஈர்க்கும் போராட்டங்களைத் தொடங்கினார். திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக அவர் நடத்திய விதவிதமான போராட்டங்கள், திருச்சியைத் தாண்டி ஒட்டுமொத்த தமிழகத்தையும் திரும்பிப்பார்க்க வைத்தது.

அடுத்ததாக, 2016-17-ம் ஆண்டுகளில் டெல்லி சென்று கோரிக்கைகளை வலியுறுத்தி அவர் நடத்திய போராட்டங்கள், அகில இந்திய அளவில் மிகுந்த கவனத்தைப் பெற்றது. அரைநிர்வாணப் போராட்டம், எலிக்கறி திண்ணும் போராட்டம், மண்டை ஓடுகளுடன் போராட்டம் என்று விதவிதமான போராட்டங்களை நடத்தி டெல்லியை அலறவிட்டார். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உட்பட பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்களும், இந்தியாவின் முக்கிய விவசாய சங்கங்களின் தலைவர்களும் அவரது போராட்டக் களத்துக்கு வந்து ஆதரவளித்துச் சென்றனர்.

பாடை போராட்டம்

இதோ, இப்போதும் விவசாயிகளுக்கான கோரிக்கைகளை முன்வைத்து அடுத்த போராட்டத்தைத் தொடங்கியிருக்கிறார். தங்களது போராட்டத்தின் நோக்கம் குறித்து சொல்கிறார் அய்யாக்கண்ணு: ’’மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறவேண்டும், விவசாய விளைபொருட்களுக்கு உற்பத்தி விலையோடு 2 மடங்கு சேர்த்து விலை தரவேண்டும், மழையினால் அழிந்து வரும் குறுவை நெல்லை ஈரப்பதத்தைப் பார்க்காமல் அரசு உடனடியாகக் கொள்முதல் செய்ய வேண்டும் என்பன எங்களின் கோரிக்கைகள்.

இதைவிட முக்கியமான கோரிக்கை, உத்தரப் பிரதேசம் மாநிலம், லக்கிம்பூர் மாவட்டம், திகுன்னியா அருகில் பன்வீர்பூரில் விவசாயிகள் மீது காரை ஏற்றிக் கொன்றவர்களுக்கு உடனடியாக தூக்கு தண்டனை வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டம் நடத்தக் கிளம்பினோம். ஆனால், எங்களை வீட்டைவிட்டு வெளியேறவே காவல் துறை அனுமதிக்கவில்லை. அதனால் வீட்டின் முன்பாகவே எங்கள் போராட்டத்தைத் தொடர்கிறோம்” என்கிறார் அய்யாக்கண்ணு.

வீட்டுக்குள் போராட்டம்

இம்மாதம் 12-ம் தேதி தொடங்கியது, அய்யாக்கண்ணுவின் தற்போதைய போராட்டம். அன்றிலிருந்து தினமும் காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிவரையிலும் விவசாயிகள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். அதோடு மட்டுமல்லாமல், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான போராட்டத்தையும் நடத்துகிறார்கள். அய்யாக்கண்ணுவுடன் மாநில துணைத்தலைவர் தட்சிணாமூர்த்தி, மாநில செயலாளர் ஜான்மெல்கியோராஜ், திருச்சி மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன் உட்பட 15-க்கும் மேற்பட்டோர் தினமும் கலந்துகொள்கிறார்கள். அவர்கள் யாரும் ’என்னய்யா சும்மா சும்மா போராட்டம், போராட்டம்’ என்று அலுத்துக் கொள்ளவில்லை. அவருக்கு முன்பாகவே ஆர்வத்தோடு வந்து கலந்து கொள்கிறார்கள்.

மண்டை ஓடுகளுடன்

விதவிதமான போராட்டங்கள்

விவசாயிகளுக்கு லாபகரமான விலை வழங்காததால் சட்டைகூட அணிய முடியவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி, முதல்நாள் சட்டை அணியாமல் அமர்ந்தும், 2-வது நாள் கோவணம் கட்டியும் அமர்ந்திருந்தனர். 3-வது நாள் லாபகரமான விலை கொடுக்காமல் விவசாயிகளை மத்திய அரசு கைவிட்டது என்பதை வலியுறுத்தும் விதமாகப் பிச்சை எடுத்தும், 4-வது நாள் விவசாயத்தில் ஏற்படும் நஷ்டத்தால் வறுமை காரணமாக விவசாயிகள் மரணமடைவதைக் குறிக்கும் வகையில் மண்டை ஒட்டுடனும், 5-வது நாள் லாபகரமான விலை தராமல் ஏமாற்றி விட்டதால் நாமம் போட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சட்டையில்லாமல் ...

6-வது நாள் விவசாயிகள் வறுமையில் வாடுவதைச் சுட்டிக்காட்டும் விதமாக வயலில் ஓடும் எலியைப் பிடித்துத் தின்று போராட்டம் நடத்தினார்கள். விவசாயிகளின் மரணத்தைத் தடுத்து நிறுத்தாத மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து 7-ம் நாளில் பாடை கட்டிப் போராட்டம் நடத்தினர். 8-வது நாளில் சுதந்திர இந்தியாவில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க விவசாயிகளுக்குப் பேச்சுரிமை இல்லாமலும், வெளியே நடமாட உரிமை இல்லாமலும் காவல் துறையினர் வீட்டு காவலில் வைத்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாயைக் கட்டி அமர்ந்திருந்தனர்.

விவசாயத்தால் நஷ்டமடைந்துள்ள விவசாயிகள், தற்கொலையைத் தழுவுகிறார்கள் என்பதை உணர்த்தத் தூக்குக் கயிற்றைக் கழுத்தில் மாட்டிக் கொண்டு 9-வது நாளில் போராடினார்கள். தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, ’பிரதமர் மோடியின் காலில் விவசாயிகள் விழுந்து காப்பாற்று காப்பாற்று’ என கெஞ்சுவது போன்ற போராட்டத்தை 10-வது நாளில் நடத்தினார்கள்.

இலை தழைகள் அணிந்து...

’’என்னவிதமான தடைகள் வந்தாலும், அடக்குமுறைகள் தொடர்ந்தாலும் விவசாயிகளுக்கான போராட்டங்கள் எனது வாழ்நாள் முழுவதும் தொடரும்” என்றபடி, இன்றைய தனது 11-வது நாள் போராட்டத்தைத் தொடர்ந்தார் அய்யாக்கண்ணு. லாபகரமான விலை தராததால் விவசாயிகளுக்கு ஆடைவாங்கக்கூட வழியில்லை என்பதை உணர்த்தும்விதமாக. உடம்பில் ஆடைகளுக்குப் பதில் இலை தழைகளைக் கட்டிக்கொண்டு அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள்.

சிலர் வாழ்க்கையில் போராடி ஜெயிப்பார்கள். ஆனால், அய்யாக்கண்ணுவோ வாழ்க்கையையே போராட்டமாக மாற்றிக் கொண்டிருக்கிறார்.

x