உ.வே.சா-வின் அகக் கண்ணைத் திறந்த சந்திப்பு!


1980-ல், உ. வே. சாமிநாதையர் நூலகத்தில் எடுக்கப்பட்ட படம்.

அக்டோபர் 21 , வியாழன், 1880, என்ற நாள் தமிழ் மொழியின் வரலாற்றிலேயே பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய நாள். அன்றுதான் பெரும்பாலும் மறக்கப்பட்டிருந்த, மறைக்கப்பட்டிருந்த பல பழந்தமிழ் இலக்கியங்களை மீட்டெடுத்துப் பதிப்பித்து, உலகுக்குப் பறைசாற்றும் முயற்சிகளுக்கான விதை ஊன்றப்பட்டது. அன்றுதான், பக்தியும் சமயச் சிந்தையும் மட்டுமே தமிழ் இலக்கிய மரபு என்ற கோட்டையைத் தகர்த்து சமயச் சார்பற்ற பண்டைத் தமிழ் இலக்கிய மரபைத் தமது என்று கொண்டாடி, பழமையின் வழியாகப் புதுமையை எட்டுவதற்கான முதலடி எடுத்து வைக்கப்பட்டது. அன்றுதான் தொன்மை என்பது சில நூற்றாண்டுகள் அல்லது புராணமயமான கல்ப கோடிக் காலங்கள் என்ற எண்ணத்திலிருந்து விலகி, அளவிடக்கூடிய ஆனால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய தொன்மையை ஆராய்ந்து பார்க்கும் வரலாற்றுப் பார்வைக்கு வழி பிறந்தது.

அக்டோபர் 21 அன்று என்ன நடந்தது என்பதைப் பற்றி, உவேசா அவர்களே எழுதிய 'என் சரித்திரம்' என்ற தன்வரலாற்றில் மெல்லிய நாடகத்தன்மையுடன் விவரிக்கிறார். அந்த நிகழ்ச்சி பற்றிய கட்டுரையின் தலைப்பே 'என்ன பிரயோசனம்' என்றிருப்பது நம் கவனத்தை ஈர்க்கிறது.

அப்படி என்ன நடந்தது அன்று?

அதற்கு, அந்தக் காலக்கட்டத்தின் பின்னணியைப் பற்றி நாம் அறிய வேண்டும். அன்றைய தமிழகத்தின் தலைசிறந்த தமிழ்ப்புலவர் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களுக்கும் அவரது தலைமாணாக்கரான உ. வே. சாமிநாதையர் அவர்களுக்கும்கூட சமயச்சார்பற்ற பண்டைய தமிழ் இலக்கியங்களில் பயிற்சி இல்லாதிருந்தது. சைவ வைணவ ஆதீனங்களும், மடங்களும் சமண பவுத்த சார்புடைய நூல்கள் என்று தள்ளிவைத்திருந்த ஐம்பெருங் காப்பியங்களும், சங்கத்தமிழ் நூல்களும் ஒரு சிலரிடம் மட்டுமே யாரும் அறியாமல் கற்காமல், காலத்தால் கரைந்துகொண்டிருந்த வேளையது.

அவற்றில் சிலவற்றை ஆங்கிலேயர்கள் தேடியெடுத்து அச்சிட்டது மட்டுமல்லாமல், தமிழ்ப்பாட நூல்களிலும் சேர்க்கத் தொடங்கியிருந்தார்கள். ஆனாலும், எல்லா நூல்களும் முழுமையாகக் கிடைக்கவுமில்லை. அவற்றை முறையே ஆய்ந்து, ஆய்வுக்குறிப்புகளோடு ஆய்வாளர்களுக்கு ஏற்ற தரத்தில் வெளிவரவும் இல்லை. உண்மையில், பலவேறு மூலங்களை ஒப்பிட்டு, இடைச்செருகல்களைக் கண்டறிந்து, பிழைதிருத்தி, உரையோடும் அருஞ்சொற்பொருளோடும் வெளியிடும் ஆய்வுப்பதிப்பு என்ற மேலைநாட்டுக் கருத்தே இந்தியாவுக்கு அப்போது புதிது. அத்தகைய முறைகளைப் பற்றி அறிந்திருந்தவர்களே குறைவு எனும்போது, அவற்றில் பயிற்சியோ தேர்ச்சியோ பெற்றிருந்த ஆய்வுப்பதிப்பாசிரியர்கள் வெகு அரிதாக இருந்த காலம் அது.

மதுரையில் தொல்பொருள் அரங்கில் காட்சிக்கு வைக்கப்பட்ட, 400 ஆண்டுகள் பழமையான பனையோலைச் சுவடிகள் (1981-ல் எடுக்கப்பட்ட படம்)

அக்டோபர் 21 அன்று என்ன நடந்தது என்பதைப் பற்றி உவேசா அவர்களே எழுதிய 'என் சரித்திரம்' என்ற தன்வரலாற்றில் மெல்லிய நாடகத்தன்மையுடன் விவரிக்கிறார். அந்த நிகழ்ச்சி பற்றிய கட்டுரையின் தலைப்பே 'என்ன பிரயோசனம்' என்றிருப்பது நம் கவனத்தை ஈர்க்கிறது. முதல் பத்தியிலேயே

“அச்சமயம் அரியிலூரிலிருந்து சேலம் இராமசுவாமி முதலியாரென்பவர் கும்பகோணத்துக்கு முன்சீபாக மாற்றப் பெற்று வந்தார். அவரிடம் என் நல்லூழ் என்னைக் கொண்டுபோய் விட்டது. அவருடைய நட்பினால் என் வாழ்க்கையில் ஒரு புதுத் துறை தோன்றியது, தமிழிலக்கியத்தின் விரிவை அறிய முடிந்தது.”

என்றெழுதி அந்தக் கூட்டத்தால் தம் வாழ்வில் விளைந்த திருப்பத்தை விவரிக்கிறார் உ.வே.சா.

இராமசுவாமி முதலியார் சேலத்தில் ஒரு பெரிய நிலவுடைமையாளர் குடும்பத்தைச் சேர்ந்தவர், பேரறிவாளர், தமிழிலும், இசையிலும், வடமொழியிலும் ‘பழக்கம்’ உள்ளவர் என்று அவருடைய புலமையைப் பற்றி உ.வே.சா. குறிப்பிடுகிறார். கும்பகோணத்தில் சேலம் இராமசாமி அவர்கள் வேலைபார்த்து வந்தபோது, அவரது அறிவாற்றல் ‘ஒளிர்ந்தமையால்’ ஊர்ப்பெரியவர்கள் அவரைப் பார்த்துப் பேசி வந்திருக்கிறார்கள்.

உ.வே.சா. அவர்களை ஆதரித்து வந்த திருவாவடுதுறை ஆதீனத்தலைவரும் முனிசீபைப் பார்க்கத் தம் மடத்திலிருந்து சிலரை அனுப்பி வைத்திருக்கிறார். சேலம் இராமசாமி அவர்கள், மடத்திலிருந்து அவரைப் பார்க்க வந்தவர்களிடம், தமிழ்க்கல்வி வளர்ச்சிக்கு மடம் என்ன செய்கிறது, மடத்தில் எவ்வளவு தமிழ்ப் புலவர்கள் இருக்கிறார்கள், எத்தனைப்பேர் தமிழ் படிக்கிறார்கள் என்றெல்லாம் துருவித்துருவிக் கேட்டதனால், மடத்தில் இருப்பவர்களைப் பற்றிச் சொன்னதோடு மடத்தில் படித்த மாணவர் உ.வே.சா. அவர்களே கும்பகோணம் கல்லூரியில் தமிழாசிரியராக இருப்பதையும் தெரிவித்திருக்கிறார்கள். அதனால், முனிசீப் அவர்களைப் பார்த்துவருமாறு திருவாவடுதுறை ஆதீனத் தலைவர் உ.வே.சா. அவர்களுக்குச் சொல்லியனுப்பியிருக்கிறார்.

சென்னை பெசன்ட் நகரில் உள்ள பெசன்ட் தியாசபிகல் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள உ. வே. சாமிநாதையர் நூலகத்தில் பாதுகாக்கப்படும் பனையோலைச் சுவடிகள்.

இளமையும் புலமைப்பெருமையும் மிக்க உ.வே.சா. அவர்களுக்கு, இத்தகைய கனவான்களைச் சென்று பார்க்க வேண்டுமென்ற ஆவல் இல்லையென்றாலும் ஆதீனத்தலைவர் சொல்லியனுப்பியதால், ஒருநாள் அவரைச் சென்று பார்க்கலாம் என்று புறப்பட்டிருக்கிறார். அந்த நாள் அவருடைய வாழ்வின் திருப்புமுனையாக அமைந்துவிட்டதால், அது ‘வியாழக்கிழமை, அக்டோபர் 21, 1880, என்பதைத் தன்வரலாற்றில் பதிவு செய்திருக்கிறார் உ.வே.சா.

தான் கும்பகோணம் கல்லூரித் தமிழாசிரியர், மடத்தில் படித்தவர் என்று சொல்லியும் முனிசீப் அவரைப் பொருட்படுத்தியதாகப் பேசாதது உ.வே.சா. அவர்களுக்கு எரிச்சலூட்டியிருக்கிறது.

“அதிகாரப் பதவியினால் இப்படி இருக்கிறார்; தமிழ் படித்தவராக இருந்தால் இப்படியா நம்மிடம் பேசுவார்?”

என்று தம் கொதிப்பை விவரிக்கிறார் உ.வே.சா. நீங்கள் யாரிடம் பாடம் கேட்டீர்கள் என்று கேட்டவரிடம், தான் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் மாணவர் என்று சொல்லியும் முனிசீப் மனம்கலந்து பேசாமல் “கணக்காகவே பேசினார்” என்று பதிவு செய்கிறார்.

“பிள்ளையவர்கள் பெயரைக் கேட்டுப் புடை பெயர்ச்சியே இல்லாத இவராவது, தமிழில் அபிமானம் உடையவராக இருப்பதாவது! எல்லாம் பொய்யாக இருக்கும் என்று நான் தீர்மானம் செய்துகொண்டேன்.”

அடுத்து வரும் உரையாடல் மூலம், அந்தக் காலத்தில் பெரும்புலவர்கள் எந்தெந்த நூல்களைத் தமிழின் பேரிலக்கியங்களாகக் கருதினார்கள், எவற்றையெல்லாம் பிழையறக் கற்றுத் தேர்ந்தார்கள் என்று அறிகிறோம். முனிசீபோ கேள்வி கேட்பதை நிறுத்தாமல், “என்ன என்ன பாடம் கேட்டிருக்கிறீர்கள்?” என்று துளைக்கிறார். சரி, இவரை மலைக்க வைக்க நல்ல வாய்ப்பு கிடைத்தது என்றெண்ணி உ.வே.சா. தான் கற்ற நூல்களைப் பட்டியலிடுகிறார்.

“குடந்தை யந்தாதி, மறைசையந்தாதி, புகலூரந்தாதி, திருவரங்கத்தந்தாதி, அழகரந்தாதி, கம்பரந்தாதி, முல்லையந்தாதி, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ், அகிலாண்ட நாயகி பிள்ளைத் தமிழ், சேக்கிழார் பிள்ளைத் தமிழ், திருக்கோவையார், தஞ்சை வாணன் கோவை...” என்று சொல்லிக்கொண்டே போனேன். அந்தாதிகளில் இருபது, கலம்பகங்களில் இருபது, கோவைகளில் பதினைந்து, பிள்ளைத் தமிழ்களில் முப்பது, உலாக்களில் இருபது, தூதுகள் இப்படியே பிரபந்தங்களை அடுக்கினேன்.

இந்தப் பட்டியலால் முனிசீப் முகத்தில், “கடுகளவு வியப்புக் கூடத் தோன்றவில்லை” என்ற தம் ஏமாற்றத்தைப் பதிவு செய்கிறார் உ.வே.சா. போதாதற்கு, முனிசீப் சேலம் இராமசாமி முதலியார், “இதெல்லாம் படித்து என்ன பிரயோசனம்?” என்று திடீரென்று ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போடுகிறார்.

சரி, இந்தக் கனவான் ஆங்கிலத்தில் மெத்தப்படித்து அதில் மோகங்கொண்டவராக இருக்கலாம், அதனால்தான் இப்படிச் சொல்கிறார் என்றெண்ணித் தாம் படித்த புராண வரிசையைத் தொடங்குகிறார் உ.வே.சா.

“திருவிளையாடற் புராணம், திருநாகைக்காரோணப் புராணம், மாயூரப் புராணம், கந்த புராணம், பெரிய புராணம், குற்றாலப் புராணம்...”

இத்தனையும் கேட்ட பிறகும் முனிசீப், “பழையபடியே கற்சிலைபோல இருந்தார்” என்கிறார் உ.வே.சா. தொடர்ந்து தாம் கற்ற பிறநூல்களை வரிசைப்படுத்துகிறார்: “நைடதம், பிரபுலிங்க லீலை, சிவஞான போதம், சிவஞானசித்தி யார் உரை. . . . .” , இலக்கண நூல்கள் என்று சொல்லிக்கொண்டே போனாலும் முனிசீப் இராமசாமி அவர்களுக்கு நிறைவு உண்டாகவில்லை. மிகுந்த உறுதியுடன், “கம்பராமாயணம் முழுவதும் இரண்டு மூன்று முறை படித்திருக்கிறேன். பிள்ளையவர்களிடமும் சில காண்டங்களைப் பாடம் கேட்டிருக்கிறேன்” என்ற உ.வே.சா. அவர்களிடம், “சரி, அவ்வளவுதானே?” என்று ஒரே போடாகப் போடுகிறார் சேலம் இராமசாமி அவர்கள். இதற்குமேலே சொல்ல என்ன இருக்கிறது என்று அசந்துபோகிறார் உ.வே.சா. ஆனால் முனிசீப் இராமசாமி அவர்களோ, அவரை விடுகிறவராக இல்லை. மேலும் கேள்வி கேட்கிறார்.

“இந்தப் பிற்காலத்துப் புஸ்தகங்களெல்லாம் படித்தது சரிதான். பழைய நூல்களில் ஏதாவது படித்ததுண்டா?" என்று அவர் உ.வே.சா.வுக்குத் திகைப்பூட்டுகிறார். தான் சொன்னதெல்லாமே பழைய நூல்கள்தாமே, பழையநூலென்று இவர் வேறு எதைக் கருதுகிறார் என்று குழம்புகிறார் உ.வே.சா. தாம் சொன்னவற்றில் எவ்வளவோ பழைய நூல்கள் இருக்கின்றனவே என்று உ.வே.சா. கேட்கிறார்.

அந்த உரையாடலுக்குப் பிறகுதான் தமிழ் ஒரு கரைகாண முடியாத பெருங்கடல் என்று உ.வே.சா-வும் அறிகிறார். அவர் மூலம் நாமும் அறிகிறோம். இந்த உரையாடலுக்குப் பிறகுதான், தாம் கேள்விப்பட்டே இராத பண்டைத்தமிழ் நூல்களின் ஓலைச்சுவடிகளைத் தமிழ்நாட்டின் மூலைமுடுக்குகளிலெல்லாம் தேடிப்பிடிக்க முயல்கிறார் உ.வே.சா.

உரையாடலின் அடுத்த சில நொடிகளில்தான் உ.வே.சா.வின் வாழ்க்கையில் ஒரு புதிய துறையைத் தொடக்கிவைக்கிறது.

“அவைகளுக்கெல்லாம் மூலமான நூல்களைப் படித்திருக்கிறீர்களா?” என்று அவர் கேட்டபோதுதான் அவரிடம் ஏதோ சரக்கு இருக்கிறதென்ற எண்ணம் எனக்கு உண்டாயிற்று.

“தாங்கள் எந்த நூல்களைச் சொல்லுகிறீர்களென்று தெரியவில்லையே?” என்றேன்.

“சீவக சிந்தாமணி படித்திருக்கிறீர்களா? மணிமேகலை படித்திருக்கிறீர்களா? சிலப்பதிகாரம் படித்திருக்கிறீர்களா?”

அவர் சொன்ன நூல்களை நான் படித்ததில்லை; என்னுடைய ஆசிரியரே படித்ததில்லை. புஸ்தகத்தைக்கூட நான் கண்ணால் பார்த்ததில்லை.

உரையாடலின் இந்தப் பகுதி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. இது நடந்த ஆண்டு 1880. இதற்கு இரண்டாண்டுக்குப் பின்பு 1882-ல் பிறந்த பாரதியாரின் பாடல்களில், “நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரமென்றோர் மணியாரம் படைத்த தமிழ்நாடு” என்றும், “கம்பனைப்போல் வள்ளுவன்போல், இளங்கோவைப்போல் பூமிதனில் யாங்கனுமே பிறந்ததிலை” என்றும் படித்த நமக்கு, பாரதி பிறப்பதற்கு முன்பு தமிழிலக்கியம் கற்ற புலவர்கள் சிலப்பதிகாரத்தையும், மணிமேகலையும் கற்றதில்லை என்பது அதிர்ச்சியளிக்கும் செய்தி. அதேபோல், உ.வே.சா. தாம் கற்ற நூல்களின் பட்டியலில் திருக்குறளையும் சொல்லவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த உரையாடலுக்குப் பிறகுதான் தமிழ் ஒரு கரைகாண முடியாத பெருங்கடல் என்று உ.வே.சா.வும் அறிகிறார். அவர் மூலம் நாமும் அறிகிறோம். இந்த உரையாடலுக்குப் பிறகுதான், தாம் கேள்விப்பட்டே இராத பண்டைத்தமிழ் நூல்களின் ஓலைச்சுவடிகளைத் தமிழ்நாட்டின் மூலைமுடுக்குகளிலெல்லாம் தேடிப்பிடிக்க முயல்கிறார் உ.வே.சா. அப்படித் திரட்டிய நூல்களைப் புரிந்துகொள்வதற்குத் தாம் ஏற்கெனவே கற்ற தமிழ் இலக்கியப் பயிற்சி மட்டும் போதாது என்றும் உணர்கிறார். தம்முடைய சைவச் சமய வேலியைத் தாண்டிச் சமணர்களிடமும், பவுத்தர்களிடமும் அவர்களுடைய மரபுகளையும் சமயச்சிந்தனைகளையும் கற்கிறார். அவற்றைத் தம்மால் எவ்வளவு நடுநிலையிலிருந்து சொல்ல இயலுமோ அதைச் செய்யவும் முயல்கிறார்.

உ.வே.சா.வுக்கு முன்னரே ஓலைச்சுவடிகளை அச்சுக்குக் கொண்டுவந்தவர்கள் பலர். அவர்களில் முதன்மையானவர் யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலர். அவர் தீவிர சைவசமயத் தொண்டர். பிறசமயத்து நூல்களை அச்சுக்குக் கொண்டுவருவதில் அவருக்கு எள்ளளவும் விருப்பமிருந்ததில்லை. “நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்” என்று பாரதி போற்றிய இலக்கியத்தை, “ஜைன செட்டிச்சி கதை” என்று எள்ளி விலக்கியவர் ஆறுமுக நாவலர் [2].

இந்தப் பண்டைய இலக்கியங்களைத் தொன்றுதொட்டு, ஏடுபெயர்த்து எழுதியும், எழுத்துமுறைகள் மாறியபோது அவற்றோடு சேர்ந்து தாமும் மாற்றியும் ஈராயிரம் ஆண்டுகளாகப் போற்றி வந்திருக்கிறார்கள் தமிழர்கள். என்றாலும், இடைக்காலத்தில், பக்தி இயக்கத்தால் உந்தப்பட்டு, தம் சமயத்துக்கு மாற்றான இலக்கியங்களைக் கற்பதில்லை, பரப்புவதில்லை என்று உறுதி பூண்டு அவற்றைக் கற்கக்கூடாது என்று தடையும் விதித்திருக்கிறார்கள். ‘இலக்கணக்கொத்து’ என்ற 18-ம் நூற்றாண்டின் இலக்கணத்தை இயற்றிய சுவாமிநாத தேசிகர் என்ற புலவர் ‘சீவக சிந்தாமணி’, ‘சிலப்பதிகாரம்’, ‘மணிமேகலை’, ‘சங்க இலக்கியம்’, ‘பெருங்கதை’ போன்ற நூல்களைப் படிக்கக்கூடாது என்றது மட்டுமல்லாமல், சமணர் ஒருவரால் இயற்றப்பட்டது என்பதற்காக நன்னூல் இலக்கணத்தையும் கற்கக்கூடாது என்று தடைவிதித்திருக்கிறார். சைவ சமயத்தைச் சார்ந்த பிற பெரும்புலவர்களும் இத்தகைய எண்ணத்தைக் கொண்டிருந்திருக்கிறார்கள்.

சென்னை ராஜாஜி ஹாலில், உ.வே.சா சேகரித்த பனையோலைச் சுவடிகளைப் பார்வையிடுகிறார் சென்னை மாகாண அமைச்சர் எம்.பக்தவத்சலம் (1961 அக்டோபர் 29-ல் எடுக்கப்பட்ட படம்)

அதனால்தான், இந்த மரபிலிருந்து தம்மை முறித்துக்கொண்டு, தம் வாழ்நாள் முழுதும் பண்டைத் தமிழிலக்கியத்தைத் தேடித்தேடிப் பதிப்பித்த உ.வே.சா. அவர்களின் மாற்றம் குறிப்பிடத்தக்கது. அந்த மாற்றம் தமிழர் வரலாற்றில் மிகப்பெரும் மாற்றங்களுக்கு வித்திட்டது. அந்தப் பொன்னாளால்தான், சிலப்பதிகாரமும் மணிமேகலையும் சீவக சிந்தாமணியும் சங்கப்பாடல்களும் மீட்டெடுக்கப்பட்டன. தமிழரின் அடையாளம் சைவர், வைணவர் என்பதிலிருந்து மாறி, சமயச்சார்பற்ற பொதுப்படையான அடையாளமாகியது.

இன்றைய புத்துலகத்தின் வேர், சங்ககாலத்தின் பழைய உலகத்தில் ஆழமாக நிலைகொண்டிருக்கிறது. அத்தகைய பெருமாற்றத்துக்கு வித்திட்ட அக்டோபர் 21-ம் நாளைப் பொன்னாளாகப் போற்றுவோம்.

சான்று நூல்கள்:

1. ‘என் சரித்திரம்’, அத்தியாயம் 88, பக்: 726-734, உ.வே. சாமிநாதையர், 1950
2. “‘Enna Prayocanam?’ Constructing the canon in colonial Tamilnadu”, A.R. Venkatachalapathy

The Indian Economic & Social History Review, Volume: 42 issue: 4, page(s): 535-553 . December 1, 2005

கட்டுரையாளர்: தமிழ் இணையத்தின் முன்னோடிகளில் ஒருவர். அண்ணாமலைப் பல்கலையில் 2012-ல் நடந்த தமிழ் இணைய மாநாட்டுக்கும் தலைமை தாங்கியவர். தமிழக அரசின் தமிழ் யூனிகோடு அறிவுரைஞர் குழுவிலிருந்து அரசின் தரத்தை உருவாக்கியவர்களில் ஒருவர். தற்போது அமெரிக்காவில் உள்ள துளிர் நிறுவனமான ‘செவான்டிசு’ என்ற செய்யறிவு நிறுவனத்தின் தலைமை அலுவலராக இயங்கி வருகிறார்.

x