அந்தச் சிறுமிக்கு வயது 5 தான். கோவை தனியார் பள்ளி ஒன்றில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் இச்சிறுமி, டீவி, பத்திரிகை, வலைதளங்களில் ஏதாவது ஒரு மிருகம் அடிபட்டுக் கிடக்கும் காட்சியைப் பார்த்தாலோ, பறவைகள் அடிபட்டு கரைந்தாலோ இவளும் கரைந்து விடுவாள். “ச்சோ... ச்சோ... மம்மி.., பேர்டு காப்பாத்துங்க மம்மி. எலிபன்ட் ரெஸ்க்யூ பண்ணுங்க டாடி” என்று தன் தாய் தந்தையரைப் பார்த்து அழவும் தொடங்கி விடுவாள். சந்தோஷமான கணங்களில் பார்ப்பவர்களிடம் எல்லாம், “அங்கிள் உங்க வீட்டுல சிட்டுக்குருவி இருக்கா... அதுக்கு நெஸ்ட் இருக்கா? இந்தாங்க நான் தர்றேன். அதுக்கு கூடு வேண்டாமா? அது குஞ்சு பொறிச்சு நிறையா நிறையா ஆகணும் இல்லையா?” என்று மழலையில் கதைக்க ஆரம்பித்து விடுகிறாள்.
அப்படியான சிறுமியை சமீபத்தில் ஒரு பொது நிகழ்ச்சியில்தான் நான் பார்த்தேன். அங்கே வந்திருந்த விஐபிக்களிடம் தன் பெற்றோர் வடிவமைத்த சிட்டுக்கூட்டை கொண்டு போய், “இந்தாங்க அங்கிள். இதை உங்க ஊட்ல வையுங்க. சிட்டுக்குருவி வரும். இதுல தங்கும்” என்று கொடுத்தபடி இருந்தாள்.
அவளிடம் நான் சென்று பேசியபோது, எனக்கும் ஒரு கூடு கொடுத்து சிட்டுக்களை வளர்க்கச் சொன்னாள்.
“உன் பெயர் என்னம்மா?” என்றுதான் கேட்டேன்.
‘‘நியா’’ என்று சொன்னதோடு நில்லாமல், “நான் எல்கேஜி படிச்சேன். அப்புறம் போன வருஷம் யுகேஜி படிச்சேன். இப்ப ஃபர்ஸ்ட் ஸ்டேண்டர்டு போயிருக்கேன். டாடி, மம்மி கூடப் போயி சிட்டுக்குருவிக்கு இந்த பாக்ஸ கொடுத்திட்டிருக்கேன்’’ என்று கொஞ்சிக் கொஞ்சி நிறைய புரிந்தும் புரியாமலும் பேச ஆரம்பித்து விட்டாள்.
‘‘எத்தனை வருஷமா கொடுக்கறீங்க இதை?” என்று கேட்டதும், ‘‘அதுவா நிறைய கொடுத்திருக்கேன். 200 குருவி வீடுக கொடுத்திருப்பேன். அதுல குருவிக வளர்ந்ததும் புடிச்சுக் கொண்டு போய் விட்டிருக்கேன்!’’ என்றெல்லாம் சொன்னவளிடம்,
‘‘இது எதுக்காக செய்யறீங்க?’’ என்றேன்.
“ஓ... மதர் நேச்சர் பத்தி கேட்கறீங்களா? அது நிறைய அனிமல்ஸ். எலிபன்ட்ஸ் அடங்கிய காடு’’ என இன்னும் விரிவாகச் சொல்ல ஆரம்பித்து விட்டாள். உடனிருந்த நியாவின் தாய் சவுமியாவிடம் பேசினேன்.
‘‘நெஸ்ட் ஆர்கனைசேஷன் என்ற ஓர் அமைப்பை நானும், என் கணவரும் 15 வருஷமா நடத்தீட்டு வர்றோம். அதன் மூலமா வார விடுமுறை நாட்களில் எல்லா இடங்களுக்கும் சென்று சிட்டுக் குருவிக் கூடுகள் கொடுத்துட்டு இருக்கோம். மரக்கன்றுகளும் நட்டுத் தர்றோம். இது எல்லாமே இலவசம்தான். எங்க நர்சரி வேலையைப் பார்த்து ரயில்வே ஒரு இடம் கொடுத்திருக்கு. அந்த இடத்தில் அதையெல்லாம் நட்டுக் கொடுக்கறோம்.
நாங்க செய்யறதையெல்லாம் பார்த்துட்டு எங்க குழந்தையும் இதைப் பண்ண ஆரம்பிச்சுட்டா. இப்ப எல்லாம் ஒரு யானைக்கு அடிபடுவதைப் பார்த்தாலோ, ஒரு பறவைக்கு அடிபட்டதை டீவியில பார்த்தாலோ கூட அவளால் தாங்கிக்க முடியறதில்லை. சீக்கிரம் அழுதுடுறா. அவளால் அதை ஏத்துக்க முடியறதில்லை. குழந்தை இந்த அளவுக்கு இன்வால்வ்மென்ட் காட்டறது எங்களுக்கு சந்தோஷம்தான்.
அவளைப் பொறுத்தவரைக்கும் இயற்கைத் தாய்தான் எல்லாமே. அதைத்தான் நாங்க அவளுக்கு சொல்லியும் கொடுத்திருக்கோம். பறவைகள், விலங்குகள் அடிபட்டிருந்தா அதை மீட்டு மருத்துவர்கிட்ட கொண்டு போய் காப்பாத்தறது, காட்டில் விடறதையும் செய்யறோம். யார் கேட்டாலும் சிட்டுக்குருவிக்கூடு கொடுத்துடுவோம். இதுவரைக்கும் 2 ஆயிரம் கூடுகள் கொடுத்திருப்போம். சிட்டுக்கூடுகள் கேட்கறவங்களுக்கு உடனே நாங்க கூடு கொடுத்திடறதில்லை. அங்கே போய் முதலில் சிட்டுக்குருவிகள் வருதான்னு பார்ப்போம். பிறகு கூடு மாட்டி வைப்போம். இப்படிக் கூடு மாட்டி வச்சதில் ஆயிரக்கணக்கான சிட்டுக்குருவிகள் உற்பத்தியாகியிருக்கு.
இது எல்லாம் சொந்த செலவுலதான் பண்றோம். யார்கிட்டவும் பணமா எதுவும் வாங்கினதில்லை. சில ஸ்பான்சர்ஸ் பொருளா தருவாங்க. ஃப்ளைவுட்ஸ் தருவாங்க. சிலர் அதை நாங்க மலிவு விலையில் செஞ்சு தர்றேன்னு வருவாங்க. வெளி மாநிலங்களில் கூட சிட்டுக்கூடுகள் கொடுத்திருக்கோம். அதுக்காக அங்கங்கே ஒருங்கிணைப்பாளர்கள் வச்சிருக்கோம். அவங்களும் இதை சர்வீஸாத்தான் பண்றாங்க. எங்ககிட்ட இந்த இலவசமா கூடு கேட்கறவங்க 9442504154, 9442504164 எண்களுக்கு போன் பண்ணலாம்’’ என்றார்.