மொழியைப் பற்றி ஆழமாகச் சிந்தித்தவர் கிரா


‘கிரா நூறு’ புத்தகத்தை வெளியிடும் ரவிக்குமார்

எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் 99-வது பிறந்தநாள் விழா, புதுச்சேரியில் நேற்று (செப்.18) நடைபெற்றது. அவ்விழாவில் பேராசிரியர் க.பஞ்சாங்கம் எழுதிய ‘கிரா நூறு’ என்ற நூல் வெளியிடப்பட்டது. விழுப்புரம் மக்களவை உறுப்பினர் முனைவர் து.ரவிக்குமார் இந்நூலை வெளியிட்டு ,கிராவைப் பற்றி பேசிய உரையின் சுருக்க வடிவம், ‘காமதேனு’ வாசகர்களுக்காக...

கிரா பல்கலைக்கழகத்தில் படித்துப் பட்டம் பெற்றவர் அல்ல. ஆனால், புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக அவரை நியமித்தார் அன்றைய துணைவேந்தர் வேங்கட சுப்பிரமணியன். அது ஒரு தனித்துவமான செயலாகும். அப்படி நியமிக்கப்பட்ட கிரா, தான் எந்தவொரு பேராசிரியருக்கும் குறைந்தவர் அல்ல என்பதைத் தனது செயல்பாடுகளின் மூலமாக நிரூபித்தார்.

ஒரு மொழியியலாளரின் தீவிரத்தோடும் நுட்பத்தோடும் பல கருத்துகளை அவர் தெரிவித்திருக்கிறார். உரைநடைக்கும் கவிதைக்கும் இடையே இருக்கும் வேறுபாட்டைப் பலமுறை அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். உரைநடைக்குப் போதிய முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை என்பது அவரது ஆதங்கம். உலகத் தமிழ் மாநாடுகளில்கூட உரைநடைக்கு உரிய மதிப்பு அளிக்கப்படுவதில்லை என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் சேர்ந்தபோது தமிழ்த் துறையை உரைநடைத் துறை, கவிதைத் துறை என்று இரண்டாகப் பிரிக்க வேண்டும் என துணைவேந்தரிடம் கூறினாராம்.

உரைநடை பற்றிய கிராவின் அவதானிப்பு முக்கியமானது. ‘உரைநடை என்பது தோன்றி 100, 150 ஆண்டுகள்தான் ஆகின்றன. அது குழந்தைப் பருவத்தில் இருக்கிறது. எனவே, அதை வளர்த்தெடுப்பதற்குக் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும்’ என்பதே அவருடைய வாதம். தமிழ் உரைநடைக்கு பாரதியார் செய்த பங்களிப்பை எல்லோரும் பாராட்டுவார்கள். ஆனால் அவருக்கு முன்பாகவே ராமலிங்க அடிகளார் தமிழ் உரைநடைக்கு மிகப்பெரிய அளவில் பங்களிப்பைச் செய்திருக்கிறார் என்று கிரா குறிப்பிடுகிறார்.

கிரா, தான் சந்திக்க விரும்பிய 2 எழுத்தாளர்களைப் பற்றி மிகுந்த வருத்தத்தோடு சொல்லியிருக்கிறார் - ஒருவர் புதுமைப்பித்தன், இன்னொருவர் தருமு சிவராமு. அவர்கள் இருவரையும் சந்திக்க விரும்பியதாகவும், அதற்குள் அவர்கள் மரணமடைந்துவிட்டதாகவும் அவர் வெவ்வேறு கட்டுரைகளில் குறிப்பிட்டிருக்கிறார். பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெறவில்லை என்றாலும் கிரா எதையும் படிக்காத பாமரர் அல்ல. ஏராளமாக அவர் வாசித்திருக்கிறார். அது அவருடைய எழுத்துக்களில் வெளிப்படுகிறது.

கிரா தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர் என்பதைச் சிலர் விமர்சன தொனியில் சொல்வதுண்டு. ஒரு வாசகர் அவரிடத்தில் கேட்கிறார், “நீங்கள் எந்த மொழியில் சிந்திப்பீர்கள்?” என்று. அதற்கு ரஷ்ய எழுத்தாளர் நபகோவ் கூறிய ஒரு பதிலை கிரா மேற்கோள் காட்டுகிறார். அதேபோல ஒரு கேள்வி நபகோவிடம் எழுப்பப்பட்டபோது, “நான் மொழியால் சிந்திப்பதில்லை. படிமங்களால் சிந்திக்கிறேன்” என்று அவர் பதில் அளித்தாராம். ஒரு படைப்பாளி மொழியால் சிந்திப்பது கிடையாது. படிமங்களால்தான் சிந்திக்கிறார் என்பதை மிக அழுத்தமாகப் பதிவுசெய்திருக்கிறார் கிரா.

பேச்சு மொழியைக் கொச்சை என்று சொல்பவர்களை அவர் கண்டிக்கிறார். ‘பண்டித மொழிதான் கொச்சையானது, செயற்கையானது. மக்கள் பேசுகிற மொழி கொச்சையானது அல்ல’ என்பது அவரது வாதம். ‘கதைசொல்லி’ என்ற ஒரு பத்திரிகையையும் கிரா நடத்தினார் என்பது நமக்குத் தெரியும். ஆனால், அவர் நடத்த விரும்பி நடத்த முடியாமல் போன ஒரு பத்திரிகை இருக்கிறது. அந்தப் பத்திரிகைக்கான ‘ஐடியாவே’ ரொம்ப விநோதமாக இருக்கிறது.

ஒருவர் ஒன்றை எழுதி இன்னொரு நபருக்கு அனுப்ப வேண்டும். அவர் அதில் ஒன்றை எழுதி அதை இன்னொரு நபருக்கு அனுப்ப வேண்டும். இப்படிக் குறிப்பிட்ட சில எழுத்தாள நண்பர்களுக்குச் சென்று ஒவ்வொருவரும் அதில் எழுதி அது இறுதியில் இடைச்செவலுக்கு வந்து சேர 6 மாதங்கள் பிடிக்கலாம் என்று அனுமானித்து அதை அவர் ஆரம்பித்தார்.

அதைப் பற்றி அவநம்பிக்கையோடு சொன்னவர் அழகிரிசாமி. “ராஜநாராயணனுக்குத்தான் இப்படி விநோதமான கற்பனையெல்லாம் வரும்” என்று அவர் கேலி செய்தாராம். அப்படி ஒவ்வொருவரிடமாகப் போன அந்தப் பத்திரிகை, கிருஷ்ணன் நம்பியிடமிருந்து சுந்தர ராமசாமிக்குப் போய்ச் சேர்ந்ததுவரை கிராவுக்குத் தெரியும். அதன் பிறகு என்ன ஆனது என்று தெரியவில்லை. ஒருமுறை சுந்தர ராமசாமியைப் பார்த்தபோது அதைப் பற்றி அவரிடம் கிரா பேசியிருக்கிறார்.

“ஆமாம்! அது என்னிடம் வந்து இங்கேதான் இருக்கிறது. நீங்கள் புறப்படுவதற்கு முன்பு நான் அதை உங்களுக்குத் தந்துவிடுகிறேன்” என்று உத்தரவாதம் சொல்லி, அதைப் போலவே புறப்படுவதற்கு முன்பு அதைக் கொண்டுவந்து கையில் கொடுத்துவிட்டு, “ஊருக்குப் போய்ப் படித்துப் பாருங்கள்” என்று சொன்னாராம். அவரும் ஆர்வத்தோடு ஊருக்கு வந்து பிரித்துப் பார்த்தால் அதில் சுந்தர ராமசாமி ஒரு வார்த்தைகூட எழுதவே இல்லையாம். அந்தப் பத்திரிகைக்கு பெயர் ‘ஊஞ்சல்’. அது ஒரு இதழ்கூட முற்றுப்பெறாமலேயே நின்றுபோனது. இப்போது, அதுபோல ஓர் இதழை மின்னஞ்சலில், வாட்ஸ்-அப்பில் நடத்திப் பார்க்கலாம் எனத் தோன்றுகிறது.

“கிராவோடு பழகுகிற ஒவ்வொருவரும் தன் மீதுதான் அவர் அதிக அளவு பாசம் வைத்திருந்தார் என்று எண்ணுமளவுக்கு பழகுவார்” என்று பஞ்சு (க.பஞ்சாங்கம்) இங்கே குறிப்பிட்டார். அது உண்மைதான். கிரா புதுச்சேரிக்கு வந்த புதிது. நான் அப்போது லாஸ்பேட்டை, பாரதியார் சாலையில் ஒரு வீட்டில் வாடகைக்குக் குடியிருந்தேன். ஒருநாள் காலை ஆறுமணி இருக்கும். யாரோ கதவு தட்டும் சத்தம் கேட்டது. திறந்து பார்த்தால் அங்கே கிரா நின்றுகொண்டிருந்தார். “ஐயா வாங்க!” என்று கூப்பிட்டேன்.

“அடடா, இது உங்கள் வீடா?” என்று கேட்டார். ஆமாம் என்றேன். “தினமும் இந்த வழியாக நான் நடைபயிற்சிக்குப் போகும்போது ஒவ்வொரு நாளும் வாசலில் மிகப் பெரிய கோலம் போட்டிருப்பதைப் பார்ப்பேன். ரொம்ப அழகா அந்த கோலம் இருக்கும். நகரத்துல அதுவும் இவ்வளவு பெரிய கோலத்தைப் போடறவங்க யாருன்னு பார்த்து அவங்களைப் பாராட்டணும்னு தோணினது. அதுக்காகத்தான் கதவைத் தட்டினேன்” என்றார் கிரா.

என் மனைவியைக் கூப்பிட்டு அவரிடம் அறிமுகம் செய்தேன். அவர் பாராட்டியதைக் கேட்டதும் அவருக்கு அளவுகடந்த சந்தோஷம். நான் ஒருநாளும் அப்படிப் பாராட்டவில்லையே என்பது அப்போதுதான் எனக்கு உறைத்தது. சிறுவயதில் எங்கள் ஊரில் மார்கழி மாதத்தில் அக்கா போடும் கோலத்துக்கு நடுவில் வைப்பதற்காக விடிகாலை நாலு மணிக்கெல்லாம் போய் பரங்கிப் பூ பறித்திருக்கிறேன். அக்கா போடும் கோலத்தைப் பக்கத்திலேயே உட்கார்ந்து பார்த்துப் பாராட்டியிருக்கிறேன். அப்படிப் பாராட்டிய எனக்கு மனைவி போட்ட கோலத்தைப் பாராட்டத் தோன்றாமல்போனது சுருக்கென்று தைத்தது.

ஒருமுறை கிராவைப் பார்க்க அம்பை வந்திருக்கிறார். பேச்சுக்கு இடையில் உவேசா எழுதிய ‘என் சரித்திரம்’ பற்றிப் பேச்சு போயிருக்கிறது. அதில் எத்தனை பேரைப் பற்றி எவ்வளவு விவரங்களை எழுதியிருக்கிறார் என்று வியந்து கிரா அம்பையிடம் சொல்லியிருக்கிறார். “அவ்வளவு பேரைப் பற்றி எழுதி என்ன பிரயோஜனம்? தன்னுடைய மனைவியைப் பற்றி ஒரு வார்த்தைகூட அதில் உவேசா எழுதலையே” என்று அம்பை சுட்டிக்காட்டியிருக்கிறார்.

கூடவே வாழ்ந்த ஒரு பெண்ணைப் பற்றி ஒரு வார்த்தைகூட உவேசா எழுதாமல் போனது ஏன் என்ற கேள்வி, அப்போதுதான் அவருக்குள்ளும் எழுந்திருக்கிறது. கூடவே இருக்கிறவர்களை நம்மில் பலர் மறந்துபோய்விடுகிறோம். ஆனால், கிரா அப்படி மறக்கவில்லை. கணவதி அம்மாளைப் பற்றி எப்போதும் அவர் பேசிக்கொண்டே இருந்தார். எழுத்திலும் பதிவுசெய்தார்.

x