பேசிக்கிட்டாங்க...


திருச்சி

ஹோட்டல் ஒன்றில்...

"என்னய்யா இது அக்கிரமம்... தண்ணிக்குமா தனியா பில் போடுறீங்க?"

“நீங்க குடிச்சது மினரல் வாட்டர் சார்!”

“நான் மிக்ஸிங் சேர்க்கக்கூட காசு குடுத்து வாட்டர் பாக்கெட் வாங்க மாட்டேன். ரெண்டு கிளாஸ் வாட்டருக்குக் காசா?”

“கரோனா காலத்துல காத்துக்கே காசு வாங்கணும் சார். மினரல் வாட்டருக்குக் கொடுக்கறதுக்கு எல்லாம் யோசிச்சா, மலேரியா, மஞ்சள் காமாலைனு ஆஸ்பத்திரில டோக்கன் வாங்கிடுவீங்க."

"எப்பா ராசா... பரோட்டா சாப்பிட்டு தண்ணி குடிச்சது குத்தமா? இந்தா உன் காசு!"

-சிவம், திருச்சி

தஞ்சாவூர்

மெடிக்கல் ஷாப் ஒன்றில்...

“அட... சாக்லேட் எல்லாம் தர்றீங்க. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.”

“பிறந்தநாள் இல்லேங்க... பாக்கி சேஞ்சுக்காகத் தந்தேன்!"

“ஆமா... தெரியாதாக்கும்? இல்லேன்னா நாங்க பார்ட்டி கேட்டுடப் போறோம் பாருங்க. சில்லறை இல்லைன்னா இதானே பண்ணுவீங்க!?”

“விட்டா பார்ட்டியும் கேட்டுடுவீங்க போலிருக்கே... இந்தாங்க சார் பாக்கி ஒரு ரூபா. சில்லறை இல்லாம வந்துட்டு நக்கல் வேற பண்றீங்க...”

- பா.து.பிரகாஷ், தஞ்சாவூர்

பாபநாசம்

காய்கறிக் கடை ஒன்றில் 2 பெண்மணிகள்...

“என்னக்கா, எப்பவும் உங்க வீட்டுக்காரர்தானே காய்கறி வாங்கிட்டு வருவார்னு சொல்லுவே, இன்னிக்கு நீயே வந்துட்டே?”

“ரெண்டு நாளா அவருக்கு நேரம் இல்லைன்னு எதுவும் வாங்கிட்டு வரலே.”

“அவர் ஏதோ மார்க்கெட்லதானே மேனேஜரா இருக்கார்னு சொன்னே, வேலை முடிஞ்சு வரும்போது அப்படியே வாங்கிட்டு வரலாமே?”

“நீங்க வேற... அவர் ஒண்ணும் காய்கறி மார்க்கெட்ல மேனேஜர் இல்லே, மார்க்கெட்டிங் மேனேஜர்.”

“அது என்ன மார்க்கெட்டிங்கோ... நான் என்னத்த கண்டேன்.”

- எஸ்.இராஜேந்திரன், கபிஸ்தலம்

நாகர்கோவில்

பெட்டிக்கடை ஒன்றில் கடைக்காரரும் வாடிக்கையாளரும்...

“அண்ணே... ரெண்டு பீடி குடுங்க.”

“சில்லறை இருக்கா..?”

“அதான் 'கூகுள் 'பே' ஸ்கேனர் வெச்சிருக்கீங்கல... அதுல 'பே’ பண்றேன்.”

"ஏம்பா... ரெண்டு பீடி வாங்கிட்டு கூகுள் 'பே'யில பணம் போடுறேங்குறீயே... இது உனக்கு ஓவராத் தெரியல?”

“என்னண்ணே நீங்க... சந்துமுனை பொட்டிக்கடையில ‘கூகுள் பே’யெல்லாம் வச்சு மார்டனாகிட்டீங்க... ரெண்டு பீடியை அந்தக் கணக்குலயும்தான் போடுறது...”

(கடைக்காரர் டென்ஷனைக் காட்டாமல் பீடியை எடுத்துவைக்கிறார்)

- மகேஷ் அப்பாசுவாமி, பனங்கொட்டான் விளை

x