ஜாகீர் உசேன் என் பெயராகும்... வைணவம் என் வாழ்வாகும்!


ஜாகீர் உசேன்

புகழ்பெற்ற பரதநாட்டியக் கலைஞர் ‘கலைமாமணி’ ஜாகீர் உசேன் திமுகவில் இணைந்திருக்கும் செய்தி கவனம் ஈர்த்திருக்கிறது.

இஸ்லாமியராகப் பிறந்து, வைஷ்ணவராக வாழ்ந்துவரும் ஜாகீர் உசேன், பரதநாட்டியம் கற்றுக்கொள்ள குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டைவிட்டே வெளியேறியவர். மத வேறுபாடுகளைக் கடந்து பிராமணர் வீடுகளில் குருகுல முறையில் தங்கி பரதம் கற்றவர். இவரது வாழ்க்கை வரலாற்றை ‘ஹிந்துஜா' குரூப் எக்ஸிக்யூட்டீவ் வைஸ் சேர்மன் சேஷசாயி எழுதியிருக்கிறார். விரைவில் அந்நூல் வெளிவரவிருக்கும் நிலையில், ‘காமதேனு’ மின்னிதழுக்காக ஜாகீர் உசேனிடம் பேசினோம்.

“பரதநாட்டியம் உங்களுக்கு எப்படி அறிமுகமானது?

உங்கள் உறவினர்கள் அதை எப்படி ஏற்றுக் கொண்டார்கள்?” என்று அடுக்கடுக்காய் நாம் கேட்ட அத்தனைக் கேள்விகளுக்கும் பொறுமையாகப் புன்னகையுடன் பதில் சொன்னார் ஜாகீர்.

“என் குடும்பத்திலோ, முன்னோர்களிலோ ஒருவர்கூட நடனக் கலைஞர் கிடையாது. பிறந்து வளர்ந்தது எல்லாமே தர்மபுரி மாவட்டம் குறிஞ்சிப்பட்டி கிராமம். சாதி, மதம் கடந்து அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்த ஊர். அப்பா முகமது ஹனீப் பள்ளி ஆசிரியர். அம்மா பெயர் சலாமத் பேகம். விவரம் தெரியும் முன்பே என்னை, பெரியப்பா அப்துல்லா வீட்டுக்குத் தத்துக் கொடுத்துவிட்டார்கள். பெரியப்பா ஒரு நாத்திகர். 1950-களிலேயே சாதி, மத மறுப்புத் திருமணம் செய்துகொண்டவர். பெரியம்மா அலமேலு மங்கா, நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர். திருமணத்துக்குப் பிறகும் பெரியம்மா ஒரு இந்துவாகவே வாழ்ந்தார். அவர் நெற்றியில் பொட்டு வைத்துக்கொண்டு பெருமாள் கோயிலுக்குச் செல்வதைப் பெரியப்பா தடுத்ததே இல்ல. தாய் எந்த மத நம்பிக்கையில் இருக்கிறாரோ, அந்த நம்பிக்கைதானே பிள்ளைகளுக்கும் வரும்? அப்படித்தான் எனக்கும் பெருமாள், ஆண்டாள் மேல் பக்தி வந்தது.

என் தமிழாசிரியர் பழனி செட்டி எனக்கு இலக்கிய ஆர்வத்தை ஏற்படுத்தினார். சிலப்பதிகாரத்தில் சில பாடல்களையும், ஆண்டாள் பாசுரங்களையும் முழுமையாக மனப்பாடம் செய்தேன். சினிமா மூலம்தான் எனக்குப் பரதநாட்டியம் மேல் ஈர்ப்பு வந்தது. குறிப்பாக, பத்மினி, வைஜெயந்தி மாலாவின் நடனம் பெரிய ஈர்ப்பைத் தந்தது. ‘தில்லானா மோகனாம்பாள்’, ‘திருவிளையாடல்’ ஆகிய படங்களைப் பலமுறை பார்த்து ரசித்திருக்கிறேன்.

நான் 10-ம் வகுப்பு படித்தபோது பெரியப்பா காலமாகிவிட்டார். அதனால் மறுபடியும் என்னோட உண்மையான பெற்றோரிடம் போக வேண்டிய நிலை. அப்பா தினமும் 5 வேளை தொழுபவர். நானோ கோயில் குளம் எனச் சுற்றிக்கொண்டிருந்தேன். இப்படி பல முரண்பாடுகள். அப்படியான ஒரு சூழலில் பரதம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொன்னதால், வீட்டில் கடுமையான எதிர்ப்பு. இனிமேல் இந்த இடம் ஒத்துவராது என வீட்டைவிட்டு வெளியேறி சென்னைக்கு வந்துவிட்டேன்” என்றவருக்கு, முறைப்படி பரதநாட்டியம் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கொஞ்சம் தாமதமாகவே கிடைத்திருக்கிறது.

தொடர் முயற்சியின் காரணமாக இவருக்குப் பலரின் உதவி கிடைத்திருக்கிறது. அப்படி உதவியவர்களில் நடிகர் ரஜினிகாந்த், நல்லி குப்புசாமி, சத்யராஜ் ஆகியோரும் உண்டு. பிரபல பரதநாட்டிய கலைஞர் சித்ரா விக்னேஸ்வரனிடம் குருகுல முறையில் பரதம் கற்றுக்கொண்டு, பிறகு தன்னுடைய பாணியையும் சேர்த்துக்கொண்டு வெற்றிகரமான பரதக் கலைஞரானார் ஜாகீர்.

இவரது அரங்கேற்ற நிகழ்வு சென்னையில் சத்யராஜ் முன்னிலையில் நடந்திருக்கிறது. நாளடைவில் புகழ்பெற்ற வைணவத் தலங்களான திருவரங்கம், திருமலை, திருவில்லிபுத்தூர், பெரும்புதூர், திருக்குறுங்குடி போன்ற கோயில்களில் நடனமாடும் அளவுக்குப் புகழ்பெற்றார் ஜாகீர். ஆண்டாள் பாசுரங்கள் 173-ஐயும் பக்திப் பரவசத்துடன் பாடும் வல்லமை பெற்ற இவர், பல கோயில்களில் உபன்யாசமும் செய்திருக்கிறார்.

“இந்த அளவுக்கு வைணவத்தில் ஊறித் திளைக்கக் காரணம் என்ன?” என்று கேட்டால், “எப்படி இந்து மதத்தின் மீதான ஆவல் என்னைப் பரதநாட்டியக் கலைஞனாக்கியதோ, அதே ஆர்வம் இந்து மதத்தைப் பற்றி ஆழமாக உள்வாங்கிக் கொண்டால்தான் உணர்வுபூர்வமாக ஆட முடியும் என்ற புரிதலையும் தந்தது. கோயில் கோயிலாகப் போய் ஆராய்ச்சி செய்தேன். பெரிய பெரிய வைணவப் பெரியவர்கள் எல்லாம் என் ஆராய்ச்சிக்கு உதவினார்கள். வைணவ ஆகமங்களான பாஞ்சராத்ர ஆகமம், வைகனாச ஆகமம் குறித்து ஆய்வுசெய்து அவற்றில் உள்ள சடங்கு முத்திரைகளை எல்லாம் பரதநாட்டியத்தின் அபிநயங்களாக வெளிப்படுத்தினேன். நாட்டிய உலகிற்கே புதிய பரிமாணத்தைத் தந்த இந்த அபிநயங்களை இன்று நிறைய கலைஞர்கள் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள்” என்று பெருமையாகச் சொல்கிறார் ஜாகீர்.

“இதை எல்லாம் உங்கள் உறவினர்கள் எதிர்க்கவில்லையா? கோயில்களில் நீங்கள் ஆடுவதை இந்துக்கள் ஏற்றுக்கொண்டார்களா?” என்று கேட்டால், “நான் எனக்கான அங்கீகாரத்தை மக்களிடம் இருந்துதான் எதிர்பார்த்தேனே தவிர, வீட்டில் இருந்து எதிர்பார்க்கவில்லை. பிறந்த வீடான இஸ்லாத்திலும் சரி, புகுந்த வீடான வைணவத்திலும் சரி என்னை யாரும் எதிர்க்கவில்லை. காரணம், நான் எந்த மதத்தையும் இது உயர்ந்தது, அது தாழ்ந்தது என்று மனதால்கூட எண்ணியதில்லை” என்றார் ஜாகீர்.

x