மும்பை: நடைபெற்றுவரும் மக்களவைத் தேர்தலில் வாக்களித்த ஆதாரத்துடன் வரும் வாக்காளர்களுக்கு 10 முதல் 20 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படும் என்று நேஷனல் ரெஸ்டாரண்ட் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (என்ஆர்ஏஐ)வின் மும்பை பிரிவு அறிவித்துள்ளது.
வெப்ப அலை உள்ளிட்ட பல விஷயங்கள் ஜனநாயக திருவிழாவின் வாக்குப்பதிவு சதவீதத்துக்கு சவாலாக இருக்கும் நிலையில், அதனை அதிகரிக்க செய்ய தேர்தல் ஆணையமும் பல்வேறு அரசு தனியார் அமைப்புகளும் முயற்சித்து வருகின்றன. இந்தநிலையில், இந்த மக்களவைத் தேர்தலில் மும்பையில் வாக்குப்பதிவு விகிதத்தை அதிகரிக்க நேஷனல் ரெஸ்டாரண்ட் அசோசியேஷன் ஆஃப் இந்தியாவின் மும்பை பிரிவு ‘ஜனநாயக தள்ளுபடி’ என்ற புதிய ஆஃபர் ஒன்றை அறிவித்துள்ளது.
அந்த ஆஃபர் குறித்த அறிவிப்பில், "என்ஆர்ஏஐ-யின் மும்பை பிரிவு உங்களுக்காக ஒரு ஜனநாயக தள்ளுபடி முயற்சியை முன்னெடுத்துள்ளது. உங்களின் வாக்குகளைக் எங்களுடன் சேர்ந்து கொண்டாடும் வகையில், மே 20 மற்றும் 21ம் தேதிகளில் தேர்ந்தெடுக்கப்பட உணவகங்களில் உங்களின் மொத்த பில் பணத்தில் 20 சதவீதம் தள்ளுபடி பெறுங்கள்" எனத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து என்ஆர்ஏஐ-ன் மும்பை பிரிவு தலைவர், ராசேல் கோயங்கா "நூறுக்கும் அதிகமான உணவகங்கள் என்ஆர்ஏஐ-ன் இந்த புதிய முன்னெடுப்பில் பங்கேற்பதை உறுதி செய்துள்ளன. தேர்தல் முடிவடைவதற்குள் இன்னும் பல உணவகங்கள் இதில் இணையும் என்று நம்புகிறோம். மக்களை வாக்களிக்க வைக்க எங்களால் ஆன இந்தச் சிறிய முயற்சிகளை நாங்கள் மேற்கொள்கிறோம். ஒவ்வொரு குடிமகனும் தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதை உறுதி செய்யும் தேர்தல் ஆணையத்தின் முயற்சிக்கு ஆதரவு அளிப்பது எங்களின் சமூக பொறுப்புகளில் ஒன்று.
இந்த 20 சதவீத தள்ளுபடி என்பது வாக்காளர்கள் தங்களின் வாக்குகள் செலுத்துவதை உறுதி செய்யவும் அதனை அங்கீகரிக்கவும் இந்த முடிவினை நாங்கள் எடுத்துள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் 5-வது கட்டமாக மே 20-ம் தேதி 13 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முக்கிய வாக்குப்பதிவு மையங்களான மும்பை, பால்கர், கல்யாண் மற்றும் தானே பகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.