‘இசையாலே நான் வசமாகினேன்...’


சீனிவாசன்

இசைத் தட்டுகளின் காலமெல்லாம் மலையேறிப் போய்விட்ட இந்தக் காலத்தில், இசையின் இனிமையை அனுபவிக்கத் தெரிந்த அன்பர் சீனிவாசன், 6 ஆயிரம் இசைத்தட்டுகளை பொக்கிஷம் போல் பாதுகாத்து வைத்து இன்றைக்கும் அதன் மூலமே பாடல்களை கேட்டு ரசிக்கிறார் என்று கேள்விப்பட்டு அவரை சந்தித்தோம்.

நட்சத்திர ஓட்டல் ஒன்றின் இயக்குநராக இருக்கும் சீனிவாசனுக்கு கோவை அருகே இருக்கும் பூண்டி, செம்மேடு சொந்த கிராமம். அங்கே உள்ள தனது பூர்விக வீட்டில்தான் இந்த இசைத்தட்டு பொக்கிஷங்களை வைத்துள்ளார். சனி, ஞாயிறுகளில் மட்டும் அங்கே இருப்பதையும், அன்றைய மாலைப்பொழுதுகளை இசைத்தட்டுக்களின் இசை மழையில் லயிப்பதையும் வழக்கமாக க்கொண்டிருக்கிறார்.

ரிக்கார்டு பிளேயர்

பழங்கால அரண்மனை போன்று வீடு. மாடியில் ஒரு தனி அறை. ‘பூங்காற்றே தீண்டாதே... என் நெஞ்சைத் தூண்டாதே!’ என்ற குங்குமச்சிமிழ் பட பாடலில் லயித்து இருந்தார் சீனிவாசன். கண்கள் மூடி, கைகள் தொடையில் தாளமிட்டபடி அமர்ந்திருந்த அவருக்கு எதிரில் 2 ரெக்கார்டு பிளேயர்கள். அதில் ஒன்றில் இசைத்தட்டு சுழன்றபடி இருந்தது. சற்று தொலைவில் ஸ்பீக்கர் பெட்டிகள். சுற்றிலும் ஏகப்பட்ட பீரோக்கள். ஒரு பகுதியில் டேபிள். அந்த அறைக்கும் எங்கு திரும்பினாலும் இசைத் தட்டுகள் மயம்.

கொஞ்ச நேரம் நம்மையும் இசைத்தட்டு மழையில் நனைத்துவிட்டுப் பேச ஆரம்பித்தார் சீனிவாசன்.

‘‘நான் எல்கேஜி படிக்கும்போதே என்னோட பெரியப்பா ஒரு ஹெச்எம்வி ஃபியஸ்ட்டா பிளேயரும், 20 ரெக்கார்டும் எனக்குப் பரிசா கொடுத்தார். அதுலயிருந்தே எனக்கு இசையும், இசைத்தட்டுகளும் கூடப் பிறந்த சொத்தாவே ஆயிடுச்சு. அந்த மோகம் இப்பவும் விடவில்லை.

இப்ப எங்கிட்ட 1907-ல் பெங்களூரு நாகரத்தினம்மா பாடின பாடல் முதல் லேட்டஸ்ட்டா இந்தியில் ரிலீஸ் ஆன இசைத்தட்டுகள் வரை சுமார் 6 ஆயிரம் இசைத்தட்டுகள் இருக்கு. இப்பவும் இந்தியில் இசைத்தட்டுகள் வெளிவந்துட்டிருக்கு. 4 வருஷம் முன் நானே ஒரு குரூப் சேர்த்து சோனி கம்பெனியிலயும், எச்எம்வி-யில் சரிகம-லயும் பேசி ஏ.ஆர்.ரகுமானோட 300 எல்.பி-யை ஒண்ணு ரிலீஸ் பண்ணினோம். அதுக்குப் பின்னாடி பார்த்தா இசைத்தட்டுக்கு உள்ள கிராக்கியப் பார்த்து அவங்களே புதுப்புது படங்களுக்கு இசைத்தட்டு வெளியிட ஆரம்பிச்சுட்டாங்க. இப்ப இந்தியில் 40-50 படங்களுக்கும், மலையாளத்தில் 2 படங்களும் இசைத்தட்டு போட்டிருக்காங்க. அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகள்ல லேட்டஸ்ட் ரிலீஸ் எல்லாமே இப்ப இசைத்தட்டுதான்!’’

அலமாரிகள் நிறைய இசைத்தட்டுகள்

‘‘இசை கேட்க எத்தனையோ தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. எப்படி இன்னமும் இந்த ரெக்கார்டு பிளேயரை வைக்க உத்வேகம் வந்தது?’’

‘‘பாட்டுக்கு மூலதனம் இதுதான். ஹிஸ்ட்ரி ரிப்பீட்டு என்கிற மாதிரி முன்னே ஒலிநாடாக்களே இருந்தது. அது இசைத்தட்டுக்கு மாறுச்சு. அதுக்கப்புறம் எத்தனையோ மாற்றங்கள் வந்தாலும் உலகம் திரும்பவும் இசைத்தட்டுக்கேதான் போகிறது. வெளிநாடுகள்ல எல்லாம் பார்த்தீங்கன்னா... இசைத்தட்டுகளோட வியாபாரம் கூடிட்டே இருக்கு. யாருக்குமே ஒரு ஸ்டேஜூக்குப் பிறகு இந்தப் பொருட்களை பராமரிக்க முடியாது. ஒரு பெரிய இடத்தை அடைச்சிட்டு இருக்கும். கேசட் போய் சிடி வந்தவுடனே அதையே வாங்கி குவிச்சோம். அதுக்கப்புறம் யுஎஸ்பிஎன் போனோம். அப்புறம் ஸ்ட்ரீமிங் போனோம். ஆனா நான் இன்னும் மாறலை.’’

அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் இசைத்தட்டுகள்

‘‘இதைப் பராமரிப்பது கஷ்டமாயிற்றே. இசைத்தட்டுகளை அடிக்கடி போட்டுக் கேட்காவிட்டால் பூஞ்சை படர்ந்து வீணாகப் போய்விடும்தானே?’’

‘‘நிச்சயமா. நான் சும்மா எண்ணிக்கைக்கு இதை வச்சிருக்கறதில்லை. எனக்குப் பிடிச்ச பாடல்களை கண்டிப்பா வாங்குவேன். கேட்பேன். இங்கே இருக்கிற இசைத்தட்டுகள் எல்லாமே நான் போட்டுக் கேட்டதுதான். கேட்டுக்கிட்டே இருக்கிறேன். புத்தகம் எப்படி கரையான் அரிக்குமோ ‘ஸ்டேட்டிக் டஸ்ட்’னு சொல்லக்கூடிய நம்ம காற்றுல இருக்கிற அழுக்கை ஈர்க்கும் சக்தி இந்த மெட்டீரியலுக்கு இருக்கு. அதனால துடைச்சு குறிப்பிட்ட ‘டெம்பரேச்சர் - கண்ட்ரோல்’ல இருக்கணும். வெயில் படக்கூடாது. அதிகமான ஈரப்பதமும் இருக்கக் கூடாது. அப்படி இருந்தா வளைஞ்சுடும்.’’

ஒலிபெருக்கி

“இதற்கும், தற்போதைய டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் பாடலைக் கேட்பதற்கும் என்ன வித்தியாசத்தை உணர்கிறீர்கள்?’’

‘‘டிஜிட்டல்ல வர்றது ‘ஸ்கொயர் வேவ்ஸ்’ன்னு சொல்றோம். இதுல இருக்கிறது ‘சைன் வேவ்ஸ்’. இசைக்கான மென்மைத்தன்மை (ஸ்மூத்கவர்ஸ்) இசைத்தட்டில் நல்லாயிருக்கும். புதுப்பாடல்கள் எல்லாமே டிஜிட்டல் ஆயிருச்சு. அதனால் அதை டிஜிட்டல்லயே கேட்டுட்டுப் போயிடறோம். ஆனா பழைய பாடல்களை, டிஜிட்டலில் மாற்றும்போது, அதனுடைய ஃபிளேவர் மாறிப் போயிடுது. வாய்ஸ், மியூஸிக்கின் டெப்த், பேஸ் நோட்ஸ் எல்லாமே மாறிடுது. இசைத்தட்டு, ஒலிநாடாவில் கேட்கும்போது அந்த ஆர்கெஸ்ட்ரா வந்து நம்ம முன்னாடி ‘பர்பார்ம்’ பண்ற அனுபவமே கிடைக்குது. வீணை வாசிக்கறதுக்கும், கீ போர்டுல அதை வாசிக்கறதுக்கும் வித்தியாசம் இருக்குதுதானே.’’

ரிக்கார்டு பிளேயர்

சனி, ஞாயிறுகளில் மதிய உணவுக்குப் பின்பு தன் இசைத்தட்டு லைப்ரரிக்கு வந்து விடும் சீனிவாசன் 2 மணி நேரம் பாடல்களை கேட்கிறார். மீண்டும் இரவு உணவு முடித்து விட்டு 12 மணிவரை இந்த இசை உலகிலேயே வாழ்கிறார். இவரைப் போலவே இசைத்தட்டு சேகரம் செய்து, அதில் பாடல்கள் கேட்பவர்கள் இந்திய அளவில் மட்டுமல்ல, உலக அளவிலும் பலர் உள்ளனராம். அவர்களில் சிலர் தொடர்பும் சீனிவாசனுக்கு உள்ளது.

“எல்லாம் சரி... உங்களுக்குப் பாட வருமா?” என்று கேட்டால் சிரிக்கும் சீனிவாசன், ‘‘பாட்டை ரொம்ப ரசிப்பேன். நான் பாடினேன்னா அது வசனமா இருக்கும்னு வச்சுக்குங்க.’’ என்கிறார்.

ஜவஹர்லால் நேரு பேச்சு இசைத்தட்டு

மாதம்பட்டி சிவகுமார், சத்யராஜ், சிவகுமார் போன்றோருக்கு சீனிவாசன் உறவுக்காரர். எம்.எஸ்.விஸ்வநாதன், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், பி.பி.ஸ்ரீனிவாஸ், எஸ்.ஜானகி உள்ளிட்ட பிரபலமான இசை மேதைகளை நேரில் சந்தித்த அனுபவம் இவருக்குள் இருக்கிறது. அவர்களிடமெல்லாம் இசையைப் பற்றி சிலாகித்துப் பேசியிருந்தாலும், தன்னிடம் இப்படியொரு கலெக்‌ஷன் இருப்பதை ஒருபோதும் சொல்லிக் கொண்டதில்லையாம். ஆச்சரியமான மனிதர்தான்!

x