லென்ஸ் சிமிட்டும் நேரம் - 4


பூக்களுடனான என்னுடைய பயணத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன். முதன்முதலாக நான் எடுத்த பூக்களின் படங்களிலிருந்து, இன்று எடுத்த படங்கள் வரை, பிறகு என்னுடைய போஸ்ட் பிராசஸிங்கில் நான் மேற்கொண்ட மாற்றங்கள் என பல தகவல்களை, அடுத்து வரும் 2 அத்தியாயங்களில் பார்க்கலாம்.

பூக்கள் மீது எப்பொழுதிலிருந்து ஈடுபாடு வந்தது என சொல்லத் தெரியவில்லை. மதுரையில் பிறந்து வளர்ந்ததால் மல்லிகை மற்றும் வாசனை நிறைந்த பூக்கள் என் வாழ்க்கையின் ஓர் அங்கமாகவே மாறி விட்டிருந்தன. குழந்தைப் பருவத்தில், ரெட்டை ஜடை பின்னி ரிப்பன் போட்டுக் கட்டி, ஒரு முழம் பூவை தலையில் வைத்துக்கொண்டுதான் தினமும் பள்ளி சென்றதாக ஞாபகம்.

பின்பு கல்லூரி செல்லும்போது தினமும் தெருவில் ‘ஊட்டி ரோஸ்’ விற்றுக்கொண்டு வருவார் ஓர் பெண். அதில் சற்று விரியாமல் மொட்டாய் இருக்கும் பூக்களைத் தேடிஎடுத்து வாங்கி, தினமும் தலையில் வைத்துக்கொண்டு போவது வழக்கம். பின்பு, வீட்டு மொட்டை மாடியில் தோட்டம் போட்டிருந்த சமயம், நானும் அழகழகான பூச்செடிகளை வாங்கி வளர்த்திருக்கிறேன். குறிப்பாக, குற்றாலத்தில் பாட்டிவீட்டின் அருகிலிருந்த தோட்டத்திலிருந்து கொண்டு வந்த ஓர் வெள்ளை பட்டன் ரோஜா செடி இன்னும் என் நினைவில் இருக்கிறது.

அம்மாதிரியான செடியை இன்னும் இங்கு பெங்களூருவில் தேடிக்கொண்டிருக்கிறேன்; கிடைத்தபாடில்லை. குற்றாலம் என்றதும் எல்லோருக்கும் நினைவில் வருவது, அருவி மற்றும் அங்கு பிரத்தியேகமாக கிடைக்கும் பழவகைகள்தான். ஆனால் எனக்கோ, பழைய ஜமீன்தாரிடமிருந்து தாத்தாவின் தாத்தா வாங்கிய பங்களாவும், அங்கு விடுமுறையைக் கழித்த அழகிய நினைவுகளும்தான். அதிலும் மழைக்காலத்தில், மண்வாசனையுடன் கலந்த செம்பிச்சியின் நறுமணம் இன்றும் மனதை வருடத்தவறுவதில்லை. இம்மாதிரியான நினைவுகளே, நான் பூக்களை படமெடுக்க தூண்டுதலாக இருந்திருக்க வேண்டுமென நினைக்கிறேன்.

நான் முதன் முதலில் கேமராவைத் தொட்டது 2000-ம் ஆண்டில் தான். கல்யாணம் ஆன புதிதில் பாலாஜி வாங்கிக் கொடுத்த ‘மினோல்டா ஃபிலிம் எஸ்எல்ஆர்’ அது. அமெரிக்காவில் இருந்த ஒரு வருட காலத்துக்குள், அதில் ஏகப்பட்ட படங்கள் எடுத்து முடித்திருந்தேன். இந்தியா திரும்பிய பிறகும் அதில் எடுத்த படங்கள் ஏராளம். அப்பொழுதுதான் அனைவரும் டிஜிட்டலில் மாறிக்கொண்டிருந்த சமயம், ஃபிலிம் கேமராவில் படங்கள் எடுத்து, அதை டெவலப் செய்ய ஒவ்வொரு 36 படங்களுக்கும் 500 ரூபாய்க்கு மேல் செலவு செய்ய வேண்டி இருந்ததால், சிறியதாக ‘கேனான் பவர் ஷாட்’ கேமரா ஒன்றை வாங்கினேன்.

கேமரா கையில் இருந்ததால் அடிக்கடி லால்பாக் செல்ல ஆரம்பித்து, பூக்களையும், சன்செட் படங்களையும் எடுக்க ஆரம்பித்தேன். பின்பு கொஞ்சம் கொஞ்சமாக படங்கள் எடுப்பதில் ஆர்வம் அதிகமாகவே, ‘கேனான் 550-D’ வாங்கி பூக்களை படமெடுக்கத் தொடங்கினேன். முதலில் எந்தவொரு எக்ஸ்ட்ரா எஃபெக்ட்ஸும் இல்லாமல், பார்த்ததை அப்படியே இணையத்தில் பகிர ஆரம்பித்தேன். அங்கு கற்றுக்கொண்டது ஏராளம். இணையத்தில் பல புகைப்படக் கலைஞர்களின் படங்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அதிலிருந்து நிறைய கற்றுக்கொள்ளும் ஆர்வமும் அதிகமானது. ஆனால், புகைப்படக் கலையைக் கற்றுக்கொள்வது அவ்வளவு எளிமையாக இருந்துவிடவில்லை.

புகைப்படக்கலையை கற்றுக்கொள்ள ஆரம்பித்த சமயம், ஒரு துறையில் மட்டும் படமெடுக்காமல் எல்லா துறையிலும் கவனம் செலுத்திக் கொண்டிருந்தேன். எந்தத் துறையில் ஆர்வம் என தெரிந்துகொள்ள வேண்டுமே! ஆகையால் ஒவ்வொரு துறையிலும் தேர்ச்சி பெற்ற பலருக்கும், எனக்கு ஏற்பட்ட சந்தேகங்களை மின்னஞ்சலாக அனுப்பி அவர்களுடைய பதில்களின் மூலம் கற்றுக்கொண்டேன். அதிகம் பேர் எனது சந்தேகங்களை ஆர்வத்துடன் தீர்த்துவைத்திருக்கிறார்கள். ஒருசிலர், நம்மை கண்டுகொள்ளாமல் போனதும் உண்டு. எவ்வளவு முறை கேட்டாலும் மவுனம் மட்டுமே அவர்களின் அக்மார்க் பதிலாக இருக்கும். அப்படியானவர்களைக் கடக்கும் போது, மனம் கொஞ்சம் வருத்தப்படத்தான் செய்தது. அப்படியான காலகட்டத்தில் நான் எடுத்த புகைப்படங்கள் அனைத்திலும் அதிக கான்ட்ராஸ்ட், அதிக கலர், அதிக ஷார்ப்னஸ் என எல்லாமே சற்று தூக்கல்தான்.

போஸ்ட் பிராசஸிங் கற்றுக்கொண்டிருந்த சமயம். வீட்டிலிருந்த கம்ப்யூட்டரில் விண்டோஸ் இல்லாததால், போட்டோஷாப்புக்கு இணையான மென்பொருளை தேடும்பொழுது GIMP பற்றியும், Darktable பற்றியும் தெரிந்து கொண்டேன். ஆனால், அப்பொழுது அதற்கான வீடீயோஸ் யூடியூபில் சற்று குறைவுதான். ஆகவே, போட்டோஷாப்பில் என்ன செய்கிறார்களோ அதை அப்படியே GIMP-ல் செய்து பார்த்துக் கொள்வேன். முதல் முறையே சரியாக வந்து விடுமா என்ன... விடாது முயற்சி செய்து பலமுறை தோற்று மறுபடியும் முயற்சி செய்து... இப்படிக் கற்றதுதான்.

ஒருகட்டத்தில் பூக்களையும் இயற்கை எழிலையும் பதிவுசெய்து கொண்டே, நான் மேற்கொள்ளும் பயணங்களையும் கட்டுரைகளாக பதிவுசெய்ய ஆரம்பித்தேன். பயணங்கள் எப்பொழுதும் சாத்தியப்படுவதில்லை. ஆகவே, பயணத்தில் எடுக்க படங்கள் இல்லாத சமயத்தில் எடுக்க ஆரம்பித்ததுதான் பூக்கள். பூக்களும் வருடத்தின் எல்லா நாட்களும் பூப்பதில்லை. எப்போதும் பூக்களை படமெடுக்க என்ன செய்வது என சிந்திக்கும்போது கிடைத்ததுதான் இந்த யோசனை. அது என்னவென்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.

x