‘பனை’ வளர்க்கப் போராடும் பள்ளி ஆசிரியை!


பிரதிஜின்

‘நிலத்தடி நீர்மட்டத்தை பாதுப்பதில் பனை மரங்கள் முக்கிய பங்காற்றுகின்றன’ என்பது அறிவியல் பூர்வமான உண்மை. இதனால், பனைமரத்தை பாதுகாக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் ஓங்கிக் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக அரசு, பனை மரத்தை வெட்டுவதற்கு கட்டுப்பாடுகள் விதித்து அண்மையில் பிறப்பித்த உத்தரவு பனை ஆர்வலர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. பனை மரங்களைப் பாதுகாப்பதும், நீர்நிலைகள், சாலை ஓரங்கள், வயல்பரப்புகள், தோப்பு பகுதிகளில் பனை விதைகளை ஊன்றி பனைகள் பரவுவதற்கு பலதரப்பட்ட மக்களும் முயன்று வருகின்றனர்.

கிராமங்கள் தோறும் பனை மரத்தின் அருமை பெருமைகளை எடுத்துச்சொல்லி, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தைச் சேர்ந்த ஆசிரியை பிரதிஜின் (41).

`தமிழ்நாடு பனைமர பாதுகாப்பு இயக்கம்’ என்ற அமைப்பைத் தொடங்கி, அதன் மூலம் கடந்த 5 ஆண்டுகளாக இந்தப் பிரச்சாரத்தை முன்னெடுத்து வரும் பிரதிஜின், கிராமப்புறங்களில் பனை விதைகளை கொடுத்து வீட்டு வளாகங்களில் ஊன்றச் செய்கிறார். பள்ளி செல்லும் குழந்தைகளிடமும், கிராமத்து இளைஞர்களிடமும் பனை பொருட்களின் அருமை பெருமைகளை எடுத்துச் சொல்வது இவரது இன்னொரு பணி.

கேரளத்தின் நெய்யான்றின்கரையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வரும் பிரதிஜின், தனது மாத ஊதியத்தின் பெரும்பகுதியை பனைமரப் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காகவும், பனை விதைகள் வாங்குவதற்காகவும் செலவிடுகிறார். பள்ளி விடுமுறை நாட்களில் பனை விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வரும் இவர், சட்டப்பேரவைத் தேர்தலின் போது, தனது தொகுதியின் வேட்பாளர்கள் அனைவருக்கும் பனை ஓலையாலான தொப்பி, விசிறி , மாலை போன்றவற்றைத் தந்து வரவேற்றதுடன், “வெற்றிபெற்றதும் பனை மரங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுங்கள்” என கோரிக்கையும் வைத்தார்.

இவரது எளிமையான இந்தப் பனை விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஊக்கப்படுத்தும் விதமாக, இதுவரை இவருக்கு 50-க்கும் மேற்பட்ட விருதுகளை வழங்கி கவுரவித்திருக்கின்றன தன்னார்வல அமைப்புகள்.

காமதேனு இணையத்துக்காக பிரதிஜினிடம் நாம் பேசியபோது, “அனைவருமே வீட்டுக்கு ஒரு ஆண் பனையையும் ஒரு பெண் பனையையும் கட்டாயம் நட்டுப் பாதுகாக்க வேண்டும். அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் எதுவாக இருந்தாலும் வளாகப் பகுதிகளில் குறைந்தது 5 பனை மரங்களை நடவேண்டும். அது அப்பகுதியை அழகுற வைப்பதுடன் நிலத்துக்கும், நமக்கும் தேவையான வளங்களைக் கொடுக்கும். அருமை தெரியாமல் அழிக்கப்பட்டு வந்த பனை மரத்தை பாதுகாக்க, தமிழக அரசு எடுத்திருக்கும் முயற்சி பாராட்டத்தக்கது.

அதேநேரம், பனை தொழிலாளர்களுக்கு உயிர் பாதுகாப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். பனையில் இருந்து தவறி விழுந்து இறக்கும் பனை தொழிலாளர்களின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். பனை தொழிலை மேம்படுத்த அரசு மானியம் வழங்கவேண்டும். பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு பனை விதைகளை விநியோகம் செய்ய வேண்டும். நுங்கு, கருப்பட்டி, பனம்பழம், கிழங்கு போன்றவற்றில் உள்ள இயற்கை ஊட்டச்சத்துகள் குறித்துப் பரவலாக அனைவரும் அறியச் செய்திடல் வேண்டும்.

எனது சம்பளத்தைக் கொண்டு பனைகளை காக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். அரசு எனக்கு வாய்ப்பளித்தால் தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் குழந்தைகள், கிராம மக்களிடம் பனைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை முறையாக ஏற்படுத்துவேன். மாற்றம் நம் வீட்டிலிருந்தே தொடங்கவேண்டும் என்பதற்காகவே, பள்ளியில் படிக்கும் எனது ஒரே மகனுக்கு பனை மரம் ஏறி, பதநீர் எடுக்க இப்போதே பயிற்சி அளித்து வருகிறேன்” என்றார்.

x