லென்ஸ் சிமிட்டும் நேரம் - 2 குப்பைக் கிடங்கைச் சுவாசிக்கும் குழந்தைகள்!


2015-ம் ஆண்டு பெங்களூருவில் நடைபெற்ற அகில இந்திய மக்கள் அறிவியல் மாநாட்டில் (All India People’s Science Congress) காட்சிப்படுத்தப்பட்ட என்னுடைய புகைப்படங்களையும், அதை எடுத்த பின்னணியையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.

என்னுடைய தோழி ஒருவர், பாரத அறிவியல் கழகத்தின் களப்பணியாளராக இருக்கிறார். அவர் மூலம் தான் இந்த மாநாட்டில் புகைப்படக் கண்காட்சி இருப்பது பற்றி அறிந்து கொண்டேன். அதில் காட்சிப்படுத்த, நகரமயமாக்கலின் பிரச்சினைகளுள் ஏதேனும் ஒன்றைப் பற்றி புகைப்படக் கதை செய்து கொடுக்கக் கேட்டிருந்தார் தோழி. அப்பொழுது பெங்களூருவின் (பெங்களூருக்கு மட்டுமல்ல, மொத்த இந்தியாவுக்குமான பிரச்சினை என்றே இதை எடுத்துக் கொள்ளலாம்) தலையாய பிரச்சினையாக இருந்தது, குப்பைகளை அப்புறப்படுத்தும் பணி. நம் வீட்டில் நாம் சேகரிக்கும் குப்பைகளை குப்பை சேகரிப்பவரிடம் கொடுப்பது வரை தான் நமக்குத் தெரிகிறது. அதன் பிறகு அவர்கள் அதை என்ன செய்கிறார்கள் என்பதைப் பற்றி நாம் யோசிப்பதே இல்லை.

அடிப்படை வசதிகளே இல்லாத அந்த இடம் தான் அந்தக் குடும்பங்களின் வசிப்பிடம் என்றபோது சற்று அதிர்ச்சியாக இருந்தது. அதைவிட இன்னும் அதிர்ச்சி தரும் விஷயம் என்னவென்றால், அந்தக் குப்பைகளுக்குள் 2 குழந்தைகளும் சுவாசித்துக் கொண்டிருந்தது தான்.

இப்படி அவர்கள் சேகரிக்கும் குப்பைகளை, நகருக்கு வெளியே இருக்கும் ஏதோ ஒரு குப்பைக் கிடங்கில் கொண்டு போய்க் கொட்டிவிடுகின்றனர். இப்படிப்பட்ட ஒரு குப்பைக் கிடங்கைப் படம் எடுக்கலாம் என என் கணவருடன் ஓர் சனிக்கிழமை காலையில் புறப்பட்டேன். அங்கு நண்பரின் நண்பர் ஒருவர் எங்களுக்கு உதவிக்கு வந்திருந்தார். ஏனெனில், இம்மாதிரியான இடங்களுக்கு தனியே செல்வது அவ்வளவு நல்லதல்ல என நாங்கள் நினைத்தோம்.

அது ஒரு சிறிய குப்பை வளாகம். அதில் இரண்டு குடும்பங்கள் நிரந்தரமாக வசிக்கிறார்கள். அடிப்படை வசதிகளே இல்லாத அந்த இடம் தான் அந்தக் குடும்பங்களின் வசிப்பிடம் என்றபோது சற்று அதிர்ச்சியாக இருந்தது. அதைவிட இன்னும் அதிர்ச்சி தரும் விஷயம் என்னவென்றால், அந்தக் குப்பைகளுக்குள் 2 குழந்தைகளும் சுவாசித்துக் கொண்டிருந்தது தான்.

எவ்வித அடிப்படை வசதியும் இல்லாத இம்மாதிரியான இடத்தில் இரண்டு குடும்பங்கள் வாழ்கிறார்கள் என்பதை எங்களால் கற்பனை செய்துகூட பார்க்கமுடியவில்லை. இந்த வளாகம் ஊரை விட்டு 10 கிலோ மீட்டர் தள்ளி அமைந்திருந்ததால் உணவு, தண்ணீர் ஆகியவற்றிற்கு அவர்கள் என்ன செய்வார்கள் என்ற கேள்வியும் என் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.

நாம் 'வேண்டாம்' எனத் தூக்கிப் போட்டிருந்த பொருட்களே அவர்களுக்கு வசிக்கும் வீடாக மாறி இருந்தது. இதில் அந்த 2 குழந்தைகளுக்கு தேவையான பொம்மைகள், ஏன்... அவர்களுக்கான கிழிசல் உடைகள் கூட அந்த குப்பைகளில் இருந்து இலவச இணைப்பாகக் கிடைத்திருந்தது. தினமும் இரண்டு முறை அருகில் இருக்கும் நகரத்துக் குப்பைகளைக் கொண்டு வந்து இங்கு கொட்டுகிறார்கள். அதனை மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என பிரித்து வைப்பது தான் அந்த இரண்டு குடும்பங்களின் வேலை. அவர்களிடம் பேசியதில், குப்பைகளை பிரித்த பின், காண்ட்ராக்டர் வந்து மக்காத குப்பைகளை மட்டும் வண்டியில் எடுத்துச் சென்றுவிடுவார் என்பது மட்டுமே அவருக்கு தெரிந்திருந்தது.

குப்பைகளை சேகரிக்கும் பணியில் தன் தாத்தாவுக்கு உதவியாக அந்த பிஞ்சுக் குழந்தையும் களத்தில் இறங்கி விட்டிருந்தாள். இன்னோர் குழந்தை எங்கே என தேடுகையில், தூரத்தில் தேங்கிக்கிடந்த மழை நீரில் விளையாடிக் கொண்டிருந்தான். அவன் கையில் சின்னதாய் ஒரு பாட்டில். என்ன செய்கிறான் என பார்க்கலாமென மெல்ல அவன் அருகில் சென்றேன். அங்கிருந்த குப்பையில் இருந்து தான் அந்தப் (மருந்து பாட்டில்) பாட்டிலை அவர் எடுத்திருக்கிறான். அதை வைத்து அவன் செய்த காரியம் என் நெஞ்சை பதை பதைக்க வைத்துவிட்டது.

அந்தப் பாட்டிலில், குட்டைபோல் தேங்கி இருந்த மழைத் தண்ணீரை வாரி வாரி குடித்துக் கொண்டிருந்தான் அந்தப் பொடியன். அவன் தாத்தாவிடம் ஓடிச்சென்று அவன் செய்வதைப் பற்றி கூறினேன்.

அதற்கு அவர் , “ரொம்ப நேரமா தண்ணி தவிக்கிதுன்னு சொல்லிட்டு இருந்தான். அவன் அப்பா வரும்போது தான் தண்ணீர் கொண்டு வருவான். அதுவரை புள்ள தாகத்தோட இருக்குமா? எவ்வளவு நேரம் தான் நானும் சமாளிக்கிறது அவனை...” என்று தன் இயலாமையைச் சொன்னார்.

சாலையில் தேங்கிக் கிடக்கும் மழை நீரில் கால் வைக்கவே தயங்குகிறோம் நாம். ஆனால், குப்பைக் கிடங்கில் வசிக்கும் குழந்தை அந்தத் தண்ணீரை அபாயத்தை உணராமல் ஏதோ ஒரு பழைய மருந்துக் குப்பியில் அள்ளிப் பருகுகிறது. இந்தக் காட்சியைப் பார்த்துவிட்டு நாங்கள் பட்ட துயரத்திற்கு அளவே இல்லை.

நாங்கள் அங்கே படங்கள் எடுத்துக் கொண்டிருந்த சமயம் காண்ட்ராக்டர் ஒருவர், பிரித்து வைக்கப்பட்டிருந்த மக்காத குப்பைகளை அள்ளிச் செல்ல லாரியில் வந்து இறங்கினார். எங்களைப் பார்த்ததுமே அவருக்கு உள்ளுக்குள் ஏதோ ஒரு அச்சம். “எதற்காக இதை எல்லாம் படமெடுக்கிறீர்கள்” என கிட்டத்தட்ட எங்களை மிரட்டும் சாயலில் கேட்டார். ஒருகட்டத்தில் எங்களைப் பேசவே விடாமல், அவர் கத்திக் கொண்டே இருந்தார். இனி அவரிடம் பேசி புரியவைக்க முடியாது என்று தெரிந்ததால் ஏதோ சாக்குப் போக்குச் சொல்லிவிட்டு அவசரமாக அந்த இடத்தைவிட்டுக் கிளம்பினோம்.

அணுக் கழிவுகளை (Nuclear Waste) அப்புறப்படுத்துவதற்கான தொழில்நுட்பத்தைப் பற்றி எல்லாம் சிந்திக்கும் நாம், சாதாரண வீட்டுக் கழிவுகளுக்கு ஓர் தீர்வை காண இயலாத நிலையில் தான் இன்னும் இருக்கிறோம். நாகரிகத்தின் உபரி விளைவு இது தான் என்று அறியும்போது, நாம் உண்மையிலேயே நாகரிகமானவர்கள் தானா என்ற கேள்வியும் எழத்தானே செய்கிறது?

x