நிழற்சாலை


பரிவு

முன்னங்கால்களுக்கு

சங்கிலி போடாத பாகனை

வாஞ்சையோடு

வருடிக்கொடுக்கும்

அந்த யானைக்குத்

தெரிந்திருக்க வாய்ப்பில்லை

வசதியாய் ஏறி அமர

முட்டுக்கொடுக்கும்

பொருட்டே அது

முழுதாய் விடப்பட்டுள்ளது

எனும் உண்மை!

-கோவை நா.கி.பிரசாத்

----------------------------------------

முகமூடி இசை

மூங்கில்களுக்குள்

இசையை நிரப்பி

விற்றுவருகிறார்

அந்த நவீன கிருஷ்ணர்...

உதடுகளின் உரசல்களுக்கும்

முகக் கவசத்திற்குமான

இடைவெளியில்

காற்றாடிக்கொண்டிருக்கிறது

பசி.

- கி.சரஸ்வதி

----------------------------------------

பெயரற்ற உயிர்

இருக்கையிலிருந்து

எழுந்து

அருகில் நிற்கும் முதியவரை

அமரவைத்துவிட்டு

பேருந்தின் கம்பிகளை

பிடித்தபடி நிற்கும் அவனுக்குள்

சிறகசைத்தெழும்பும்

சிறு பறவைக்கு

இதுவரை பெயரிடவில்லை

யாரும்!

- மகேஷ் சிபி

----------------------------------------

நீர்மத்தில் கரையும் அமிலம்

மண்கூடை சுமக்கும் இடத்தில்

மதிய உணவாகக் கிடைத்த

பிஸ்கட் பாக்கெட்டை

மடிக்குள் பத்திரப்படுத்துகிறாள்

கந்தலாடைக்காரி


மாலையில் வீடு செல்லும்வரை

வயிற்றுக்குள்

உறுமி அலையும் பசியை

அமைதிப்படுத்த

தன் குழந்தை

பிஸ்கட் ருசிக்கும் காட்சியை

காட்சிப்படுத்திக்கொண்டே இருக்கிறாள்

மனத்திரையில்.

-மருத.வடுகநாதன்

----------------------------------------

மன நிழலின் துளிகள்

கூட்டத்தினரிடையே

தனித்து கையுயர்த்துகிறது

ட்ரை சைக்கிளில்

நர்சரி ரோஜா


* * *

காற்றுக்கடலில்

கப்பலாகிறது

ஆடும் தூளி


* * *

மண் குதிரை

மர யானை

டெடி பியர்

எதற்கும் உயிரில்லை

மகள் செல்லப் பெயர்

வைத்தழைக்கும் வரை!

- ரகுநாத் வ

----------------------------------------

தேடுதல்களின் முடிவில்...

கால ஓட்டத்தில் காணாமல்போன

முகங்களைத் தேடிக்கொண்டிருக்கிறேன்

பேருந்து நிலையங்களில்

சுப நிகழ்வுகளில்

ஏதேனும் துக்க நிகழ்வுகளில்

எங்கும் அகப்படாத முகங்கள்

ஏதோ ஒரு கண்ணீர் அஞ்சலி சுவரொட்டியில்

அகப்படும் தருணங்களில்

பெரும் புயலொன்றின்

பிடியில் சிக்கி சிதைந்து போகும்

பசும் இலையாகிறது

பாழும் மனம்!

- மு.முபாரக்

----------------------------------------

குடலில் ஒட்டிக்கொண்ட பசி

உழைப்பைக்

கொடுத்து

அறிவு புகட்டி

உதிரம் கடத்தி

உணர்வுகளால்

உருவாக்கி

பசியால்

வயிறு

சுருங்கி இறந்துபோன அப்பா

மீண்டும்

வாசலில்

வந்து அமர்ந்திருக்கிறார்

காக்கையின்

சாயலில்

அதே பசியுடன்

- ச.சக்திசாவித்திரி

----------------------------------------

காற்றின் தீராப் பக்கங்கள்

கூடுகளில் இருந்து விடுபட்டு

முளைக்கும் தானியங்களுக்கு

மரத்தின் அம்சம் பூக்கும்


வீசிய விதையில்

பறவையின் பெயர் இருப்பதில்லை

முளைக்கும் விதைக்கு

இன்ன மரமென்று பெயருண்டு


முளைத்த விதை

பறவைக்குக் கூடு தரும்

விதைத்த பறவை

நிலத்திற்கு மரம் கொடுக்கும்


ஓய்வறியா காற்று

சுழன்றுகொண்டே இருக்கிறது

அதிலொரு விதை

மரமாகிக்கொண்டே இருக்கிறது


ஆக்ஸிஜன் தேவையை

கான்க்ரீட் தளங்கள் தீர்ப்பதில்லை

கிராமத்து வேப்பமரங்கள்

காற்றின் தளங்களால் தீர்க்கின்றன


கரோனாவில்

தப்பிய உயிர்களுக்கு

காற்று பூங்கொத்து கொடுக்கும்


பறவையின் இறகு

எழுதிவிட்டுச் செல்கிறது

காற்றின் தீராப் பக்கங்களை.

- வீரசோழன் க.சோ. திருமாவளவன்

---------------------------------------------

கனவுகளால் தைக்கப்பட்ட கூடாரம்

ஞாபகங்களின் கூடாரத்திலிருந்து

தப்பிச் சென்ற ஒரு நினைவைத்

தேடிக்கொண்டே இருந்தாள் அவள்.

பழக்கடையில் ஒரு பழமாக

அந்நினைவு இருக்கலாமென்று

ஒவ்வொரு பழத்தையும்

தொட்டுத் தொட்டுப் பார்த்தாள்.

பிறிதொரு நாள்

கடற்கரை மணற்பரப்பில்

சின்னஞ்சிறு கிளிஞ்சல்களில்

தேடினாள்.

பயணங்களின்

ஜன்னல்வெளிப் பார்வையில்

பின்னோடும் மரங்களிலும் தேடினாள்.

அதிகாலைகளில்

பற்பசையைப் பிதுக்கும்போது

வெளிவருவது

அந்நினைவாக இருக்கக் கூடாதா என்றெண்ணினாள்.

தேடிக்கொண்டிருக்கும்

அந்நினைவைத்

தேய்ப்பதாக பாவித்து

மின் சலவைப் பெட்டியின் வெப்பத்தை

கணவனின் சட்டைக்குக் கடத்தினாள்.

தேடித் தேடி களைத்தவள்

ஞாபகங்களின் கூடாரத்திலிருந்து

அவளே

தப்பிச் சென்றாள்.

- மானா பாஸ்கரன்

x