பகாசுரப் பலன் தருமா பனை நடவு?


மொத்தமாக வெட்டப்படும் பனங்காடுகள்

இப்போதெல்லாம் வார இறுதி நாட்களை ஏதாவது நற்பணிக்கு, உடல் உழைப்புக்கென ஒதுக்கலாமே என்று முடிவெடுப்பவர்களின் தேர்வு மரம் நடவாகவே இருக்கிறது. குறிப்பாக, பனை விதைகளை நடும் நிகழ்வு வார இறுதி நாட்களில் தமிழகத்தில் பரவலாக நடக்கிறது.

தமிழகத்தின் மாநில மரம் என்பதுடன், தமிழர் வரலாற்றின் அடையாளமாகவும் பனை பார்க்கப்படுவதால் தமிழ் தேசியம் பேசுவோர் இதில் கூடுதல் ஆர்வம் காட்டுகிறார்கள். “பனை நடுவதால் ஏதாவது பலனுண்டா?" என்ற கேள்வியும் இங்கே இருக்கிறது என்றாலும், அந்தக் குரல் பரவலாக வெளியே கேட்பதேயில்லை. தமிழர் பெருமையை அறியாதவர் எனும் அவச்சொல் வந்துவிடும் எனும் அச்சமே அதற்குக் காரணம்.

அரசின் ஆதரவு

மக்கள் மத்தியில் பொங்கியோடும் பனைப் பாசத்தைப் பார்த்து, தமிழ்நாடு அரசும் வேளாண் பட்ஜெட்டில் பனைப் பாதுகாப்பு, பனை வளர்ப்புக்கென பல அறிவிப்புகளையும் வெளியிட்டது.

"தமிழகத்தில் 76 லட்சம் பனை விதைகளையும், 1 லட்சம் பனங்கன்றுகளையும் முழு மானியத் தொகையுடன் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஏரிக் கரைகளிலும் சாலையோரங்களிலும் பனைமரங்களை வளர்ப்பதற்கு மீண்டும் முயற்சிகள் எடுக்கப்படுவதுடன், இத்துறை பனைமரங்களைப் போற்றிக் காக்கும் உன்னதப் பணியை உன்னிப்பாக மேற்கொள்ளும். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின்கீழ் செயல்படும் கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பனைமரம் தொடர்பான ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். பனை மரங்களை வெட்டுவதற்கு மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெறவேண்டும் என்ற விதி உருவாக்கப்படும்" என்று பல அறிவிப்புகளை வெளியிட்டார் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். அரசு அறிவித்த அடுத்த வாரமே, தனது சொந்தச் செலவில் 1 லட்சம் பனை விதைகளை அரசுக்கு அனுப்பிவைத்தார் சபாநாயகர் அப்பாவு.

பனை நடவில் பெண்களும் ஆர்வம் காட்டுகிறார்கள்.

இரா.பஞ்சவர்ணம்

நாளைய தலைமுறைக்கு நன்மை

உண்மையில் அரசு, அரசியல் இயக்கங்கள், தன்னார்வத் தொண்டர்களின் பனை வளர்ப்பு ஆர்வம் பயனளிக்குமா என்று பனை மரங்கள் குறித்தும், தமிழ்ச் சமூகத்துக்கும் அதற்குமான தொடர்பு குறித்தும் பயன்பாடு, பண்பாடு அடிப்படையில் விரிவான கள ஆய்வு செய்தவரும், 'பனை மரமே பனை மரமே' நூலை எழுதியவருமான பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியனிடம் கேட்டோம்.

"தென்னைய வெச்சவன் தின்னுட்டுச் செத்தான், பனையை வெச்சவன் பார்த்துக்கிட்டே செத்தான் என்று ஒரு பழமொழி கூட உண்டே? அப்படி இந்தப் பனை நடவும் பலன்தர தாமதமாகத்தான் செய்யும். எல்லாவற்றிலும் உடனடிப் பயனை மட்டுமே எதிர்பார்க்கக் கூடாது. எப்படி நம் முன்னோர்கள் அடுத்த தலைமுறையை உத்தேசித்து பனை நட்டார்களோ, அதைப்போல நாளைய தலைமுறைக்காக இன்று பனை நடவு செய்வது சரியான நடைமுறைதான்" என்றார் அவர்.

‘கள் இறக்கவும் அனுமதிக்கலாம்’

பனை மரம் குறித்து, 756 பக்கத்தில் பிரம்மாண்ட புத்தகம் வெளியிட்ட பண்ருட்டியைச் சேர்ந்த தாவரவியல் ஆய்வாளர் இரா.பஞ்சவர்ணத்திடம் கேட்டபோது, "கடந்த 3 ஆண்டுகளாக இப்படிப் பனை நடும் நிகழ்வுகள் நடக்கின்றன. சில ஊர்களில் நானே போய் ஆய்வு செய்தேன். பத்துக்கு ஒன்றுதான் முளைத்திருக்கிறது. பொதுவாகவே பனை உடனே முளைக்காது, ஆறு மாதம் முதல் 2 வருடம் வரையில் ஆகும். ஒரு வேகத்தில் ஆயிரம், இரண்டாயிரம் என்று பனை விதை நடுகிறவர்கள் கூட அதைத் தொடர்ந்து பராமரிப்பதில்லை. இது ஒரு பெரிய பின்னடைவு. சிறு கன்றாக இருக்கும்போது ஆடு, மாடு மேயாமல் பாதுகாக்கணும். அரசு மனது வைத்தால், 100 நாள் வேலைத்திட்டப் பணியாளர்களை இதற்குப் பயன்படுத்தலாம். பனை பலன் கொடுக்க 15 முதல் 19 ஆண்டுகள் ஆகும். அதுவரையில் மட்டையை எல்லாம் கழித்து, மரத்தைச் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். தமிழ்நாட்டில் காய்க்கும் பருவத்தில் உள்ள பனைகளே இப்படிச் சுத்தப்படுத்தாமல்தான் இருக்கிறது. யாராவது பார்த்தால், இந்த மரத்தால் ஒரு பிரயோஜனமும் இல்லை போல, அதான் இப்படி விட்டிருக்கிறார்கள் என்ற எண்ணமே வரும்.

இந்த நிலை மாற வேண்டும், பனையை மக்கள் பாதுகாக்க வேண்டும் என்றால், அதன் பயனை மரத்துக்காரர்கள் நுகர அனுமதிக்க வேண்டும். பனை ஓலை, மட்டை போன்றவற்றில் இருந்து கை வினைப் பொருட்களைத் தயாரித்து விற்கும் வேலையையும் மகளிர் குழுக்கள், 100 நாள் வேலைத்திட்டப் பணியாளர்களைக் கொண்டு அரசே செய்யலாம். இன்னும் எளிமையாகச் சொன்னால், கள் இறக்க அனுமதி கொடுத்தாலே போதும், மறுநாளே பனை மரங்கள் எல்லாம் மதிப்புமிக்கதாக மாறிவிடும். இப்போது பதனீர் இறக்குபவர்கள் மட்டுமே பனை ஏறுகிறார்கள். உயிரைக்கொடுத்து மரம் ஏறும் அவர்களிடமும் போய், காசு கேட்கிறார்கள் போலீஸ்காரர்கள். இறக்குவது பதநீர், ஏதோ கள் இறக்குவது போல நம்மை நடத்துகிறார்களே என்ற அவமானத்தால் பலர் மரம் ஏறுவதையே விட்டுவிட்டார்கள்" என்றார்.

ஆ.சிவசுப்பிரமணியன்

அலட்சியம் கூடாது!

பனையை முழுப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர மேலும் சில யோசனைகளைச் சொல்கிறார் ஆ.சிவசுப்பிரமணியன். “இன்னும் பதநீரைப் பதப்படுத்தி விற்கும் வழிமுறையை நாம் கண்டுபிடிக்கவில்லை. தென்னையில் குறுகிய காலத்தில் பலன் தரும் குட்டை ரகத்தைப் பரவலாக்கியதைப் போல, பனையில் குட்டை ரகம் குறித்த ஆய்வில் ஆர்வம் காட்டியிருக்க வேண்டும். வெளிநாடுகளில் இருப்பதைப்போல பனையில் எளிமையாக ஏறி இறங்குவதற்கான ஏணி உள்ளிட்ட கருவிகளை மானிய விலையில் வழங்கலாம். பனையை நட்டு 19 ஆண்டுகள் கழித்துத்தான் அது பயன்தரும் பெண் பனையா, அல்லது ஆணா என்றே கண்டுபிடிக்க முடிகிறது. ஆனால், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தாவரவியல் அறிஞர் சீனிவாசன், பனை மட்டையை எக்ஸ்ரே எடுத்தே ஆண், பெண் பனையை விடலைப் பருவத்திலேயே கண்டுபிடிக்க முடியும் என்பதை 30 ஆண்டுகளுக்கு முன்பே ஆய்வின் மூலம் நிறுவிவிட்டார். அந்தக் கண்டுபிடிப்பையும் அரசு மதிக்கவில்லை, கண்டுபிடிப்பாளரையும் கொண்டாடவில்லை. இத்தகைய அலட்சியப் போக்குகளைக் கைவிட்டாலே பனை பாதுகாக்கப்பட்டுவிடும்" என்கிறார் சிவசுப்பிரமணியன்.

கதிர்மாயா கண்ணன்

‘நிதி ஆதாரமாகும்!’

தேனி மாவட்டத்தில், கடந்த 2 ஆண்டுகளாக பனை நடவுப் பணியில் ஆர்வம் காட்டிவரும் தன்னார்வ இளைஞர் கூட்டத்தில் ஒருவரான, கதிர்மாயா கண்ணனிடம் பேசினோம்.

"தமிழகத்தில் பனை மரங்கள் குறைவாக உள்ள மாவட்டங்களில் ஒன்று தேனி. ஆனால், இங்கேயே பழனிசெட்டிப்பட்டியில் 600 பனைகள் கொண்ட பனங்காடு, ஆண்டுக்கு 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் ரூபாய்க்குக் குத்தகைக்குப் போகிறது. பெரியகுளம் நகராட்சி குப்பைக் கிடங்கு பக்கம் உள்ள சுமார் 500 பனைகள் ஆண்டு குத்தகை விடப்பட்டு நகராட்சிக்கு வருமானம் தந்துகொண்டிருக்கிறது. இதுவரையில் தேனி மாவட்டத்தில் நாங்கள் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் பனை விதைகள் நட்டு, 70 சதவீத விதைகளை முளைக்கவும் வைத்திருக்கிறோம். அதில் பாதி மரங்களாகும் என்று எடுத்துக்கொண்டாலும், அவை அனைத்தும் மாவட்ட நிர்வாகத்துக்கு எதிர்காலத்தில் பெருமளவில் வருமானம் தரும். இப்படித் தமிழகம் முழுவதும் கடந்த 3 ஆண்டுகளில் நடப்பட்ட பனைகள், இனி அரசு ஆதரவுடன் நடப்படும் பனைகள் எல்லாம் சேர்ந்தால் தமிழகத்திற்குப் பெரிய நிதி ஆதாரமாகப் பனை மாறும் வாய்ப்புள்ளது" என்றார் கண்ணன்.

பனை வளர்ப்பை ஊக்கப்படுத்தவும் பனையைப் பாதுகாக்கவும் ஆக்கபூர்வமாகச் செய்வதற்கு, இன்னும் ஆயிரம் விஷயங்கள் இருக்கின்றன. செய்யுமா அரசு?

x