கவிஞர் பிரான்சிஸ் கிருபா மரணம்


பிரான்சிஸ் கிருபா

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே உள்ள பத்தினிபாறை கிராமத்தைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் கிருபா. கவிஞர், திரைப்படப் பாடலாசிரியர் என வலம்வந்த இவர், உடல்நலமின்மையால் சென்னையில் நேற்று இரவு காலமானார். அவரது உடல் சொந்த ஊரான பத்தினிப்பாறையில் இன்று அடக்கம் செய்யப்படுகிறது.

சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் திடீரென வலிப்புநோய் வந்து தவித்த வழிப்போக்கருக்கு உதவப்போன கவிஞர் பிரான்சிஸ் கிருபா, வலிப்பு நோய் வந்தவரை கொலை செய்துவிட்டதாக நினைத்து போலீஸார் கைதுசெய்த சம்பவத்தை அத்தனை எளிதில் மறந்துவிட முடியாது. ராஜஸ்தானைச் சேர்ந்த வாலிபர் வலிப்பு வந்து துடிக்க, அவரை மடியில் போட்டுக்கொண்டு முதலுதவி செய்தார் கிருபா. ஆனால், ராஜஸ்தான் வாலிபர் பிழைக்கவில்லை. இதை கொலை என நினைத்து, போலீஸார் பிரான்சிஸ் கிருபாவை கைது செய்தனர். கடைசியில் சிசிடிவி காட்சிகளின் மூலம் உண்மை தெரிந்தது. அந்த நேரத்தில் பிரான்சிஸ் கிருபாவுக்காக மொத்த இலக்கிய உலகும் குரல் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. அதிலிருந்து மீண்டுவந்து தனக்கான அடுத்த இன்னிங்ஸை தொடங்கியிருந்த பிரான்சிஸ் கிருபா, உடல் நலமின்மையால் உயிர் இழந்தார்.

புதுச்சேரியில் இயங்கிவரும் ‘மீறல் இலக்கியக் கழகம்’ கிருபாவுக்கு கபிலர் விருதை வழங்கியது. ‘சக்தியின் கூத்தில் ஒளி ஒருதாளம்’ என்னும் பாரதியின் கவிதைவரியை தலைப்பாக்கி, தன் சமீபத்திய கவிதைத் தொகுப்பை வெளியிட்டார் கிருபா. கூடவே, முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் ‘பைரி’ படத்திலும் முக்கியப்பாத்திரத்தில் நடித்துவந்தார். மெசியாவின் காயங்கள், வலியோடு முறியும் மின்னல் உட்பட 8 கவிதைத் தொகுப்புகள், ’கன்னி’ என்னும் நாவலையும் எழுதியிருக்கிறார். தனது படைப்புகளுக்காக விருதுகளையும் வாங்கிக் குவித்திருக்கிறார் கிருபா.

வெண்ணிலா கபடிக்குழு படத்தில் ‘மண்ணைத்தொடு…மார்பில் இடு’, ஆதலால் காதல்செய்வீர் படத்தில், ’பூவும்பூவும் பேசும்நேரம்’ உள்ளிட்ட பாடல்களை எழுதியிருக்கிறார் பிரான்சிஸ் கிருபா. அழகர்சாமியின் குதிரை படத்தில் இவர்எழுதிய, ’குதிக்குற…குதிக்குற குதிரைக்குட்டி’ பாடலை, இளையராஜா இசை அமைத்து பாடவும் செய்தார் என்பது இவரது கலைப்பயணத்தில் ஒருமைல்கல். இலக்கியத்தில், குறிப்பாக கவிதை உலகில் மிகத்தீவிரமாக இயங்கிவந்த பிரான்சிஸ் கிருபாவின் இறப்பு, இலக்கிய உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

x