நிழற்சாலை


அனிச்சை உண்ணி

அடித்த அலாரத்தை

அமிழ்த்திவிட்டுப் படுத்து

அதிகாலை உறக்கம் கலைத்ததற்காய்

வசவுகளை இறைத்து

முகம் சுளித்தபடியே

தேநீர் அருந்தும்

சராசரிகளுக்கென

பெண்ணொருத்தி

இப்போதும் இருக்கிறாள்

கும்மிருட்டில் நடக்கப் பழகிய

கால்களைக் கொண்டு

நினைவு தெரிந்த நாளிலிருந்து

ஊர் எழும் முன்

மறைவாய் ஒதுங்கிட

விடியும் முன் விழித்துவிடும்

அனிச்சை உண்ணியாகவும்

அவளே தொடர்கிறாள்.

-ந.சிவநேசன்

நன்னயம்

கல்லெறிந்து

விரட்டியவர்களுக்கெல்லாம்

ஆளுக்கொரு குட்டியினைப்

பரிசளித்தது

தெருநாய்!

- ரகுநாத் வ

மழையில் கரையும் குரல்

ஒவ்வொரு நாள்

ஒவ்வொரு இடமாக

மாறி நிற்கிறான்

வேடிக்கை பார்த்தபடியே

போய்க்கொண்டிருக்கிறார்கள்

அவரவர்க்கான

வேலைகளுடன்

இப்போது பெருமழை

பெய்கிறது அவனுக்கும்

சேர்த்து

மழையின் ஈரத்தில்

பெருங்குரலெடுக்கிறான்

மனம் பிறழ்ந்தவனுக்கும்

இருக்கிறதொரு வாழ்க்கை

என்று உணர்த்துவதுபோல...

- ஹரணி

குமிழிக் கனவுகள்

குழந்தை ஊதிய சோப்புக் குமிழ்களை

விளையாட்டாகத்தான்

உடைத்தான்

அவை ஒவ்வொன்றும் பல நூறு

குட்டிக் கனவுகளைச் சிதறடித்து

வெடிப்பதை

அறிந்திருக்கவில்லை

அவன்.

- கி.சரஸ்வதி

எதிர்பார்ப்பு

எஜமானர்

கதவைத் திறந்ததும்

ஆளுயர தாவி

உச்சி முகர்ந்து

ஏதோ சொல்ல முற்பட

வெறும் பிஸ்கட்டை

தூக்கி வீசி

கதவடைத்துச் செல்லும்

மனிதனால்

அதை

முகர்ந்துகூட பார்க்காமல்

மொத்த அன்பையும்

வாலில் சுருட்டி

மூலையில் போய்

அமர்ந்துகொள்கிறது

அந்த

நான்கு கால் நன்றி!

-கோவை நா.கி.பிரசாத்

நீர்க்கோடு

புங்கமரத்து நிழல்

படுத்திருந்த நேரம்

வண்டியோடு கட்டப்பட்ட

காளைகள் ஓய்வெடுக்க

காகம் ஒன்று குதித்தபடி

காளையின் கொண்டை

மீதேறியும் இறங்கியபடியும் இருந்தது

பாரம் சுமந்த தளர்ச்சியில்

உறங்க முடியாது தவித்த

காளையின் வாலும்

காதுகளும் காகத்தை

துரத்தும் முயற்சியில் இருந்தன

கண்களில் இருந்து வழியும்

கண்ணீர்க் கோடுகள்

மட்டுமே அறியும் காளையின்

ரணம் சுமக்கும்

காயங்களின் வலி.

- கா.ந.கல்யாணசுந்தரம்

ஆசி

ஈடாகுமாவென்று தெரியாது

இச்சிறு ரொக்கம்

ஏளனங்களை உமிழும்

நாவுகளினூடே

வாஞ்சையுடன்

தலை வருடி

ஆசி வழங்குகிறாள்

திருநங்கை.

- க. அய்யப்பன் கவித்தோழன்

சொல்ல மறந்த பாடம்

புரட்டாசி மாதம்

மூன்றாம் சனிக்கிழமை

தளியல் இட்டு

கருடனுக்காகக் காத்திருந்தார் அப்பா

கருடன் வரத் தாமதமாயிற்று

அப்பாவிடம்

ஏதோ சொல்ல முயன்றன

அப்பாவிக் காக்கைகள்


காதில் கேட்காமல்

வானத்தையே பார்த்திருந்த

அப்பா மெல்ல சீறினார்


அமாவாசையை எதிர்பார்த்துக் காத்திருந்தே

பழக்கப்பட்டுப்போன காக்கைகள்

அவரைப் பார்த்தபடி

பறக்கத் தொடங்கின


கடவுள் மனிதர்களிடம் சொல்லியிருக்கலாம்

கறுப்புக் காகங்களின் பசியைப் பற்றியும்!

- ப.தனஞ்ஜெயன்

வலியின் குரல்

அறுபட்ட மரத்தின்

வலிகளைச் சுமந்தபடி இடம் மாறுகின்றன

நீண்ட காலமாய்

வசித்த பறவைகள்

பெருமூச்சைச் சுமந்தபடி

கடந்துபோகிறார்கள்

நிழல் தேடி வந்த பாதசாரிகள்

அடையாளமாய் கொண்டு

பயணம் செய்தவர்கள்

பாதை தெரியாமல்

திசை மாறிப் பயணிக்கிறார்கள்

மரத்தை வெட்டி விற்பனை

செய்ததில் கிடைத்த லாபத்தில்

குழந்தைகளுக்கென வாங்கிவந்த

அலைபேசியின் ரிங்டோனில்

கேட்டுக்கொண்டேயிருக்கிறது

அகதியாக்கப்பட்ட பறவையொன்றின் குரல்!

-மு.முபாரக்

கைவிடப்பட்ட அதிதி

ஊரடங்கில்

பூட்டிக்கிடக்கிறது பள்ளிக்கூடம்

எங்கே பசியாறுகிறதோ

மதிய உணவு

இடைவேளையில்

வரும் அந்தக் காகம்!


- நேசன் மகதி

சமனாகும் சாபம்

அத்தனை கடைகளும் மூடப்பட்ட

பின்னிரவில்

பசியால் முனகிக்கொண்டிருக்கும்

இத்தெருநாய்க்கு

வானில் வெறுமனே

மிதந்துகொண்டிருக்கும்

நிலவைப் பிய்த்துப்போடுவதைத் தவிர

எனக்கு வேறு வழியில்லை

நட்சத்திரங்களின் சாபங்களை

சமப்படுத்திவிடும்

நாயின் ஆசிர்வாதம்.

-சௌவி

x