இசை வலம்: தூரங்களை இசையால் கடக்கும் நூரன் சகோதரிகள்


நூரன் சகோதரிகள்

தாலிபான்களின் ஆளுகையின்கீழ் வந்துவிட்ட ஆப்கானிஸ்தானில் மட்டும் அல்ல, ஆணாதிக்கம் நிறைந்த இந்த உலகத்தின் ஒவ்வொரு மூலையிலும் கல்வி, வேலைவாய்ப்பு தொடங்கி கலைத் துறை வரை பெண்கள் நீண்ட போராட்டத்தை நடத்தித்தான் தங்கள் இடத்தைத் தக்கவைக்க வேண்டியிருக்கிறது. அதிலும் போராடி ஏதேனும் துறையில் பிரகாசிக்கத் தொடங்கிவிட்டாலும் பெண்களின் உடை, அவர்களின் உடல்மொழி போன்றவற்றைச் சீண்டி, அவர்களைக் கேலிக்கும் கிண்டலுக்கும் உட்படுத்தும் கூட்டம் வலைதளங்களில் நாளுக்கு நாள் பெருகிவருகிறது.

அப்படித்தான், இசை அறிவோ இங்கிதமோ சிறிதும் இல்லாத ஒரு கூட்டத்தால் இணையத்தில் `ட்ரோல்’ செய்யப்படுகின்றனர் நூரன் சகோதரிகள். இளம் சூஃபி இசைப் பாடகர்களான இவர்கள் வெளிப்படுத்தும் உடல் மொழியைக் கேலி செய்யும் விதத்தில், பல வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர் ஒரு சில இணையப் போக்கிரிகள்.

பாரம்பரியமான சூஃபி இசைக் குடும்பத்தில் பிறந்த நூரன் சகோதரிகளான சுல்தானா நூரன், ஜோதி நூரன் ஆகியோர் தங்களின் தந்தை உஸ்தாத் குல்சன் மீரிடமிருந்து இசையைக் கற்றனர். நூரன் சகோதரிகளிடம் குடிகொண்டிருந்த அபரிமிதமான இசைத் திறமையை வெளிக்கொணர்வதில், கனடாவைச் சேர்ந்த மியூசிக் புரமோடரான இக்பால் மகால் பெரும் பங்காற்றினார். 2013-ல், பாபா முரத் ஷா தர்காவில் சகோதரிகள் பாடிய ‘அல்லா வூ’ பாடல் ஒரே இரவில் அவர்களை நாடறியச் செய்தது.

எம் டிவியின் நிகழ்ச்சிகளிலும் பாடியிருக்கும் இவர்களை, 2014-ல் வெளியான `ஹைவே’ இந்திப் படத்தில் பாடவைத்து திரையில் அறிமுகப்படுத்தினார் ஏ.ஆர்.ரஹ்மான். அதைத் தொடர்ந்து ‘சுல்தான்’, ‘மிர்ஸியா’, ‘பாரத்’ போன்ற பாலிவுட் படங்களில் பாடியிருக்கிறார்கள் இந்தச் சகோதரிகள். ‘போகன்’, ‘நெடுஞ்சாலை’ போன்ற சில தமிழ்ப் படங்களிலும் நூரன் சகோதரிகளின் குரல்கள் ஒலித்திருக்கின்றன. சிறந்த பாடகர்களுக்கான கிமா, மிர்ச்சி விருதுகளை வென்றிருக்கும் இவர்கள் பாடும் பாணியே அலாதியானது.

உச்ச ஸ்தாயியில் ஒலிக்கும் குரலில் ஒருவர் முடிக்கும் இடத்திலிருந்து அடுத்தவர் தொடர்வதும், அவர் முடிக்கும் இடத்திலிருந்து மீண்டும் முதலில் பாடியவர் அந்த ஆலாபனை தீபத்தை அணையாமல் காப்பாற்றுவதும்... ஒரு `ரிலே ரேஸ்’ பார்க்கும் உணர்வைத் தரும். இசையின் கொடுக்கல் வாங்கல் சங்கதிகளை வெளிப்படுத்தும் தோரணையில் அவர்களின் உடல்மொழி இருக்கும்.

விஜய் தாமியின் ‘கம்லி கம்லி’ எனும் பாடலுக்கு ஜஸ்ஸி நிகல்வால் அமைத்திருக்கும் மேற்கத்திய பாணியிலான இசை, நூரன் சகோதரிகளின் பாரம்பரியமான ஷாம் சரூஸ்ய கரானா பாணியில் வெளிப்படும் அற்புதமான தருணத்தை இந்தக் காணொலியைப் பார்ப்பவர்கள் உணர முடியும்.

நூரன் சகோதரிகளின் அபாரமான இசையில் லயிப்பவர்களுக்கு அவர்களின் இசைதான் மொழி!

சாதனை சகோதரிகளின் இசை மழையில் நனைய:

மாணவி பாடும் ஆசிரியர் பா!

‘மியூசிக் டிராப்ஸ்’ எனும் அமைப்பின் வழியாக மாணவர்களுக்கு இசையைக் கற்றுக்கொடுத்து, அவர்கள் பாடுவதற்கும் பயிற்சி கொடுத்து, தகுந்த முறையில் அவர்களைப் பாடவைத்து அதை யூடியூபில் பதிவேற்றும் சேவையைச் செய்துவருகிறார் ராஜபாளையத்தைச் சேர்ந்த உமாசங்கர்.

கல்வியாக இருந்தாலும் சரி, இசை, நாட்டியம் முதலான கலைகளாக இருந்தாலும் சரி, கற்றுக்கொள்பவர்களுக்குக் கண்கண்ட தெய்வமாக இருப்பவர்கள் ஆசிரியர்கள்தான். ‘ஆசிரியர்களின் பெருமையை ஒரு மாணவியே பாட்டாகப் பாடினால் எவ்வளவு இனிமையாக இருக்கும்’ எனும் கற்பனையை, நிஜத்தில் நிறைவேற்றியிருக்கிறார் உமாசங்கர்.

குறுந்தொகையிலிருந்து பாடல்கள், கம்பராமாயணத்திலிருந்து பாடல்கள் போன்றவற்றுக்கு இசையமைத்து மாணவர்களைப் பாடவைத்து யூடியூபில் பதிவிட்டு கவனம் ஈர்த்த உமாசங்கர், இந்த முறை ஆசிரியர் தினத்தை ஒட்டி, 7-ம் வகுப்பு படிக்கும் மாணவியான யாழ் நங்கையை, ‘கள்ளம் இல்லா பிள்ளை உள்ளம் கொண்டவர்… நாம் கல்வி பெற சொல்லித்தர வந்தவர்’ எனும் பாடலைப் பாடவைத்து யூடியூபில் பதிவேற்றியிருக்கிறார். பாடல் வரிகளைக் கவிஞர் வீ.கே.கஸ்தூரிநாதன் எழுத, உமாசங்கர் மெட்டமைக்க, தினேஷ்பாபு இசையமைத்திருக்கிறார்.

தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் தங்களின் சிறப்பான அணுகுமுறையால் கவனத்தை ஈர்த்திருக்கும் 26 ஆசிரியர்களின் ஒளிப்படங்களோடு, அவர்களின் தனித் திறன்களையும் இந்தக் காணொலியில் நாம் பார்க்க முடியும் என்பது இதன் சிறப்பு. பாடலே சிறப்பு. அத்துடன் ஆசிரியர்களின் அறிமுகமும் சேர்வது இரட்டிப்புச் சிறப்பு!

குருவணக்கப் பாடலைக் காண:https://www.youtube.com/watch?v=bOcZt8ATGfk

முத்துப்பேச்சியின் நீங்காத ரீங்காரம்!

இயக்குநர் ஷங்கர் இயக்கிய முதல் படமான ‘ஜென்டில்மேன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற `உசிலம்பட்டி பெண்குட்டி முத்துப்பேச்சி’ பாடலை மறைந்த பாடகர்கள் ஷாகுல் ஹமீதும், ஸ்வர்ணலதாவும் உருகி உருகிப் பாடியிருப்பார்கள். அந்த உருக்கமும் கிறக்கமும் அந்தக் காலகட்டத்தில் வீதிதோறும் நிறைந்திருந்த இசைக் குழுக்களைச் சேர்ந்த பாடகர்களின் குரலிலும் வெளிப்படும் நேர்த்தி அலாதியாக இருக்கும். அந்தப் பாடலை அச்சு அசலாகப் பாடுவதற்காக அல்லும் பகலும் முயற்சி செய்து முயற்சி செய்து, அதனாலேயே பரபஸ்பரம் அன்பு வளர்ந்து காதலாகிக் கசிந்துருகி கணவன் மனைவியாக ஆனவர்களும் உண்டு.

இத்தனை ஆண்டுகளுக்குப் பின்பும் அந்தப் பாடலில் இழையோடும் கிராமிய இசை, இந்தத் தலைமுறையைச் சேர்ந்தவர்களையும் ஆடவைக்கிறது. இப்போதெல்லாம் பாடல்களுக்கு ‘கவர் வெர்ஷன்’ வருவதுபோல், நடனங்களுக்கும் ‘கவர் வெர்ஷன்’ வருகிறது. இந்தக் காணொலியில் உசிலம்பட்டி பாடலுக்கு மனோஜ் ஜாக்ஸன், தீபிகா ஆகியோர் தங்களின் பாணியில் நடனத்தை வழங்கியிருக்கின்றனர். இளமைக்கே உரிய துள்ளல் இருக்கிறது. ஆனால் நளினம் மிஸ்ஸிங்!

உற்சாகம் தரும் உசிலம்பட்டி:

x