“200 வகையான உணவுகளால் ஆண்டுக்கு 60 கோடி பேர் நோய்வாய்ப்படுகிறார்கள்!”


திருப்பூர்: ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் திருப்பூர் மாவட்டம் மற்றும் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 இணைந்து உலக உணவு பாதுகாப்பு தினத்தை இன்று சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன. இதை முன்னிட்டு கல்லூரி வளாகத்தில் இன்று உணவு பாதுகாப்பு, எதிர்பாராததற்கு தயாராகுங்கள் என்ற மையக் கருத்தை வலியுறுத்தி ஊட்டச்சத்து காய்கறிகள், சிறுதானியங்கள், பழவகைகள் கண்காட்சி நடைபெற்றது.

கண்காட்சிக்கு தலைமை வகித்த கல்லூரி முதல்வர் கிருஷ்ணன், ''உணவு மனிதன் உயிர் வாழ அவசியம். ஆனால், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 200 வகையான உணவுகள் மூலம் பரவும் நோய்களின் விளைவாக 60 கோடி மக்கள் நோய்வாய்ப்படுகிறார்கள். இத்தகைய நோயின் சுமை ஏழைகள் மற்றும் இளைஞர்கள் மீது மிக அதிகமாக விழுகிறது. கூடுதலாக, உணவு மூலம் பரவும் நோய் அதிகளவு இறப்புகளுக்கு காரணமாகிறது. ஆரோக்கியமாக வாழ்வதற்கு இயற்கை உணவுகளை உட்கொள்ள வேண்டும்'' என்றார்.

மாணவச் செயலர்கள் சுந்தரம், மது கார்த்திக், ஜெயச்சந்திரன் ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு ஊட்டச்சத்தின் மூலம் எவ்வாறு நோய்களை கட்டுபடுத்தலாம் என்பது குறித்தும் தரமற்ற உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் கண்காட்சி மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். நிகழ்வில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் அங்கன்வாடி பணியாளர்கள் பங்கேற்றனர். குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சவுமியா, நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தார்.