மீனவர்களின் மீட்பர்!


ஜஸ்டின் ஆண்டனி

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் முக்கியமானது கன்னியாகுமரி. ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை இங்கு 42 மீனவ கிராமங்கள் உள்ளன. மீனவர்கள் வலுவாக இருக்கும் குமரி மாவட்டத்தில், அவர்களின் பிரச்சினைகளும் அதிகம். கடலில் மாயமாகும் மீனவர்களை விரைந்து மீட்க ஹெலிகாப்டர் தளம் அமைப்பது உட்பட, அவர்களது பல கோரிக்கைகளும் நீண்டகாலமாகக் கிடப்பில் கிடக்கின்றன.

இப்படியான சூழலில், இங்குள்ள மீனவர்களுக்கு என்ன பிரச்சினை என்றாலும் உடனே களத்துக்கு வந்துவிடுகிறார் ஜஸ்டின் ஆண்டனி. மீனவர்களுக்கும், அரசுக்கும் இடையே இணைப்புப் பாலமாக இருக்கும் இவரது பணிகள் பிரம்மிக்க வைப்பவை!

குமரியில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று வெளிநாட்டு கடற்படையினால் கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான மீனவர்களை, இதுவரை தன் முயற்சியில் மீட்டு தாயகம் கொண்டுவந்திருக்கிறார் ஜஸ்டின் ஆண்டனி. குடியரசுத் தலைவரிடமிருந்து 2 முறை பாராட்டு, நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தியிடமிருந்து அங்கீகாரம், 5 ஆளுநர்களிடமிருந்து 8 முறை பாராட்டு, டாக்டர் அம்பேத்கர் தேசிய விருது, மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் பரிசு, தேசிய நல்ல சமாரியன் விருது என இவர் வாங்கிக் குவித்திருக்கும் அங்கீகாரங்களின் பட்டியலும் அதிகம்.

தமிழக - கேரள எல்லையோரப் பகுதியான சின்னத்துறை மீனவ கிராமத்தில், ஜஸ்டின் ஆண்டனியை ‘காமதேனு’ மின்னிதழுக்காகச் சந்தித்தோம். “நடுத்தர மீனவ குடும்பத்தைச் சேர்ந்த நான்தான், என் வீட்டின் முதல் தலைமுறைப் பட்டதாரி” என்று புன்னகையுடன் பேசத் தொடங்கினார் ஜஸ்டின்.

“அடிப்படையில் மனிதவள நிபுணரான நான், சர்வதேச அளவில் பயணம் செய்து பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் மனிதவள மேம்பாட்டுப் பயிற்சிகளை அளித்து வருகிறேன்.

கலாமுடன்...

மீனவர்களுக்கு உள்நாட்டிலும் கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், சவுதி அரேபியா, பஹ்ரைன், குவைத், ஈரான், சீஷெல்ஸ் போன்ற வெளிநாடுகளிலும் பிரச்சினை ஏற்படும்போது உடனே களமிறங்கி, மத்திய - மாநில அரசுகளின் துணையோடு மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவருகிறேன். பொதுவாகக் கடலுக்குள் திடீர் என எழும் ராட்சத அலைகள், அதிவேகக் காற்று ஆகியவற்றால் மீனவர்கள் சிலநேரங்களில் எல்லை தாண்டும் சூழல் வந்துவிடுகிறது. சிலநேரங்களில் அவர்கள் நமது எல்லையில் மீன் பிடித்துக்கொண்டிருக்கும்போதே, அத்துமீறி வெளிநாட்டுக் கடற்படை அவர்களைக் கைது செய்வதும் உண்டு.

மீனவர்கள் இப்படி சிக்கிக்கொண்ட தகவல் கிடைத்த அடுத்த நொடியே நான் மீட்புப் பணியைத் தொடங்கிவிடுவேன். கடந்த 2015-ம் ஆண்டு குடியரசு தின விழாவின்போது இந்தச் சேவையைப் பாராட்டி மாவட்ட ஆட்சியர் விருது வழங்கியபோது, ‘மீனவர்களின் மனசாட்சிக்கு விருது’ எனப் புகழ்ந்தார். இதைவிட பெரிய சந்தோஷம் என்ன இருக்க முடியும்?

‘சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை’ என்னும் பெயரில், மீனவர்களுக்கு உதவ ஒரு அமைப்பும் நடத்திவருகிறேன். நமது மீனவர்கள் வங்கதேசத்தில் சிறைபிடிக்கப்பட்டபோது, அங்கே சென்று வழக்கு பதிந்து படகுகளையும் மீனவர்களையும் மீட்டுவந்தேன். இதனால் ஆட்சியர், ஆளுநர், பேராயர், குடியரசுத் தலைவர் ஆகியோரால் பாராட்டப்பட்டேன். எனது தொடர்ச்சியான பணிகளைப் பார்த்துவிட்டு, ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் 2019 டிசம்பர் மாதம் ஐநா சபை சார்பில், ஊழல் ஒழிப்பை மையமாகக் கொண்டு நடத்தப்பட்ட சர்வதேசக் கருத்தரங்கில் பேச அழைத்தனர்.

அந்த உரையிலும்கூட, கடற்கொள்ளையர்களை ஒழிக்க ஒரு சிறப்புப் படையை ஐநா சபை உருவாக்க வேண்டுமென்ற எனது பேச்சு சர்வதேச கவனத்தை ஈர்த்தது. ஐநா பொதுச் சபை சார்பில் நடத்தப்பட்ட ஊழலுக்கெதிரான சிறப்பு அமர்வில், சர்வதேசப் பார்வையாளராக (அப்சர்வர்) நியமிக்கப்பட்டேன். மும்பையில் நடைபெற்ற ஐநா சபை முன்மாதிரிக் கருத்தரங்கில், மீனவர்களின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதோடு இவர்களுக்கு சர்வதேச அடையாள அட்டை வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தினேன்.

சர்வதேச அட்டையாள அட்டை கொடுக்கப்பட்டாலே மீனவர்கள் ஆழ்கடலில் கைது செய்யப்படுவதும், துப்பாக்கிச்சூடுக்கு இரையாவதும் தடுக்கப்படும். ஐநா சபையின் நெல்சன் மண்டேலா தினத்தை முன்னிட்டு நான் ஆற்றிய உரை அமெரிக்காவில் பதிவுசெய்யப்பட்டு உலகமெங்கும் ஒலிபரப்பப்பட்டது. ஒரு கடற்கரை கிராமத்தில் ஏழை மீனவனுக்கு மகனாகப் பிறந்து, இவ்வளவு விஷயங்களைச் செய்திருப்பதில் எனக்குப் பெருமிதம்தான்” என்றார் ஜஸ்டின்.

ஐநா சபையின் சர்வதேச இளைஞர் கவுன்சில் உறுப்பினராகவும் இருக்கும் ஜஸ்டின், விநாடி - வினா போட்டியில் புதிய நுட்பத்தைக் கண்டுபிடித்ததால், ஐநா சபையால் பாராட்டப்பட்டவர். அப்படி என்ன புதுமை?

அதையும் ஜஸ்டினே விளக்கினார். ’’தேசிய அறிவு ஒலிம்பியாட் என்று நான் கண்டுபிடித்திருக்கும் இது மாணவ - மாணவியரின் பொது அறிவைப் பரிசோதிக்கும் ஒருவகை விநாடி - வினா. இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் நடத்தப்படும் விநாடி - வினா போட்டிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு 2 அல்லது 3 பேருக்கு மட்டுமே கிடைப்பது ஏன்... என எனக்குள் ஒருகேள்வி எழுந்தது. மற்றவர்களும் இதில் வாய்ப்பு பெறும் விதத்தில் போட்டி அமைய என்ன செய்ய வேண்டும் என்ற என் யோசனையின் வெளிப்பாடே இந்தக் கண்டுபிடிப்பு.

இதன்படி, 2 தேர்வுச்சுற்றுகள் நடத்தப்பட்டு, அதிகப் புள்ளிகளைப் பெறுகிற 5 அணிகள் முக்கியப் போட்டியில் (நேஷனல் நாலட்ஜ் ஒலிம்பிக்ஸ்) பங்கெடுப்பர். இதில் மொத்தம் 10 சுற்றுகள். ஒவ்வொரு சுற்றிலும் 2 பேர் கொண்ட ஒரு அணியினர் பங்கெடுப்பர். உதாரணமாக, அறிவியல் சுற்றில் ஒரு அணியின் சார்பில் 2 பேர் பங்கெடுப்பர். அடுத்தச் சுற்று விளையாட்டைப் பற்றியதெனில், அதே அணிக்காக வேறு இருவர் பங்கெடுப்பர்.

இவ்வாறு 10 சுற்றிலும் 2 பேர் கொண்ட ஒரு அணி பங்கெடுக்கும். ஒருவர் அதிகபட்சமாக 2 சுற்றுகளில் மட்டும் பங்கெடுக்க முடியும். இப்படியாக, ஒவ்வொரு அணியிலும் 10 பேர் வீதம், 5 அணியிலும் 50 பேர் கொண்ட நவீன முறையே இந்த நேஷனல் நாலட்ஜ் ஒலிம்பிக்ஸ். இதன் மூலம், ஒரே விளையாட்டில் அதிகக் குழந்தைகளின் அறிவுத்திறனைச் சோதிக்க முடியும்.

எனது யோசனையைக் கேட்டுவிட்டு ஐ நா-வின் அங்கமான யுனெஸ்கோ அமைப்பின் கல்வித் துறை என்னை அழைத்தது. அதன்பேரில் இதன் முக்கியத்துவம் பற்றி நேரில்போய் விளக்கினேன். விநாடி -வினா நிகழ்ச்சிகளில், ஓரிருவரைத் தாண்டி திறமையான பல மாணவ - மாணவிகளும் வாய்ப்பைப் பெறும் விதத்தில், ஏதாவது ஒருமுறையைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற எனது நீண்டகாலச் சிந்தனைக்கும் உழைப்புக்கும் கிடைத்த பலனாக இதைக் கருதுகிறேன்.

ஒலிம்பிக் பந்தயத்தில் ஒவ்வொரு விளையாட்டுக்கும் குறிப்பிட்ட வீரர்கள், வீராங்கனைகள் பங்கெடுப்பதுபோல, இந்த நாலட்ஜ் ஒலிம்பியாட் போட்டியிலும் ஒவ்வொரு சுற்றிலும் அதுதொடர்பாக திறமையுடைய மாணவ - மாணவிகளுக்கு வாய்ப்பு வழங்குவதன் மூலம் அதிகமானோர் இதில் ஒரேநேரத்தில் ஜொலிக்க முடியும். இப்போது, இந்த வகை விநாடி-வினாவும் உலகம் முழுவதும் பரவத் தொடங்கியுள்ளது. இதற்காக என் சக்திக்கு உட்பட்டு என்னால் ஆன சிறுமுயற்சிகளை செய்துகொண்டே இருக்கிறேன்” என்றார் ஜஸ்டின்.

புத்தாக்கச் சிந்தனையுடன், பொதுப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உழைக்கும் ஜஸ்டின் போன்றோரின் வெற்றி எல்லைகள் விரிவடையட்டும்!

x