நோபல் பரிசு பெறும் தகுதி பெண்களுக்குக் குறைவா?


இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அனைத்தும் அறிவிக்கப்பட்டுவிட்டன. இத்தருணத்தில் நோபல் பரிசு வழங்கப்படுவதில் பாலின சமத்துவம் கடைப்பிடிக்கப்படுகிறதா என்ற கேள்வி சர்ச்சையாகியுள்ளது.

நோபல் பரிசுகள் வழங்கப்படத் தொடங்கிய 1901-ல் இருந்து இதுவரை 972 பரிசாளர்கள். அவர்களில் 58 பேர் மட்டுமே பெண்கள். அதிலும் பெரும்பாலானவை அமைதிக்கான செயல்பாட்டிற்கு வழங்கப்பட்டவை.

சமூக அக்கறையோடு செயலாற்றுவோருக்கு வழங்கப்படும் நோபல் அமைதி பரிசை பெண்கள் அதிகம் பெற்றிருக்கிறார்கள். இது அவர்களது மனிதநேயத்துக்குக் கிடைக்கும் அங்கீகாரம். இருப்பினும் அறிவுத் தளத்தில் இன்னமும் பெண்கள் ஒரு படி குறைவாகவே மதிப்பிடப்படுகிறார்களோ என்கிற சந்தேகமும் எழாமல் இல்லை!

இதை சொன்னதும் நோபல் பரிசு வென்ற ஒரே இந்தியப் பெண் அன்னை தெரசா நினைவுக்கு வருவார். அல்பேனியனாக பிறந்தாலும் இந்தியராக விளிம்புநிலை இந்தியர்களுக்காக வாழ்ந்தவர் அன்னை தெரசா. அதேபோல பெண் கல்விக்காக தாலிபான்களை எதிர்க்கத் துணிந்த பாகிஸ்தான் மலாலாவை நினைவுகூராமல் இருக்கலாகாது. அவருக்கும் இந்தியாவின் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு போராளி கைலாஷ் சத்தியார்த்திக்கும் 2014-ல் நோபல் அமைதி பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டது.

இந்தாண்டு நோபல் பரிசு அளிக்கப்பட்டதும் ஒரே ஒரு பெண்ணுக்குத்தான். அதுவும் அமைதிக்கான பரிசுதான். பிலிப்பைன்ஸ் நாட்டு இதழியலாளர் மரியா ரெஸா துணிவான சமரசமற்ற செய்தியாளராக செயல்பட்டதற்கு வழங்கப்பட்டது. அப்படியும் கடந்த ஒரு நூற்றாண்டிலும் + ஒரு தசாப்தத்தில் 17 பெண்கள் மட்டுமே அமைதிக்கான நோபல் பரிசையும் பெற்றிருக்கிறார்கள்.

இதுதவிர இலக்கியத்துக்கு 16 மகளிருக்கு மட்டுமே இதுவரை நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இவை அன்றி மருத்துவத்தில் 12 பெண்களுக்கு, வேதியியலில் 7 பெண்களுக்கு, இயற்பியலில் 4 பெண்களுக்கு மட்டுமே உலக வரலாற்றில் நோபல் அளிக்கப்பட்டிருக்கிறது. அதிலும் கதிரியக்கக் காரிகை அறிவியல் மேதை மேரி கியூரியே இயற்பியலுக்கு ஒரு முறை (1903), வேதியியலுக்கு ஒரு முறை (1911) வாங்கினார் என்பதுதான் வரலாறு. இத்தனைக்கும் உலகம் முழுவதிலும் நோபல் பரிசை இரு முறை வென்றவர்கள் நால்வர் மட்டுமே!

அப்படி பார்த்தால் 2020-ம் ஆண்டு பெண்களுக்குப் பிரகாசமாக இருந்தது. கடந்தாண்டு நோபல் விருதாளர்கள் 11 பேரில் நால்வர் பெண்கள். அதிலும் வேதியியலுக்கான நோபல் பரிசு கடந்தாண்டு இமானுவேல் சார்பென்டியர், ஜெனிஃபர் ஏ டவுட்னா ஆகிய இரண்டு பெண்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது. அதுவே 2017, 2016, 2012 ஆகிய ஆண்டுகளில் ஒரே ஒரு பெண்கூட நோபல் விருதாளர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை. அதற்கு முன்னால் 2009-ல் ஐந்து பெண்களுக்கு விருதளிக்கப்பட்டது நோபல் விருது வரலாற்றில் மைல்கல் என்றே சொல்ல வேண்டும்.

இங்கு தனிநபர் ஒருவருக்கு மட்டும் விருதையும் பணமுடிப்பையும் அளிப்பதிலும் பாலின பாகுபாடு நிலவுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுவரை தன்னந்தனியாக பெண்களின் சாதனைக்கு நோபல் வழங்கப்பட்டிருக்கிறதென்றால் அது மேரி கியூரி, பின்னர் மரபணு ஆராய்ச்சியாளரான பார்பரா மெக்ளிண்டாக், வேதியியல் அறிஞர் டொரோத்தி கிரோஃபூட் ஹஜ்கின் ஆகிய மூவருக்கு மட்டும்தான்.

இந்நிலையில், ஸ்டெம் (STEM) என்றழைக்கப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதவியல் துறைகளில் பெண்களின் பங்களிப்பை உயர்த்த வேண்டும் என்கிற குரல் அண்மைக்காலமாகப் பலமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. இருந்தபோதும் அதில் அறிவியல் புலங்களான இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என்பதை இத்துறைசார் கல்வியாளர்கள் தொடர்ந்து வருத்தத்துடன் சுட்டிக்காட்டிவருகின்றனர்.

ஒரு நூற்றாண்டுக்கு முன்பே மேரி கியூரியால் இயற்பியல், வேதியியல் துறைகளில் அளப்பரிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்த முடிந்தது. இருப்பினும் இன்று பெண்கள் இத்துறைகளுக்குள் அடியெடுத்து வைப்பது குறித்துப் பேசிக்கொண்டிருப்பது ஒரு நூற்றாண்டு பின்னோக்கி சென்றுவிட்டதை அல்லவா காட்டுகிறது!?

அதேபோல் மற்ற பரிசுகளுடன் ஒப்பிடும்போது சமூக அக்கறையோடு செயலாற்றுவோருக்கு வழங்கப்படும் நோபல் அமைதி பரிசை பெண்கள் அதிகம் பெற்றிருக்கிறார்கள். இது அவர்களது மனிதநேயத்துக்குக் கிடைக்கும் அங்கீகாரம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இருப்பினும் அறிவுத் தளத்தில் இன்னமும் பெண்கள் ஒரு படி குறைவாகவே மதிப்பிடப்படுகிறார்களோ என்கிற சந்தேகமும் எழாமல் இல்லை!

x