பாமக இனி பக்கவாத்தியமா இருக்காது!


அன்று அரசியல் தலைவர்களைப் பேட்டியெடுக்க அவசர அவசரமாகக் கிளம்பிய பாச்சா, பறக்கும் பைக் மீது ஏறியதும் பையில் இருந்து பளபள வெள்ளைத் தாள்களை எடுத்து பைக்கின் முதுகின் மீது பரப்பினான். ஒரு தாளை எடுப்பதும் இன்னொன்றைக் கிழித்து எறிவதுமாக இருந்த பாச்சாவை ஓரக்கண்ணால் பார்த்த பறக்கும் பைக், “போறபோக்குல அவர் பண்ணின போட்டோஷூட்டையே இங்க இருக்கிறவய்ங்க ஈவிரக்கம் இல்லாம கலாய்ச்சாய்ங்க. போதாதக்குறைக்கு நீ வேறயா?” என்றதும் பாச்சா பவ்யமாகி வெற்றுத்தாள்களை வேகவேகமாகப் பைக்குள் போட்டான்.

அன்று முதலாமவர் அன்புமணி.

மாற்றம், மனமாற்றம், மீண்டும் மாற்றம், திரும்பவும் மனமாற்றம் என்று நீண்டுகொண்டே செல்லும் பிரச்சார வாசகத்தை எப்படிச் சுருக்குவது என்று மாம்பழக் கட்சித் தொண்டர்கள் மருகிக்கொண்டிருந்தனர். காதிலிருந்து வாய்வரை நீண்ட மைக்ரோபோனின் இடத்தை இந்த முறை மாஸ்க் பிடித்திருந்ததால், கையில் மைக் பிடித்துப் பேசுவதற்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்தார் அன்புமணி.

“வாழ்த்துகள் சார்... அடுத்த முதல்வர்... ஐ மீன் முதல்வர் வேட்பாளர் நீங்கதான் போல! திராவிடக் கட்சிகள் மேல இருந்த அதிருப்தி திரும்பவும் வந்துடுச்சா... இல்லை உள்ளாட்சித் தேர்தல்ல ஓடியாடி வேலை செய்ய ஊருக்குள்ள இருக்கிற தொண்டர்களை உசுப்பேத்துறதுக்கான முயற்சியா?” என்று கேட்டபடி பேட்டியைத் தொடங்கினான் பாச்சா.

“ஏன்... முதல்வர்னு சொன்னா முத்து உதிர்ந்துடுமா?” என்று முறைத்தபடி பேச ஆரம்பித்த அன்புமணி, “நாங்க யாரையும் உசுப்பேத்த வேண்டியது இல்லைங்கிறதை முதற்கண் தெரிவிச்சுக்கிறேன். ஊருக்காக உழைக்கிறதுதான் எங்க அரசியல். அதை உலகத்துக்கு எஸ்டாபிளிஷ் பண்றதுக்காகத்தான் எலெக்‌ஷன்ல நிக்கிறோம். மத்தபடி, தேர்தலைவிடவும் மாறுதலைத்தான் மனசார விரும்புறோம். முதல்வராகணும்னு மு.க.ஸ்டாலின் ஆசைப்பட்டார். முதல்வராகிட்டார். அடுத்து எங்கள் முறைதான்” என்றார் ஆவேசமாக.

“நீங்களும் ஆசைப்படப் போறீங்களா?” என்று நிச்சலனமாகக் கேட்ட பாச்சா, “அதெப்படி சார்... திமுக, அதிமுகன்னு மாறி மாறிக் கூட்டணி வச்சுட்டு திடீர்னு தனியாவர்த்தனம் பண்ணிடுறீங்க? ” என்றான்.

“உன் கேள்வியிலேயே பதில் இருக்குப்பா. பாமக இனி பக்கவாத்தியமா இருக்காது. பக்கா மெயின் இசையே நாங்கதான். மத்தவங்கள்லாம் துணை இசைதான்னு அய்யா ஆணித்தரமா சொல்லிட்டார்” என்ற அன்புமணியிடம், “அதுசரி சோலோவா பாடினாத்தானே ஆல்-ஓவர் தமிழ்நாட்டுல ஆறேழு பர்சென்டேஜாவது எடுக்க முடியும்” என்று அன்புமணி காதுக்குக் கேட்காத அளவுக்கு அடக்கமாகச் சொன்ன பாச்சா, “சர்ச்சை சிங்கம் எச்.ராஜா கூட ‘ருத்ர தாண்டவம்’ பார்த்துட்டு பத்திரிகையாளர்களைத் திட்டிப் பொறுப்பாப் பேட்டி குடுத்துட்டார். நீங்க இன்னும் பார்க்கலையா?” என்று சத்தமாகக் கேட்டான்.

“நீ இன்டர்வியூவைக் கன்டினியூ பண்ணி இம்சை பண்ணுனா, இங்கேயே ‘ருத்ர தாண்டவம்’ பார்க்க ஏற்பாடு பண்ணுவேன்” என்று அன்பொழுக அன்புமணி சொன்னதும், பத்திரமாக வீடு திரும்புவது பற்றி பரிசீலித்த பாச்சா, பாதியிலேயே பேட்டியை முடித்தான்.

அடுத்து துரைமுருகன்.

‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே...’ என்று வாத்தியார் பாடியாடும் பாடலைத் தொலைக்காட்சியில் பார்த்தபடி துண்டால் கண்களைத் துடைத்துக்கொண்டு அமர்ந்திருந்தார் ‘துரோகம்’ புகழ் துரைமுருகன்.

“அரசியல்ல சென்டிமென்ட் கிடையாது. செட்டில்மென்ட் மட்டும்தான்னு நினைச்சுக்கிட்டிருந்தேன். அதை சென்டிமீட்டர் சென்டிமீட்டரா சிதைச்சுட்டீங்க. செவாலியர்கிட்ட ஏதும் ஸ்பெஷல் கிளாஸ் போயிருக்கீங்களா?” என்றபடி என்ட்ரி கொடுத்த பாச்சாவைப் பாசத்துடன் பார்த்தார் துரைமுருகன்.

“ஆனாக்கா, உங்களைப் படிக்க வெச்ச எம்ஜிஆரையே துரோகப் பட்டியல்ல சேர்த்து பலருக்கும் டிசப்பாய்ன்மென்ட் குடுத்துட்டீங்களே? துரோகம்னா என்னன்னே தெரியாத ஓபிஎஸ் - ஈபிஎஸ் ரெண்டுபேரும் துடிதுடிச்சுப்போய் அறிக்கை விட்டிருக்காங்க கவனிச்சீங்களா?” என்று தொனியை மாற்றி துணைக்கேள்விகளால் துரைமுருகனைத் துளைத்தெடுத்தான்.

ஆங்கிலத்திலும் பேசி அசத்தும் திறன் கொண்ட நீர்வளத் துறை அமைச்சர், “பேமென்ட் இல்லாம... ஸாரி... பேஸ்மென்ட் இல்லாம பேசாத தம்பி. கடமையில மட்டுமில்ல பாலிடிக்ஸ்லயும் பாசத்துக்கு இடம் இல்ல. திமுகவுக்குத் துரோகம் செஞ்சவங்கன்னு லிஸ்ட் போட்டா ஃபர்ஸ்ட் பேரே எம்ஜிஆர்னுதானே வரும்? அதை மிஸ் பண்ணிட்டா ஹிஸ்டரியை நான் மிஸ் இன்டர்ப்ரேட் பண்றேன்னு கெட்ட பேர் வந்துடாதா?” என்று நீளமாக விளக்கம் சொன்னார்.

“இப்ப மட்டும் என்னவாம்? கண்டக்டர்களைப் பத்திக் கன்னாபின்னானு பேசி கண்டனத்தைத்தானே சம்பாதிச்சிருக்கீங்க? கவர்ன்மென்ட் சர்வன்ட்ஸோட கமிட்மென்ட்ஸ் தெரியாம கமென்ட் அடிக்கிறது அவங்களை டார்மென்ட் பண்றதாகாதா?” என்று பாச்சா கேட்டதும்,

‘இனி பேசி பிரயோஜனமில்லை’ என்று ஏகமனதாக முடிவெடுத்த துரைமுருகன், செல்போனில் யாரையோ அழைத்து, “இங்க ஒருத்தன் இன்டர்வியூங்கிற பேர்ல இங்க்லீஷ் கலந்து இம்சை பண்றான். ஒரே பனிஷ்மென்ட்டா இருக்கு. அர்ஜென்ட்டா வர முடியுமா?” என்று கேட்டார்.

நீர்வளத் துறை அமைச்சர் அழைத்தது நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனைத்தான் என்று தெரிந்ததும் படக்கென வண்டியேறி பறந்தான் பாச்சா.

அடுத்து எச்.ராஜா.

“மோகன் பாகவத்(!) ஜி எடுத்த மூன்றாவது படம் மோசமில்லை என்றே சொல்ல வேண்டும். மேலும் முழு உண்மைகளை முகத்தில் அறைந்து பல்லைக் கழட்டிப் பளிச்சென காட்டுகிறது” என்று யூடியூப் விமர்சகர் கணக்காக ரிவ்யூவ் செய்துகொண்டிருந்தார் எச்.ராஜா.

“என்ன சார், உங்க தகுதிக்கும் தண்டிக்கும் உலக சினிமாவையே ரிவ்யூ பண்ணலாமே... இப்படி உள்ளூர் படங்களையெல்லாம் ப்ரொமோட் பண்ணுனா, சாரணர்கள்... ஸாரி சாதாரணர்கள் பட்டியல்ல மக்கள் உங்களைச் சேர்த்துட மாட்டீங்களா?” என எச்.ராஜாவிடம் கேட்டான் பாச்சா.

“இதுதான் தப்புங்குறேன் நான். ஹூ இஸ் சாரணர்னு நாங் கேக்குறேன். பச்சைத் தஞ்சாவூரானா நாங் கேக்குறேன்... ஹூ வான்ட்ஸ் டு சீ உலக சினிமாஸ்? டோன்ட் பிகம் அடிக்ட் டு கமலஹாசன்... ஐ மீன் உலக நாயகன்... ஐ மீண்டும் மீன் உலக சினிமா” என்று கமலா ஹாரிஸ் முன் கண்டிஷனாகப் பேசும் மோடி பாணியில் முழங்கினார் எச்.ராஜா.

“இப்படி அதிரடியா நீங்க பேசுறதுனால தமிழ்நாட்டுல நாலு இலையைத் தாண்டி தாமரை வளர மாட்டேங்குதுன்னு கமலாலயத் தொண்டர்கள்லாம் கவலைப்படுறாங்களாமே?” என்று கேட்டதும், “இதுக்குத்தான் பிரஸ் பியூப்பிளை மீட் பண்றதை நான் ப்ரெஃபர் பண்றதில்லை. பேட்டின்னு வந்து பேசவிட்டு வேடிக்கைப் பார்க்கிறதும் இல்லாம... பிரஷ்ஷரை வேற ஏத்திவிட்டுடறீங்க... பேட் ஃபெல்லோஸ்” என்று எகிறினார் எச்.ராஜா.

வந்த வேலை முடிந்தது’ என அகமகிழ்ந்து அங்கிருந்து கிளம்பிய பாச்சா, “இந்த வாரமும் சீமான் பேட்டி இருக்கு. போறதுக்குத்தான் நேரமில்லை” என்று பைக்கிடம் சொல்ல, எச்.ராஜாவைப் பார்த்துவந்த எஃபெக்ட் குறையாத பைக், ஏக டெசிபலில் பாச்சாவிடம் கேட்டது: “ஹூ இஸ் சீமான்ங்குறேன் நான்!”

x