எளிமையாக அறிவியல் பேசும் ‘எந்திரத் தும்பிகள்’!


கலாம் சிலை அருகே ராணுவ விஞ்ஞானி டில்லிபாபு

'தமிழக சிறப்பு அதிரடிப் படையினர், காடுகளில் வீரப்பன் மற்றும் கூட்டாளிகளைப் பிடிக்க நடத்திய தேடுதல் வேட்டையில் விமானப் படையின் எம்.ஐ.-8 (MI 8) ரக ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டது. ஹெலிகாப்டரிலிருந்து கயிறு மூலம் கீழிறங்கித் தாக்குதல் நடத்தும் பயிற்சியும் அதிரடிப் படையினருக்கு வழங்கப்பட்டது...'

இப்படி நீளும் வாக்கியம் இடம்பெற்றது சந்தன வீரப்பனையோ தமிழக சிறப்பு அதிரடிப் படையையோ குறித்த புத்தகத்தில் அல்ல. ஹெலிகாப்டர்களின் தோற்றம், வளர்ச்சி குறித்து ராணுவ விஞ்ஞானி வி. டில்லிபாபு எழுதிய ‘எந்திரத் தும்பிகள்' புத்தகத்தில்.

விருது ஈட்டிய ’எந்திரத் தும்பிகள்’ நூல்

விமானத்தைக் கண்டுபிடித்தது யாரென கேட்டால், ரைட் சகோதரர்கள் எனக் குழந்தைகள்கூட சொல்லிவிடுவார்கள். ஆனால், ஹெலிகாப்டரை உலகுக்குத் தந்தவர்கள் யார் என்று கேட்டால் எத்தனை பேரால் சொல்ல முடியும்? ஹெலிகாப்டரைக் கண்டுபிடித்ததும், இரு சகோதரர்கள்தான். இவர்கள் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள். ஜாக்கஸ் மற்றும் லூயிஸ் பிருகட் சகோதரர்கள் உருவாக்கிய ‘கைரோப்ளேன் 1’ என்ற ஹெலிகாப்டர் 1907-ல் இரண்டு அடி உயரத்தில் ஒரு நிமிடம் மட்டும் பறந்ததாம்.

இப்படி ஹெலிகாப்டரின் அறிவியலை, தொழில்நுட்பத்தை அதனுடன் தொடர்புடைய வரலாற்றுத் தகவல்களை எளிய தமிழில் சுவாரசியமாக விளக்கும் நூல்தான், ‘எந்திரத் தும்பிகள்’.

உயிரிக் கழிப்பறை தொழில்நுட்ப திட்டத்தை கல்லூரியில் நிறுவியபோது...

நிர்பே ஏவுகணை அருகில்...

மக்களுக்காகவே தொழிநுட்பம்

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் பணிபுரிந்த பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (டிஆர்டிஓ) விஞ்ஞானி முனைவர் டில்லிபாபு என்பது காமதேனு வாசகர்கள் அறிந்த விஷயம். இவர் எழுதிய எந்திரத் தும்பிகள் நூலுக்குத்தான் எஸ்.ஆர்.எம் தமிழ்ப் பேராயம் விருதுகள் அண்மையில் அறிவிக்கப்பட்டது. இந்தப் பரிந்துரையை வழங்கியது நீட் தேர்வை ரத்து செய்யப் பரிந்துரைத்திருக்கும் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான மற்றுமொரு கமிட்டிதான். தமிழ்ப் பேராயம் விருதுகளில் ஒன்றான அப்துல் கலாம் தொழில்நுட்ப விருதை ‘எந்திரத் தும்பிகள்’ நூலுக்காக டில்லிபாபு பெறவிருக்கிறார். முரண்களரி படைப்பகம் 2018-ல் இப்புத்தகத்தை வெளியிட்டது.

தமிழில் நல்ல அறிவியல் புத்தகங்களைத் தேடி, நூலகம் நூலகமாகத் தன்னுடைய கல்லூரி பருவத்தில் அலைந்ததே வாசகருக்கு வலிக்காமல் அறிவியல் எழுதத் தன்னை உந்தித்தள்ளியது என்கிறார் டில்லிபாபு. பெங்களூருவில் உள்ள டிஆர்டிஓ நிறுவனத்தில் விஞ்ஞானியாகவும், தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மன்றத்தின் இயக்குநராகவும் செயலாற்றிக்கொண்டே, ‘ஏவுகணையும் கொசுக்கடியும்’, ‘போர்ப்பறவைகள்’, ‘போர்முனை முதல் தெருமுனைவரை’ உள்ளிட்ட புத்தகங்களை எழுதியுள்ளார் இவர்.

மக்களுக்காகவே தொழில்நுட்பங்கள் என்ற பார்வையோடு, சாமானியர்கள் படித்தாலும் புரியும்படியாகத் தன்னுடைய அறிவியல் நூல்களை எழுதி வருகிறார் டில்லிபாபு. ”வியாசர்பாடியில் பிறந்து வளர்ந்த வடசென்னை கால்சட்டை சிறுவன் நான். இன்ஜினீயரிங் முதலாமாண்டு படிக்கும்வரை என்னுடைய வீட்டில் மின்சார வசதி கிடையாது. அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில்தான் படித்தேன்” என்று முகமலர்ச்சியோடு தான் கடந்துவந்த பாதையை நினைவுகூர்ந்தார்.

ராணுவத்துக்கு வழிகாட்டிய அக்னிச் சிறகுகள்!

8-ம் வகுப்பு படிக்கும்போது வீட்டருகில் இருந்த நூலகத்தில் அடியெடுத்துவைத்த டில்லிபாபுவுக்கு, பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம் கண்முன்னே காட்சிகளை விரித்தது. அடுத்தடுத்து ‘படித்தேன் படித்தேன் மண்டை வீங்கும்வரை படித்தேன்’ என்பதுபோல், தீவிரமான வாசிப்புப் பழக்கம் அவரைத் தொற்றிக்கொண்டது. இருந்தாலும் உயர்கல்வியில் என்ன படிப்பது, எங்கே படிப்பது என்பதையெல்லாம் ரத்தமும் சதையுமாகச் சொல்ல ஆள் வேண்டுமே. தன்னுடைய சித்தப்பாவும், டியூஷன் வாத்தியாரான பத்மநாபன் அண்ணாவும் அறிவியலை நோக்கி வழிகாட்டினர் என்கிறார். அதுவும், பொறியியல் படிப்புக்கான கட்டணத்தில் ஒரு பகுதியைச் செலுத்த முடியாமல் தவித்த நாட்களில் நிதியுதவி நல்கிய பத்மநாபனுக்கு இப்போதும் நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறார் டில்லிபாபு.

பிறகு, திருச்சி ரயில்வே துறையில் பணியில் சேர்ந்தவரை மீண்டும் ஒரு நூலகம் தன் வசம் அழைத்தது. அதன் அலமாரியில் உறைந்துகிடந்த கலாமின் ‘அக்னிச் சிறகுகள்’ டில்லிபாபு விரல் பட்டு உயிர்த்தெழுந்தது. அதை வாசித்தபோதுதான் இந்திய பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த எச்.ஏ.எல் நிறுவனம் அறிமுகமானது. அதில் விஞ்ஞானியாகப் பணியில் சேரும் அடிப்படைத் தகுதி தனக்கிருக்கவே நுழைவுத் தேர்வை எழுதி வெற்றிபெற்றார். நாடு முழுவதிலும் இருந்து போட்டி போட்ட 5 லட்சம் விண்ணப்பதாரர்களுக்கு மத்தியில், புணேயில் உள்ள டிஃபென்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் அட்வான்ஸ்டு டெக்னாலஜியில் ஆரம்பநிலை விஞ்ஞானியாகத் தேர்வானார் டில்லிபாபு. அதுவரை புத்தகங்களின் வழியாகக் கற்பனையில் மட்டுமே தரிசித்த போர்க்கப்பலையும் நீர்மூழ்கிக் கப்பலையும், போர் விமானத்தையும், ஹெலிகாப்டரையும் முதன்முதலில் நேரில் பார்த்தார், ரசித்தார், தொட்டார், அவற்றின் மீது ஏறினார்.

தேன் தமிழில் அறிவியல்

அப்துல் கலாம் பணிபுரிந்த துறையில், அதுவும் விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியரான ராகேஷ் ஷர்மாவுடன் இணைந்து வேலை செய்யும் வாய்ப்பு டில்லிபாபுவுக்குக் கிடைத்தது. அந்த பிரமிப்பு அகலாமல் படிப்படியாக வளர்ந்து டிஆர்டிஓ விஞ்ஞானி ஆனார். அனைத்து வாகனங்களுக்கும் இதயம் இன்ஜின் என்பதால், அதில் தன்னுடைய ஆய்வுகளைக் குவித்தார். அதேநேரம், உற்பத்திப் பொறியியலில் முனைவர் பட்டம் படித்தார். தமிழ் மீது கொண்ட தீராக் காதலால் தொலைநிலைக் கல்வியாக முதுநிலை தமிழ் இலக்கியமும் முடித்தார்.

10-வதுவரை தமிழ் வழியில் படித்த டில்லிபாபுவுக்கு, அறிவியல் தொழில்நுட்பம் குறித்து சுவாரசியமான தமிழ் நூல்கள் கிடைக்காமல் போன நாட்கள் நினைவுக்கு வந்தன. அதேபோன்று தமிழில் அறிவியல் கலைச்சொற்கள் சொற்பமாக இருப்பது உறுத்தியது. ட்ரோனுக்கு ‘ஏவல் தேனன்’ என்று பெயர்சூட்டினார். அதற்கான பெயர்க் காரணத்தையும் தேன் சொட்டும் தமிழில் விளக்கினார். இப்படி தன்னுடைய படைப்புகள் வழியே அழகிய அறிவியல் கலைச்சொற்களையும் வார்க்கத் தொடங்கினார்.

அரசுப்பள்ளிகளில் ராணுவ கண்டுபிடிப்பு!

ட்ரோன்கள், இணையம், மின்னஞ்சல் உட்பட இன்று பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வந்துவிட்டவை பல ராணுவ தேவைக்காக வடிவமைக்கப்பட்டவையே. இருந்தபோதும் ராணுவ வீரர்களுக்கும் ராணுவ விஞ்ஞானிகளுக்கும் பொதுச்சமூகத்துடன் நேரடித் தொடர்பு இருப்பதாக இன்றுவரை உணரப்படவில்லை. இந்நிலையில், பனிமலைகளில் கூடாரமிட்டு எல்லை காக்கும் ராணுவ வீரர்களின் பயன்பாட்டுக்காக மனிதக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் உயிரிக் கழிப்பறை (bio toilet) தொழில்நுட்பத்தை டில்லிபாபு தலைமையிலான குழு கண்டுபிடித்தது.

இதன் பயன்பாட்டை ராணுவத்தினரோடு நிறுத்திக்கொள்ளாமல், தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டுசெல்லும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார் டில்லிபாபு.

” சிறுவயதில் என் வீட்டில் கழிப்பறை வசதிகூட இல்லை. பொதுக் கழிப்பறையைத்தான் பயன்படுத்த வேண்டிய சூழல். அதுவே இப்போது உயிரிக் கழிப்பறை (bio toilet) தொழில்நுட்பத்தை உருவாக்கி மக்களிடம் கொண்டுசெல்லத் தூண்டியது. போதுமான, தூய்மையான தண்ணீர் வசதி இல்லாத பகுதிகளுக்கு இத்திட்டம் பேருதவியாக இருக்கும். ஆகையால், அரசுப் பள்ளிகள்தோறும் இதை நடைமுறைப்படுத்தும் முயற்சிகளை எடுப்பேன்” என்கிறார் டில்லிபாபு.

இதேபோல வீணென்று தூக்கி எறியப்படும் வாழை மட்டையைக் கொண்டு ஆடை, பிஸ்கட்டுகள், கட்டிடச் செங்கல் உள்ளிட்ட அன்றாடத்துக்கு அவசியமான பொருட்களைக் குறைந்த விலையில் உற்பத்திசெய்ய வேண்டி தமிழக, கர்நாடக மாநில அரசுகளுடன் இணைந்து பல திட்டங்களை முன்னெடுத்து வருகிறார்.

அன்று ’அக்னிச்சிறகுகள்’, டில்லிபாபு என்ற இளைஞனைச் சிறகடித்துப் பறக்கத் தூண்டியது. இன்று ’எந்திரத் தும்பிகள்’ உள்ளிட்ட எளிய அறிவியல் நூல்களும் ஆயிரக்கணக்கான இளைஞர்களை அறிவியல் தொழில்நுட்பக் கோட்டையை எட்டிப் பிடிக்கத் தூண்டும் என்பதில் சந்தேகமில்லை!

x