கொஞ்சம் ஓவராத்தான் போயிட்டோமோ!


அடுத்த சீட்டு அண்ணாச்சி கிட்ட வந்து உரசினார். நிமிர்ந்து பார்த்தா, “கூப்பிட்டா திரும்பல. அதான்”னு வழிஞ்சாரு.

“சொல்லுங்க”னு முனகினதும், “500 ரூபாக்கு சேஞ்ச் இருக்கா”னு கேட்டாரு. வேலை மும்முரத்துல இருந்ததுல அவர்ட்ட இல்லைன்னு சொன்னாலும் நம்ப மாட்டார், பர்சைக் காட்டுன்னு அடம் பிடிப்பாரேன்னு படக்குன்னு பர்சை எடுத்துத் தொலைச்சிட்டேன்.

“அவ்ளோ இல்லே”ன்னதும் “சரி. அந்த நூறு ரூபாயைக் கொடுங்க. மாத்தித் தரேன்”னு வம்படியா வாங்கிகிட்டாரு. என் முகம் சுளிச்சதைக் கண்டுக்காம கையைப் பிடிச்சாரு.

“இருங்க. இன்னொருக்க பர்சைக் காட்டுங்க. அட காட்டுங்கன்னா...”

பர்சுல அம்மிணி போட்டோ இருக்கும். அதை நான் வைக்கல. மகனார் வச்சது. “அம்மா போட்டோவை வச்சுக்குங்க”னு அம்மிணிக்கு எதிர்த்தாப்ல ஒருக்க சொல்லி நல்ல பேர் வாங்கிட்டாரு.

“அப்பிடியே இருக்காங்க”னு சவுண்டு விட்டாரு. என்னய்யா சொல்றன்னு பார்த்தா மனுசன் ஒரு கதையை எடுத்து வுட்டாரு.

“சொன்னா நம்ப மாட்டிங்க”னு பில்டப் பண்ணாரு.

“சரி. சொல்லாதீங்க”ன்னு தலையைக் கவுத்தா நிமித்தி விட்டாரு.

“ஒலகத்துல ஒரே மாதிரி ஏழு பேர் இருப்பாங்கன்னு சொல்வாங்களே. உங்க மேடம் மாதிரியே ஒருத்தங்க இருக்காங்க.”

இதுல என்ன அதிசயம்னு அசால்ட்டா இருந்தேன். ஒரு அம்மிணியையே தாங்க முடியல. ஏழு பேரான்னு ஒரு நடுக்கம்.

“இதோ வரேன்”ன்னுட்டு போனவர் ஒரு போட்டோவோட திரும்புனாரு. “பர்ச்சேஸ் டிபார்ட்மென்ட்ல சுரேந்தர் இருக்கார்ல. அவரோட மிசஸ் போட்டோ. பாருங்க.”

திகைச்சுத்தான் போயிட்டேன். அசப்புல அப்படியே அம்மிணி மாதிரியே இருந்தாங்க.

“அட ஆமா”னு தலையாட்டுனேன். “ஒங்க பர்சைக் கொடுங்க. அவர்ட்ட போய் காட்டிட்டு வரேன்”னு பர்சுல கையை வச்சாரு.

“நானே வரேன்”னு போனேன். ரெண்டு அம்மிணி போட்டோவையும் பக்கத்து பக்கத்துல வச்சோம்.

“உத்துப் பார்க்கறது கூட அப்பிடியே அதே லுக்கு”னு சுரேந்தர் சொல்லிட்டு, “நம்ம வீட்டுக்கு அழைச்சுகிட்டு வாங்க”னு அன்பா அழைப்பு விட்டாரு.

என் பக்கத்து சீட்டு அண்ணாச்சி உடனே குஷியாகி, “பார்த்தீங்களா. என்னால தானே இப்படி ஒரு அதிசயம் நடந்துச்சு”னு சொல்லி, சுரேந்தர்ட்டயும் நூறு ரூபா கைமாத்தா வாங்கிட்டுப் போயிட்டாரு.

அப்பதான் எனக்குள்ர ஒரு ஃப்ளாஷ் மின்னுச்சு. சுரேந்தர்ட்ட சொல்லவும் அவரும் ஏத்துக்கிட்டாரு. அன்னிக்கு ஈவ்னிங் வீட்டுக்கு வந்ததும் பர்சை வழக்கமான எடத்துல வைக்காம டேபிள் மேல போட்டேன். விசிறின வேகத்துல ஓப்பனா விழுந்துச்சு.

முதல்ல அம்மிணியும் கவனிக்கல. நாலு தடவை குறுக்கே நெடுக்கே போனாங்க. அப்புறம் பர்சு கண்ணுல படவும், “இப்படி அலட்சியமா போட்டுட்டு... அவசரமா கெளம்புறப்போ பர்சு எங்கேன்னு சத்தம் போடுவீங்க”னு விரிச்சாப்லயே பர்சை எடுத்தாங்க.

“பரவாயில்லியே. என் போட்டோவைத் தூக்கிப் போடாம அப்படியே வச்சுருக்கீங்க”னு சர்டிஃபிகேட் கொடுத்தாங்க. மகனார்ட்டயும் பெருமையாக் காட்டுனாங்க.

“கொஞ்சம் இரும்மா...” மகனார் டக்குனு உத்துப் பார்த்துட்டு, “இது உங்க போட்டோ இல்லியே”ன்னு சொன்னாரு.

அம்மிணி இப்பதான் சுதாரிச்சுக்கிட்டு கவனிச்சாங்க. “ஆமா. அப்பவே நினச்சேன். என் போட்டோ இல்லியேன்னு தான் கிண்டலா சொன்னேன்”னு சமாளிச்சாங்க. திரும்பி என்னைப் பார்த்து முறைச்சாங்க.

“எவ அவ.”

நான் மகனார் பக்கம் திரும்பிட்டேன். நம்ம சைடு வீக்கா இருந்தா அணியை பலப்படுத்திக்கணும்னு தெரியும்.

“அப்டியே நம்ம அம்மா மாதிரியே இருந்துச்சா. நீ கூட ஒரு நிமிஷம் உத்துப் பார்த்துட்டு தானே இல்லைன்னு சொன்னே.”

நியாயத் தராசு மகனார் மனசுல இருந்துச்சு. அதேநேரம் அம்மாவைப் பகைச்சுக்கக்கூடாதுன்னு புத்தி சொல்லுச்சு. ரெண்டு விதமாவும் தலையாட்டிட்டு ஓடிட்டார்.

“எங்க ஆபிசு தான். இன்னிக்குத் தான் தற்செயலா தெரிஞ்சுச்சு. அவர் வீட்டுக்கு வரச் சொல்லி இருக்காரு. போவோமா”னு கேட்டேன்.

அம்மிணி மனசுல சின்னதா ஒரு பட்டிமன்றம் நடந்துச்சுன்னு தெரிஞ்சுது. கடைசில, “போவலாம்” அணி ஜெயிச்சிருச்சு.

“நேர்ல பார்த்தா ஒங்களுக்கே புரியும்னு தான் வரேன்”னு சவடாலா சொன்னாங்க.

அந்த ஞாயிறு போயிட்டோம்.

நாங்க கிளம்பும்போதே சுரேந்தர்ட்ட ரகசியமா மெசெஜ் பண்ணிட்டேன். “எங்க அம்மிணி பச்சைக் கலர் புடவை”ன்னு. இதுவும் ஏற்கெனவே பேசி வச்சது.

அவருதான் வரவேத்தாரு. உள்ர போனோம். ஹால்ல ஒக்காரச் சொல்லிட்டு அவரோட அம்மிணியைக் கூப்பிட்டாரு. வந்து நின்னாங்க.

எங்க அம்மிணிக்கு கொஞ்சம் ஷாக். சுதாரிச்சுக்கிட்டுப் பேச ஆரம்பிச்சுட்டாங்க. டிபன் காபிலாம் கொடுத்தாங்க. ரெண்டு அம்மிணியும் அடுத்த ரூமுக்குப் போய் அரை மணி பேசுனாங்க.

கிளம்புறப்போ, “நீங்களும் எங்க வீட்டுக்கு வாங்க”ன்னு இன்வைட் பண்ணோம். திரும்பி வரப்போ அம்மிணி எதுவும் பேசலை. வீட்டுக்குள்ர வந்ததும் புயல் வேகத்துல ஆரம்பிச்சாங்க பாருங்க.

“அந்தம்மிணிக்கு நேர் வகிடாவா இருந்துச்சு. எலி வால் மாதிரி முடி. கண்ணு வேற டோரிக் கண்ணு. என்னைப் பாக்குதா ஒங்களைப் பாக்குதான்னே தெரியல. ஒரு காலைச் சாச்சு நடந்தாங்க. நான் எவ்ளோ ஸ்லிம்மா இருக்கேன்னு அவங்களைப் பார்த்துதான் புரிஞ்சுது. கை ரெண்டும் தும்பிக்கை மாதிரி.”

படபடன்னு பாய்ன்டா அடுக்கிட்டே போனாங்க. விட்டா அந்த அம்மிணி அம்மிணியே இல்லைன்னு சொல்லிருவாங்களோன்னு நடுங்கிட்டேன்.

“நீ சொல்றது சரிதான்... அவங்கல்லாம் உம் பக்கத்துல நிக்க முடியுமா”னு சரண்டர் ஆன பிறகு தான், பொது மன்னிப்பு கொடுத்தாங்க.

“ஒங்களுக்கு ஏன் தான் புத்தி இப்படிப் போவுதோ”ன்னு ஃபைனலா சொன்னாங்க.

மகனார் வந்து ரகசியமா தோளைத் தட்டுனாரு. அம்மிணி வராப்ல தெரிஞ்சதும் ஓடிட்டாரு.

மொட்டை மாடிக்கு வந்து சுரேந்தருக்கு போன் செஞ்சா எடுக்கவே இல்லை. அப்புறம் ஸ்விட்ச் ஆஃப்னு வந்துருச்சு. ரெண்டு மணி நேரங்கழிச்சு ஒரு வாய்ஸ் மெசெஜ். குரல்லயே அவ்ளோ நடுக்கம்.

“வேடிக்கையா நினைச்சு வம்புல மாட்டிக்கிட்டோம். தவறிப்போய்க் கூட இனி ரெண்டு அம்மிணியும் சந்திச்சுரக் கூடாது.”

கொஞ்சம் ஓவராத்தான் போயிட்டோமோ!

x