தொல்லியல் பார்வை


பல்லவர்களின் கட்டிடக்கலைக்குச் சான்றாக பல புராதனச் சின்னங்களைச் சொல்லலாம். செஞ்சியை அடுத்துள்ள, பனமலையில் அமைந்துள்ள பனமலைநாதர் (தாளகிரீசுவரர்) திருக்கோயிலும் பல்லவர்கள் நமக்கு விட்டுச்சென்ற புராதன கலைப் பொக்கிஷம்தான். பெரும்பாலும் குடைவரைக் கோயில்கள் மீதே கவனம் செலுத்திவந்த பல்லவர்கள், மலைமீது கட்டிய முதல் கற்றளி (கற்களைக்கொண்டு எழுப்பிய கோயில்) கோயில் இது.

செஞ்சிக்குச் சுமார் 22 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இக்கோயில், இராசசிம்ம பல்லவனால் கட்டப்பட்டது. பல்லவர்களின் பெருமை பேசும் கல்வெட்டுகள் இந்தக் கோயிலைச் சுற்றிலும் இருப்பதை இன்றும் காணலாம். சுமார் 1,300 ஆண்டுகள் பழமையானது இந்தக் கோயில். இதன் உட்புறச் சுவற்றில் மூலிகை வர்ணங்களால் வரையப்பட்ட, உமையின் அழகான ஓவியங்களின் மிச்சம் இன்னமும் அழியாமல் இருப்பது இன்னொரு அதிசயம்தான்.

x