தொல்லியல் பார்வை


குஜராத் மாநிலத்தின் பதான் நகரத்தில் அமைந்துள்ள படிக்கிணறு இது. நூற்றுக்கணக்கான படிகளுடன் அழகிய வேலைப்பாடுகளுடன் வடிவமைக்கப்பட்ட இந்த இராணியின் கிணற்றை, உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக யுனெஸ்கோ அங்கீகரித்திருக்கிறது.

பதினோறாம் நூற்றாண்டில் சோலாங்கி குல அரசை நிறுவியவரும், மன்னன் மூலராஜனின் மகனுமான முதலாம் பீமதேவனின் (1022–1063) நினைவாக, அவரின் மனைவியும் பட்டத்து ராணியுமான உதயமதியும், அவரது மகன் முதலாம் கர்ணதேவனும் இணைந்து இக்கிணற்றை வடிவமைத்தனர். இது 7 அடுக்குகளைக் கொண்டது.

இதன் அடித்தளத்திலிருந்து செல்லும் சுரங்கப்பாதை, பல கிலோ மீட்டர் தூரம் கடந்து சித்பூர் வரை செல்வதாகத் தகவல் உண்டு. போர் அபாய காலங்களில் ராஜவம்சத்தினர் தப்பிச் செல்வதற்காக இத்தகைய ஏற்பாட்டைச் செய்திருக்கலாம் என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.

காலப்போக்கில் இந்த அழகிய கிணறு கற்களாலும் மணலாலும் மூடப்பட்டுவிட்டது. 1980-ல் இந்தக் கிணற்றை தொல்லியல் துறை அகழ்வாய்வு செய்தபோது நல்ல நிலையில் இருந்தது.

கிணற்றின் பக்கவாட்டுச் சுவர்களில், விஷ்ணுவின் பத்து அவதாரங்கள் உள்ளிட்ட 800-க்கும் மேற்பட்ட சிற்பங்கள் கலைநயத்துடன் வடிக்கப்பட்டுள்ளன. இந்தக் கிணறு மழை நீரைச் சேமிக்கும் இடமாகவும் இருந்திருக்கலாம் என்கிறார்கள். குஜராத் மக்கள் ஒரு காலத்தில் இதை ஆன்மிக தலமாக வழிபட்டு வந்ததாகவும் தரவுகள் உள்ளன.

x