அங்ககச் சான்றளிப்புத் துறை கோவையிலிருந்து சென்னைக்கு மாற்றமா?


இயற்கை விவசாயத்துக்கு பக்கபலமாக இருக்கும் அங்ககச் சான்றிதழ் துறையை, கோவையிலிருந்து சென்னைக்கு மாற்றும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து விவசாயிகள் கொதிப்பில் உள்ளனர்.

அங்ககச்சான்று வழங்கு துறை என்பது, இயற்கை விவசாயத்தை ஊக்குவித்துக் கண்காணிக்கும் முக்கியமான துறை. இதன் அலுவலகம் கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் அருகிலேயே இயங்கி வருகிறது. இயற்கை விவசாயம் செய்பவர்களின் நிலங்களுக்கு நேரடியாக விசிட் செய்து, அதன் மண் மாதிரி, இயற்கை உரம் சம்பந்தப்பட்ட விஷயங்களை ஆராய்ந்து சான்றிதழ் கொடுப்பதோடு, விதைச்சான்றும் அளித்து வருவது இதன் முக்கிய பணி ஆகும்.

இந்தத் துறையின் இயக்குநர் அலுவலகம் கோவையில் இருப்பதாலும், மத்திய அரசின் மானியம் பெறுவதும் சுலபமாக இருப்பதாலும் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட கோவை மண்டலப் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளில் இயற்கை விவசாயம் பெருமளவில் நடைபெறுகிறது. கோவை மண்டலத்தில் மட்டும், சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இயற்கை விவசாயம் செய்து வருகின்றனர். தற்போதைய கணக்குப்படி, சுமார் 160 பேருக்கு இயற்கை விவசாயம் செய்வதற்குரிய அங்ககச் சான்றிதழ் தருவது நிலுவையில் உள்ளது.

சமயமூர்த்தியிடம் பாஜக நிர்வாகிகள் மனு

இந்நிலையில்தான், கோவையில் உள்ள அங்ககச்சான்று அலுவலகத்தை சென்னைக்கு மாற்றுவதாக அண்மையில் வேளாண் அமைச்சர் எம்.ஆ.கே.பன்னீர்செல்வம் அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாய அமைப்புகள், அங்ககச்சான்று துறையை சென்னைக்கு மாற்றக் கூடாது என கோவை மாவட்ட ஆட்சியருக்கும் வேளாண் அமைச்சருக்கும் மனு அனுப்பினர். இருப்பினும் இதுகுறித்து அரசு தரப்பில் புதிய உத்தரவுகள் ஏதும் வெளியாகாத நிலையில், இதுகுறித்து தமிழக பாஜக விவசாயி அணி மாநிலத் தலைவர் ஜி.கே.நாகராஜிடம் பேசினோம்.

‘‘கோவையிலிருந்து சென்னைக்கு அங்ககச்சான்றிதழ் மற்றும் விதைச்சான்று துறையை மாற்றுவதால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து வேளாண் துறை செயலாளர் சமயமூர்த்தியைச் சந்தித்து எடுத்துச் சொன்னோம். கோவை அலுவலகம் சென்னைக்கு மாற்றப்பட்டால், கொங்குமண்டலத்தில் இயற்கை விவசாயம் முடக்கப்படும். எனவே, இதை எதிர்த்து செப்டம்பர் 21-ம் தேதி கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தும் தகவலையும் அறிவித்தோம்.

இது தொடர்பாக பின்னர் தொலைபேசியில் என்னிடம் பேசிய வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், அங்ககத்துறையை முழுமையாக சென்னைக்கு மாற்றவில்லை என்றும், அலுவலகப்பணியை எளிதாக்கவும், கண்காணிக்கவும் இயக்குநர் அலுவலகத்தை மட்டும் சென்னைக்கு மாற்றுவதாக தெரிவித்தார். இதுதொடர்பாக முதல்வரோடு கலந்து தெளிவான அறிக்கை வெளியிட வேண்டுமென்று எங்கள் அணி சார்பாக அமைச்சரிடம் கேட்டுக் கொண்டேன். அவரும் பரிசீலிப்பதாக உறுதியளித்தார். அதனால் எங்களது கண்டன ஆர்ப்பாட்டத்தை ஒத்தி வைத்தோம். இது தொடர்பாக, 24-ம் தேதி பாஜக விவசாய அணி நிர்வாகிகள் வேளாண் அமைச்சரை சந்தித்துப் பேசுகிறார்கள். அதன் பிறகு எங்களது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அறிவிப்போம்” என்றார்.

ஜி.கே.நாகராஜ்

இயற்கை விவசாயம் செய்து வரும் கோவை விவசாயிகள் சிலரிடம் பேசியபோது, “கோவையில் இந்தத் துறை அலுவலகம் இருப்பதனால்தான், உடனுக்குடனே அதிகாரிகளை சந்திக்க முடிகிறது. வேளாண் பல்கலைக்கழகத்திலேயே இது சம்பந்தப்பட்ட தொழில்நுட்பம் இருக்கிறது. அங்குள்ள வல்லுநர்களிடம் ஆலோசனை கேட்டு செயல்பட முடிகிறது. வருடந்தோறும் இயற்கை விவசாயத்திற்கான புதுப்பிப்பையும் வெகு சீக்கிரமே அலுவலர்கள் ஃபீல்டுக்கு வந்து செய்து தந்து விடுகிறார்கள். சென்னைக்கு இந்த அலுவலகம் மாற்றப்பட்டால் தொட்டதுக்கெல்லாம் நாங்கள் அலையவேண்டி இருக்கும். அதனால் கோவை மண்டலத்தில் இயற்கை விவசாயம் செய்வோர் எண்ணிக்கை குறைந்து, இயற்கை விவசாயமே காணாமல் போய் விடும்’’ என்றனர்.

x