லென்ஸ் சிமிட்டும் நேரம் - 7


கேரளாவில் தெய்யம் பண்டிகை மிகப் பிரபலமான திருவிழா. அந்தப் பண்டிகையின்போது நான் எடுத்த புகைப்படங்களைப் பற்றி, இந்த அத்தியாயத்தில் பேசுகிறேன்.

கேரள மாநிலத்தின் மலபார் மற்றும் கண்ணூர் பகுதிகளில் தெய்யம் பண்டிகையை விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள். இந்தப் பண்டிகையில் பெங்கெடுத்து வித்தியாசமான படங்களை எடுக்க வேண்டும் என்று கடந்த இரண்டு, மூன்று வருடங்களாகவே பாலாஜியை நச்சரித்துக் கொண்டிருந்தேன். பாலாஜியின் நண்பர் ஒருவர் கேரளத்தின் தலச்சேரியில் இருக்கிறார். அந்த ஊரிலும் தெய்யம் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடுவார்கள் என்று சொன்னார்கள். அவர் அழைத்ததின் பேரில், தலச்சேரிக்குப் புறப்பட்டோம்.

எனது தலச்சேரி பயண அனுபவங்களையும், புகைப்படங்களையும் பார்க்கும் முன்பாக, தெய்யம் பற்றி ஒரு சிறிய அறிமுகம். வழக்கமாக இப்பண்டிகை, கிராமத்துக் கதைகளையும், கிராமத்துத் தேவதைகளையும் உள்ளடக்கியே நடத்தப்படுகிறது. நான் சென்று வந்த, அண்டலுர் காவு எனும் ஊரில் மட்டும் ராமாயண யுத்த காண்டத்தின் ஒருபகுதியான வாலி - சுக்ரீவன் ஆகிய இருவருக்கும் நடக்கும் போர் மற்றும் ராமன் இலங்கைக்குச் சென்று சீதையை மீட்கும் படலம் ஆகியவை கதைக்களமாக உள்ளன.

இப்பண்டிகைகளில் பலவகையான கதாபாத்திரங்களை ஏற்று தங்களை அழகாய் ஒப்பனை செய்துகொள்கிறவர்கள் அனைவருமே, பழங்குடி அல்லது பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்களே. இப்படி தங்களை ஒப்பனை செய்துகொள்ளும் தெய்யங்களை, அனைத்துத் தரப்பு மக்களும் கடவுளாகவே நினைத்து வணங்கி ஆசிர்வாதம் பெறுகிறார்கள்.

நண்பரின் வீட்டுக்கருகிலேயே பண்டிகை கொண்டாட்டங்கள் நடந்ததால், அவருடைய வீட்டிலேயே தங்க முடிவெடுத்தோம். நண்பரின் வீட்டில் சாப்பாட்டுச் சடங்குகளை முடித்துக்கொண்டு கோயிலுக்குச் சென்றோம்.

கோயில் வாசலில் 2 தெய்யங்கள் தங்களை ஒப்பனை செய்துகொண்டு, மக்களை ஆசிர்வதித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களைப் படமெடுக்கலாம் என அருகில் சென்றேன். யாரையும் படமெடுக்கும் முன்பு அவர்களிடம் அனுமதி பெறுவது என்னுடைய வழக்கம். இங்கேயும் அப்படியே முயற்சி செய்தேன். ஆனால், என் முயற்சி பலிக்கவில்லை. அதனால், அவர்கள் என்னைப் பார்க்கும் சமயமாகப் பார்த்து படங்களைக் க்ளிக்கினேன். அவைதான் இந்தப் படங்கள்.

தெய்யங்கள், தங்களது முகத்தில் பூசி இருக்கும் அரிதாரம் மிகவும் அழகாகவும் நுட்பம் மிகுந்ததாகவும் இருக்கும். நண்பகலில் யுத்த காண்டம் நடந்தேறியது. இந்த நிகழ்வுகளில் வரும் கதாபாத்திரங்களை முழுமையாக ஒப்பனை செய்தபிறகு எடுக்கும் படங்களைவிட, ஒப்பனையில் இருக்கும்போதே எடுக்கும் படங்கள்தான் பேசும் படங்களாக அமையும். நானும் அப்படியான படங்களை எடுக்க யோசித்து வைத்திருந்தேன். ஆனால், ஒப்பனை அறைக்குள் பெண்களுக்கு அனுமதி இல்லை என்று சொல்லி என்னை தடுத்துவிட்டார்கள். அப்புறம் தான் தெரிந்தது, ஒப்பனையில் இருக்கும் படங்களை எடுத்ததெல்லாம் ஆண் புகைப்படக் கலைஞர்கள் என்று.

இந்த விஷயத்தில் எனக்கு சற்றே ஏமாற்றம்தான் என்றாலும் வாலி - சுக்ரீவன் போர் காட்சிகளை படமெடுக்க ஆவலாய் காத்திருந்தேன். வாலியை போர்க்களத்துக்கு அழைத்துக்கொண்டு வரும்போதே, கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் சேர்ந்து விட்டது. அவசரம் அவசரமாக, எங்கு நின்றால் நல்ல கோணங்களில் படம் கிடைக்கும் என்றெல்லாம் யோசித்து எனக்கான இடத்தைத் தேர்வு செய்துகொண்டேன். எனது ‘நல்ல நேரம்’ செண்டை மேள வாத்தியக்காரர்களுக்கு நடுவில் மாட்டிக் கொண்டேன். போர் முடிந்தபோது, எனது காதுகளின் நிலைமை எப்படி இருந்திருக்கும் என்பதை நான் சொல்லித்தான் தெரியவேண்டுமா?

கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் நடந்தது போர். அவ்வளவு நேரமாக கேமராவை தூக்கிக்கொண்டே நின்றதில் என் வலது கை மற்றும் முதுகின் ஒருபுறம் முழுக்க வலி. அத்துடன், இரவு ஸ்ரீ ராமனைப் பார்க்க வரலாம் என வீடு திரும்பினோம்.

இரவு 9 மணிக்கு மேல் மீண்டும் கோயிலுக்கு வந்த எங்களுக்கு அங்கு கூடி இருந்த மக்கள் கூட்டத்தைப் பார்த்தவுடன், கடைசி வரை தெய்யத்தை பார்த்துவிட்டுப் போகமுடியுமா என்ற சந்தேகம் வந்துவிட்டது. முழுமையாக பார்க்க முடியாது என்பதை தெரிந்துகொண்டு, கோயிலின் முன்பாக மக்களுக்கு ஆசி வழங்கிக் கொண்டிருந்த ஸ்ரீ ராமரையும், லெட்சுமணரையும், பப்புரான் என அழைக்கப்படும் அனுமனையும் படமெடுத்துக் கொண்டு வீடு திரும்பினோம்.

ஆண்டுதோறும், மலையாள மாதமான கும்ப மாதத்தின் முதல் 7 நாட்கள் நடந்தேறும் தெய்யம் திருவிழா, மக்களிடையே ஒற்றுமையை வளர்க்கும் நோக்கத்திலேயே நடத்தப்படுகிறது. இந்தத் திருவிழாவானது தமிழ்நாட்டில் நடக்கும் தெருக்கூத்தை நினைவூட்டிய போதும், இந்தத் திருவிழா எங்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவமாகவே இருந்தது. சுகமான அந்த அனுபவம், எங்களது உடல் களைப்பையும் சற்றே லேசாக்கிவிட்டது என்னவோ உண்மைதான்!

x