கான்ஸ்டபிள் முதல் கமிஷ்னர் வரை...


மீரான்

மானுட வாழ்க்கை என்பது நடைபாதைகளில், சாலையோரங்களில் என எப்படியெல்லாமோ கொட்டிக் கிடக்கிறது. அதற்குள் சென்று அகழாய்ந்தால் ஆயிரம் அதிசயங்கள் பிரமிப்புகள். அப்படித்தான் கோவை ரயில் நிலையத்தின் முன்புற மரத்தடி கோயில் திண்ணை ஒன்றில் அமர்ந்து போலீஸ் தொப்பியை தைத்துக் கொண்டிருந்தார், முப்பது வயதைக் கடந்த மீரான்.

கரூரைச் சேர்ந்த, போலீஸ் தொப்பிகளை சீர்படுத்தித் தைத்துக் கொடுப்பதில் கைதேர்ந்த வேலைக்காரர். கரூர் சுற்று வட்டாரத்தில் எந்த மூலையில் காவலர்கள் போன் செய்து அழைத்தாலும் அங்கே எல்லாம் ஆஜராகி, அவர்களின் தொப்பிகளை சரிபார்த்து (ரிப்பேர்) தைத்துக் கொடுப்பார் இந்த மீரான் என்று கேள்விப்பட்டு ஆச்சரியப்பட்டேன்.

அவரிடம் மெல்லப் பேச்சுக்கொடுத்தோம்.

‘‘எனக்கு சொந்த ஊர் கரூர்தான். அங்கே எங்க தாத்தா ஏட்டைய்யாவா இருந்தார். நானும் போலீஸ் ஆகணும்னுதான் ஆசைப்பட்டேன். ஆனா, படிப்பு ஏறல. பத்தாம் கிளாஸோட நின்னுட்டேன். அப்ப எங்க அண்ணன், போலீஸ் தொப்பி தைச்சுக் கொடுக்கறதையே தொழிலா வச்சிட்டிருந்தார். அவரோட கூடமாட சேர்ந்து செஞ்சு அதையே நானும் பழகிட்டேன். புதுத்தொப்பி தைச்சு ஸ்டோர்களுக்கு கொடுக்கறதோட, ஸ்டேஷன்கள்ல போலீஸ்காரங்க தன் தொப்பி கிழிஞ்சிட்டா, பட்டன் போயிட்டா, சைஸ் பெரிசாயிருந்தா எங்களைக்கூப்பிட்டு ரிப்பேர் பார்த்துக் கொடுக்கச் சொல்லுவாங்க. இந்த ஊரில் இன்ன ஸ்டேஷன்னு சொல்லீட்டா போதும், அங்கே அடுத்தநாளே போயிருவோம். ஒரு ஸ்டேஷன்ல ஒரு போலீஸ்காரர் கூப்பிட்டிருந்து போனோம்ன்னாலே, அவங்க நாங்க வர்றது தெரிஞ்சு மத்த போலீஸ்காரங்களுக்கும் சொல்லீடுவாங்க.

அதனால சில இடங்கள்ல ஒரு நாள், ரெண்டு நாள் கூட வேலையிருக்கும். பல போலீஸ் ஸ்டேஷன்ல அங்கேயே தங்க விடுவாங்க. வேளா வேளைக்கு சாப்பாடும் தந்துருவாங்க. சில இடங்களில் லாட்ஜ் எடுத்து தங்கி வேலைய முடிச்சுக் கொடுத்துட்டு வருவோம். கான்ஸ்டபிள் முதல் கமிஷ்னர் வரைக்கும் நான் தொப்பி தைச்சுக் கொடுத்திருக்கேன். கான்ஸ்டபிள் தொடங்கி கமிஷ்னர் வரைக்கும் எந்த மாதிரி தொப்பி தைக்கணும் அதில் எந்த மாதிரி கலர் ரிப்பன், பேட்ஜ் வைக்கணும்னு எல்லாம் எனக்கு அத்துபடி’’ என்று சரளமாகப் பேசிய மீரான், தனது வீட்டார் போலீஸ் தொப்பி தைப்பதை குடிசைத் தொழிலாகவே மாற்றிவிட்டதையும் விளக்கினார்.

தொப்பியின் ஆரம்ப நிலையை மெஷினில் இவர் மனைவியே தைத்துக் கொடுப்பாராம். ஃபினிஷிங் டச்சை இவர் செய்வாராம். “பொதுவா போலீஸ்காரங்கன்னாலே மாமூல் வாங்கித்தான் பழக்கப்பட்டவங்க. அவங்கட்ட காசு பாக்குறதெல்லாம் கஷ்டம்னு ஒரு பேச்சு இருக்கே. உங்ககிட்ட எப்படி நடந்துக்கிறாங்க?” என்று கேட்டதுதான் தாமதம், உணர்ச்சிவசப்பட்டு பொங்கிவிட்டார் மனிதர்.

‘‘உண்மையில் எல்லா போலீஸ்காரங்களும் அப்படி இல்லை சார். நான் தொப்பி தைச்சுட்டு இருக்கும்போது ஆளாளுக்கு, ‘சாப்பிட்டீங்களா பாய்’ன்னு கேட்டு மறக்காம சாப்பாடு வாங்கித் தருவாங்க. டீ, வடை வந்துக்கிட்டே இருக்கும். வேலைய முடிச்சுக் கொடுத்த உடனே எத்தனை ரூபா கேட்கிறோமோ பேரமே பேசாம அதைக் கொடுத்துடுவாங்க. 20 வருஷ சர்வீஸ்ல ஒரு போலீஸ்காரர்கூட, மீதி அப்புறம் தர்றேன்னு என்கிட்ட பாக்கி வெச்சதே இல்லை’’ என்றவர், போலீஸ் தொப்பி தைப்பதில் உள்ள கஷ்ட நஷ்டங்களையும் சொன்னார்.

‘‘ஒரு புதுத் தொப்பி தைச்சா 300 ரூபாய் வரைக்கும் கிடைக்கும். ஒரு நாளைக்கு அதிகபட்சம் 8 தொப்பி வரை தைக்கலாம். ரிப்பேர் பார்த்துக் கொடுப்பதும் அப்படித்தான். இதற்கு துணி, டேப், நூல் உள்ளிட்ட முதலீடுகள் போக ஓரளவு வருமானம் கிடைக்கிறது. நிறைவாவும் வாழ முடியுது. தமிழ்நாட்டில் போலீஸ் தொப்பி தைக்கிறவங்கன்னு கணக்குப் பார்த்தா அஞ்சாறு பேர் இருப்போம்.

மற்ற தொப்பிகள் தைக்கிறதுக்கும் போலீஸ் தொப்பி தைக்கிறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. இந்த தொப்பி தைப்பது கஷ்டம். விரல்கள் ரொம்ப வலிக்கும். காயம் கூட ஆகிடும். தொப்பி தைச்சு முடிச்சதும் தையல், ரிப்பன் உட்பட நேர்த்தியாக இருக்கணும். ஒரு மில்லி மீட்டர் கொஞ்சம் வசம் மாறினாலே கண்ணுக்குத் தெரிஞ்சுடும். போலீஸ் என்றாலே ஸ்மார்ட்டா இருக்கணும். அதில் தொப்பி மாட்டினால் தனி கம்பீரம் தெரியும். அந்த தொப்பிக்கான கம்பீரத்தை கவனமா தொடர்ந்து கையாண்டு பழகியதாலேயே எனக்கு இந்தத் தொழில் வாய்ச்சிருக்கு.’’

போலீஸ் வேலைக்குப் போகமுடியாவிட்டாலும் அந்த வேலை மீது மீரானுக்கு உள்ள காதல் இன்னும் போகவில்லை. அவ்வப்போது போலீஸ் தொப்பியை அணிந்து அழகு பார்க்கும் மீரானுக்கு, போலீஸ் வேடத்தில் நடிக்க சினிமா சான்ஸும் தேடி வந்திருக்கிறது.

‘ஆலமரம்’ படத்தில் மீரான்

அதுகுறித்து ஆனந்தமாகப் பேசிய அவர், ‘‘என் நண்பன் தங்கதுரைன்னு பேரு. 15 வருஷத்துக்கு முன்னாடி சினிமா தொழிலுக்குப் போனான். ‘நீ சினிமால பெரியாளா வந்தா எனக்கு ஒரு சினிமா சான்ஸ் கொடுக்கணும் மாப்ள’ன்னு அப்பவே சொல்லி விட்டிருந்தேன். எனக்கு வாக்குக்கொடுத்தபடியே, தான் டைரக்ட் பண்ற ‘ஆலமரம்’ படத்துல எனக்கு எஸ்.ஐ வேஷம் கொடுத்திருக்கான். சீக்கிரமே படம் ரிலீஸ் ஆகப் போகுது. அடுத்தபடத்துக்கும் என்ன புக் பண்ணியிருக்காங்க’’ என்றார்.

‘‘அப்ப சினிமாவுல ஹிட் ஆயிட்டா தொப்பி தொழில விட்ருவீங்களோ?’’ என்று கேட்டதற்கு,

‘‘அதெல்லாம் விடமாட்டேன் சார். தொப்பி விற்கிறதுக்கும், ரிப்பேர் பார்க்கறதுக்கும் கரூர்லயே சொந்தமா ஒரு ஸ்டோர் போட்ருவேன். அதுக்கேத்த ஆளுகளையும் வச்சிருவேன்’’ என்று சிரித்தபடி மீரான் சொல்ல, நாமும் அவரை வாழ்த்தி விடைபெற்றோம்.

x