இப்படியும் ஒரு ஆட்டோகிராப்!


லட்சுமி, பவித்ரா, பிரகாஷ்

எத்தனையோ பேர் டைரி எழுதுகிறோம். பல பேரிடம் ஆட்டோகிராப் வாங்கி வைக்கிறோம். அஞ்சல் தலை சேமிப்பு, பழங்கால நாணய சேகரிப்பு எல்லாம்கூட செய்து பத்திரப்படுத்துகிறோம். ஆனால், யாரும் யோசிக்கவே முடியாத வகையில் 17 வயது பவித்ராவிடம் ஆட்டோகிராப் போன்ற 3 விநோத டைரிக்குறிப்புகள் உள்ளன.

அவற்றில் பவித்ரா கருவறையில் இருந்துபோது அவரது அம்மாவுக்கு சீமந்தம் செய்த தேதி, முதல் பிறந்தநாள், குப்புற விழுந்த நாள், ஷெர்லாக் ஊட்டிய நாள், பிரபல எழுத்தாளர்கள் வித்யாரம்பம் செய்து வைத்த நாள், பள்ளியில் சேர்ந்த நாள், முதன்முதலாக பஸ்ஸில், ரயிலில், விமானத்தில் பயணித்தபோது எடுக்கப்பட்ட டிக்கெட்டுகள் விவரங்கள் தொடங்கி அத்தனையையும் அழைப்பிதழ்களாக, ஓவியங்களாக, புகைப்படங்களாக ஆவணப்படுத்தியிருக்கின்றனர் பவித்ராவின் பெற்றோர்.

ஆவணப்படுத்தும் அப்பா-மகள்

வித்தியாசமான இந்த ஆவணத் தொகுப்பை யார் புரட்டினாலும் பார்த்துப் பரவசமாகி விடுவார்கள். நானும்கூட அப்படித்தான் பரவசப்பட்டேன். ஜி.ஆர்.பிரகாஷ் - லட்சுமி தம்பதியினர் கோவை சாயிபாபா காலனியில் வசிக்கிறார்கள். இவர்களின் ஒரே மகள் பவித்ரா. இவர்களைச் சந்தித்துப் பேசினேன். பிரகாஷ்தான் முதலில் தொடங்கினார்.

‘‘திருமணத்திற்குப் பிறகு என் மனைவி தாய்மையடைந்தபோது, பிறக்கப் போவது ஆணா இருந்தாலும் பெண்ணா இருந்தாலும் அவர்களின் ஜனனத்திலிருந்து முழுமையாகப் பதிவுசெய்து ஆவணம் ஒன்று கொடுக்கணும்னு எனக்குள்ளே எண்ணம் தோணுச்சு. இவங்கட்டயும் சொன்னேன். வளைகாப்பு தொடங்கி இந்த டைரியை ஃபாலோ பண்ண ஆரம்பிச்சோம். அதுல முதல்ல வந்தது காலண்டர் என்ற விஷயம்.

ஜி.ஆர்.பிரகாஷ்

இந்த டிஜிட்டல் யுகத்தில் எதிர்காலத்தில் இப்படியொன்று இருக்குமோ இருக்காதோ என்ற எண்ணம். அதனால் அந்தந்த நாளுடைய காலண்டர் சீட் எடுத்து, அந்தப் பக்கங்களில் ஒட்டி, அந்த நாளில் நடந்த அவளைப் பற்றிய நல்ல விஷயங்களைப் பதிவு பண்ணி வைக்க ஆரம்பிச்சோம். கடந்த 17 வருசமா அதை விடாம ஃபாலோ பண்ணினோம். இவளுக்கு முதல் பல் விழுந்த தேதி, குப்புற விழுந்த தேதி இதெல்லாம்கூட இந்த டைரியில இருக்கு.

முதன் முதலாகப் பள்ளிக்கு சென்றது, அப்போது உறவினர்கள் நண்பர்கள் வாழ்த்துச் சொன்னது, நாஞ்சில்நாடன் வித்யாரம்பம் செய்து வைத்தது, எங்கள் வீட்டிற்கு வந்த பிரபல எழுத்தாளர் களிடம் வாங்கிய வாழ்த்துக் கடிதங்கள் இத்தனையையும் பதிவேற்றி வைத்த ஆவண தொகுப்பே 3 டைரிகளா வளர்ந்துவிட்டது.

இதில் நான் பெருமைப்படத்தக்க விஷயங்களாக கருதுவது, நிறைய இருக்கு. அதில் முக்கியமா, நீதியரசர் கற்பக விநாயகம் எங்களை விருந்தினர் மாளிகைக்கு வரச்சொல்லி ஒரு வாழ்த்து எழுதித்தந்தார். அந்த நேரத்தில் அவர் மகள் தாய்மையடைஞ்சிருந்தாங்க. உடனே மகளைக்கூப்பிட்டு, ‘இது மாதிரி எழுதுங்க. ஆனா, நீங்க ரெண்டு நோட்டு போட வேண்டியிருக்கும். ஏன்னா உங்களுக்கு டுவின்ஸ்ன்னு டாக்டர்கள் சொல்லியிருக்காங்க’ன்னு சொன்னது மறக்கவே முடியாது.

அடுத்தது வீட்டுக்கு வந்த சீனி விசுவநாதன், பரிட்சா ஞானி எழுதிக் கொடுத்ததை எல்லாம் ஆகப்பெரும் பெருமையா நினைக்கிறோம். இவள் முதல் முதலா போன பஸ் டிக்கெட், வெளியூர் போன ட்ரெயின் டிக்கெட், வருடத்திற்கு ஒருமுறை வடநாடு சுற்றுலா போவோம். அப்படி போன இடங்கள் குறித்த செய்திகள், ஆவணங்கள்... விமானத்தில போனதேயில்லையே என்று அவள் சொன்னபோது அதற்காகவே விமானத்தில் சென்று வந்தது... இப்படி நிறையச் சொல்லலாம்.

எங்க நோக்கம் என்னவென்றால் இவள் திருமணம் ஆகும் சமயத்தில் இதுபோல மூணு டைரியோ, நாலு டைரியோ ஆவணமாக்கி பரிசாகக் கொடுப்பது. எப்போது இவள் அதைப் புரட்டிப் பார்த்தாலும் தன் வாழ்க்கையை புரட்டிப் பார்க்கும் ஆவணமாக அவளுக்கு இருக்க வேண்டும் என்பதுதான்’’ என்று சொன்னார் ஜி.ஆர். பிரகாஷ்.

லட்சுமி

குழந்தை கருவிலிருந்த காட்சி, பிறந்த பின்பு தொட்டிலில் தூங்கிய விதம் போன்றவற்றை கோட்டோவியங்களாக இந்த ஆவணத்தில் பதிவு செய்திருக்கிறார் பவித்ராவின் தாய் லட்சுமி.

அவர் இதுகுறித்துப் பேசும்போது, ‘‘வாசிக்கிறவங்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அப்படித்தான் இவரையே நான் திருமணம் செஞ்சுட்டேன். இந்த யோசனையையும் உடனே ஏத்துக்க முடிந்தது. நான் மாசமா இருந்தப்ப இப்படி ஒரு விஷயத்தை சொல்லி வரையச் சொல்லிட்டுப் போயிருவார். நான் வரைஞ்சு வச்சிருவேன். எனக்குள்ளே இப்படியொரு ஓவியத்திறமை இருப்பதைச் சொன்னவரே ஓவியர் மணியம் செல்வன்தான். அவருக்குத்தான் முதலில் நன்றி சொல்லணும்.

நம் குழந்தையின் பிறப்பு, வளர்ப்பை ஆவணப்படுத்த வேண்டும் என்று என் கணவர் சொன்னபோது, ‘குழந்தைப் பராமரிப்பு’ என்று ஒரு ‘வுட்வார்ட்ஸ்’ புத்தகம் கொடுத்தார். மணியம் செல்வனின் ஓவியங்கள் நிறைய இருந்தது. அடடா... இதுபோல நாமும் வரையலாமே. பொருத்தமா இருக்குமேன்னு வரைய ஆரம்பிச்சேன்‘‘ என்று நெகிழ்ந்தார்.

டைரியுடன் பவித்ரா

பவித்ராவிடம் பேசியபோது, ‘‘யார் வீட்டுக்கு வந்தாலும், யார் வீட்டுக்கு நாங்க போனாலும் அப்பா அம்மா இந்த டைரியைக் கொடுத்து ஏதாவது எழுதச் சொல்லி, கையெழுத்து வாங்குவாங்க. அதை நான் பார்த்திருக்கேன். அது என்னைப் பற்றியதுதான். எனக்கானதுதான்னு அப்பவெல்லாம் தெரியாது. எனக்குப் பத்து வருஷமான போதுதான் இது இவ்வளவு ஸ்பெஷலான விஷயம்ன்னு தெரிய ஆரம்பித்தது. என் ஃபிரண்ட்ஸ்கிட்ட காட்டும்போது, ‘நீ ரொம்ப லக்கிப்பா. உனக்கு உங்கப்பா அம்மா என்னவெல்லாம் செஞ்சு வச்சிருக்காங்க’னு ரொம்ப பூரிச்சு சொல்லிருக்காங்க. ஸ்கூல் டீச்சர்ஸ் பார்த்துட்டும் ஆச்சரியப்பட்டிருக்காங்க.

தாஜ்மகால், அஜந்தா, தஞ்சைக் கோயில்ன்னு சுற்றுலா இடங்களுக்குப் போனா அப்பா ரெண்டு டிக்கெட் வாங்குவாங்க. அதுல ஒண்ணு அங்கே கொடுத்துடுவார். இன்னொண்ணு இந்த நோட்டுல ஒட்டி வச்சுடுவார். இப்பவெல்லாம் நான் எங்கே போனாலும் அதுபற்றி குறிப்பெழுதி வைக்கச் சொல்லிடுவார். வேலைக்குப் போயிட்டு வந்ததும், நான் எழுதியதைப் பார்த்து அப்படியே நோட்டுல எழுதிடுவார்’’ என்றார்.

சமீபகாலமாக, அப்பா வாசித்துவிட்டு வைத்திருக்கும் புத்தக குவியலில் இருந்து பிரபல எழுத்தாளர்களின் நூல்களைத் தேடித் தேடி எடுத்துப் படிக்கத் தொடங்கி இருக்கிறார் பவித்ரா. அதைப் பற்றியும் நிறைய பேசுகிறார். அதிலும் மகாபாரதம் பற்றி பேசினால், அவரது முகத்தில் அத்தனை பிரகாசம். “மகாபாரதம் பற்றி யார் எழுதினாலும் படிச்சுடுவா. அந்த அளவுக்கு பாரதக் கதைன்னா பவித்ராவுக்கு உயிர்” என்கிறார் அம்மா லட்சுமி.

இப்படி, ஒரு பாதை வகுத்து தரும் பெற்றோரின் பேர் சொல்லும் பிள்ளையாக வளர்ந்து வரும் பவித்ராவுக்கு வாழ்த்துச் சொல்லிப் புறப்பட்டோம்.

x