பேசிக்கிட்டாங்க


தஞ்சாவூர்

சலூன் கடை ஒன்றில்...

“தம்பி... வீட்ல பேப்பர் படிக்க மறந்துட்டேன். லைட்டா பேப்பர் பார்த்துட்டே இருக்கேன்... நீங்க சைஸா வெட்டிடுங்க... சரியா!?"

“நியூஸ் படிக்கிறதெல்லாம் சரி! பேப்பர்ல கொலைச் செய்தி, திகில் செய்தின்னு படிச்சு உணர்ச்சிவசப்பட்டு, லேசா உடம்பை அசைச்சீங்கன்னா... காதோ மூக்கோ கட்டாகிக் கையோட வந்துடும். அப்புறம் இந்த நியூஸை எல்லாரும் பேப்பர்ல படிப்பாங்க. பரவால்லையா?

“அய்யய்யோ. இனி சலூனுக்கு வந்தா ராசி பலன் பார்க்கக்கூட பேப்பரைத் தொட மாட்டேன். மனசுல எதையும் வச்சிக்காம கட்டிங் பண்ணி அனுப்பிடுங்க தம்பி!”

(சலூன்காரர் நமுட்டுச் சிரிப்புடன் கட்டிங்கைத் தொடர்கிறார்!)

- தே.ராஜாசிங்ஜெயக்குமார், தஞ்சாவூர்

சென்னை

சோழிங்கநல்லூர் சிக்னலில் காவலரும் பைக்காரரும்...

“தம்பி... மாஸ்க்கைக் கழட்டிட்டு ஊதிக் காட்டு!”

“என்ன சார் இது. கவர்ன்மென்ட் மாஸ்க் போடணும்னு சொல்லுது. நீங்க கழட்டச் சொல்றீங்களே... பப்ளிக்ல எல்லாம் மாஸ்க் கழட்டமாட்டேன்!”

“ஆமா... கட்டாயப்படுத்தி மாஸ்க்கைக் கழட்ட வைக்கணும்னு எங்களுக்குத் தலைவிதி பாரு. அதான் விஸ்கி வாடை குப்புனு அடிக்குதே. ஊது முதல்ல.”

“சரக்கு அடிச்சிட்டு மாஸ்க் போட்டா கண்டுபிடிக்கவே முடியாதுன்னு என் ஃப்ரெண்ட் சொன்னான். அவனை வுட்டுட்டு என்னைக் குடையறீங்களே சார்!?”

“நீயெல்லாம் ஊதவே வேணாம். நீ உளறுறதுல இருந்தே நீ ஃபுல்லா ஊத்திக்கிட்டு இருக்கிறது தெரியுது. மரியாதையா ஃபைனைக் கட்டு!”

- பா.து.பிரகாஷ், தஞ்சாவூர்

கோவை

எட்டிமடை அருகே இருவர்...

“ஏனுங்ணா... செயின், மோதிரம் எக்ஸ்ட்ரா எதுவும் வச்சிருக்கீங்களா?”

“எதுக்குப்பா கேக்கிற... விசேஷத்துக்கு எதுவும் போறியா?”

“விசேஷம்தான், விவசாய அக்கவுன்ட்ல நகைக் கடன் வாங்குனதெல்லாம் தள்ளுபடின்னு அரசாங்கம் சொல்லிடுச்சு... என்கிட்ட வச்சி வாங்க நகை இல்லை... அதான் உங்க நகையைக் கடனா வாங்கிட்டு போயி கடன் வாங்கலாம்னு பார்க்கிறேன்.”

“தம்பி... ஏற்கெனவே வாங்குன நகைக் கடனை தான் தள்ளுபடி செய்றாங்க... அதுகூட தெரியாம என்கிட்ட கேட்ட மாதிரி யார்கிட்டயும் கேட்டுடாதே... கடன் வாங்குறேன்னு காவு வாங்க வெச்சுடப்போற!”

- பா.சக்திவேல், கோயம்புத்தூர்

சென்னிமலை

பெட்டிக்கடை ஒன்றில்...

“அண்ணே... மில்க் பிஸ்கட் பாக்கெட் குடுங்க.”

“இந்தாங்க... 15 ரூபா குடுங்க.”

“என்னண்ணே சொல்றீங்க... இது 10 ரூபா தானே?”

“இப்போ அதிக பிஸ்கெட் சேர்த்து பாக்கெட்டைப் பெரிசு பண்ணீட்டாங்க... தெரியும்ல?”

“அப்படியா சேதி? இருங்க எண்ணிக்கறேன். ஆமா 10 ரூபா இருந்தப்ப 14 பிஸ்கட் இருந்துச்சு. இப்போ 15 ரூபான்னா 21 பிஸ்கட் இருக்கணும். ஆனா, 20 தான் இருக்கு. மிச்ச ஒண்ணு எங்கண்ணே?”

“ஆமா... பெரிய வாழைப்பழ காமெடி பண்றாரு. நாங்க சிரிக்கணும். போய் பால்ல நனைச்சு பிஸ்கட்டைச் சாப்பிட்டுப் படு தம்பி. வியாபாரம் நடக்கிற இடத்துல வந்து வம்பு வளர்க்காதே!”

- சி.பி. செந்தில்குமார், சென்னிமலை

வேதாரண்யம்

பேருந்து நிலையத்தில் நண்பர்கள் இருவர்...

“என்னடா! கையில பேக்கோட எங்கே கிளம்பிட்...?”

“திருச்செந்தூர் வரைக்கும் போறேன் மாப்ஸ். அங்கே கோயில்ல நாள் முழுக்க அன்னதானம்னு அறிவிச்சிட்டாங்க. அதான் ஒரு புடி புடிக்கலாம்னு கிளம்பிட்டேன்.”

“அடப்பாவி... சோறு கண்ட இடம் சொர்க்கம்னு கிளம்பிட்டியா?"

“என்ன பண்ணச் சொல்றே... சிலிண்டர் செலவு, பெட்ரோல் செலவுன்னு ஒவ்வொரு செலவும் சிண்டைப் பிடிச்சிக்க வைக்குது. அதான் பக்திக்கு பக்தியுமாச்சு... பசியைத் தீர்த்த மாதிரியும் ஆச்சுன்னு முடிவு பண்ணிட்டேன்.”

“இப்போதைக்கு விலைவாசியெல்லாம் குறையிற மாதிரி எனக்குத் தெரியலை. ப்ளானை அப்படியே எக்ஸ்டெண்ட் பண்ணி காசி, ராமேஸ்வரம்னு ஒரு ரவுண்டு போய்ட்டு மெதுவா வா!”

“ஒரு பேச்சுக்கு அன்னதானத்துக்குப் போறேன்னு சொன்னா... ஊருக்கே திரும்ப முடியாத அளவுக்கு ஒரு ஐடியா குடுக்கிறியே... நண்பனாடா நீயெல்லாம்?”

-எஸ்.சுதாகரன், வானவன்மகாதேவி

x