மணிமேகலை காட்டும் புகார் நகர கடல்கோள்


பூம்புகார் சிலப்பதிகாரக் கலைக்கூடம்

2016-ல் நாமறிந்த ஆழிப்பேரலையான சுனாமி, அதற்கு முன்னால் பலமுறை உலகின் பல கடற்கரை நகரங்களை கபளீகரம் செய்திருக்கிறது என்கிறது வரலாற்றுத் தகவல். நம்முடைய சங்க இலக்கியத்திலும், வரலாற்றிலும் மிகப்பெரிய வணிகநகராக இருந்த ‘பூம்புகார்’ என்னும் ‘காவிரிபுகும்பட்டினமும்’ அப்படி ஒரு கடல்கோளால்தான் அழிந்திருக்கிறது.

அதை வரலாற்றாய்வாளர்கள் பலரும் பல்வேறு ஆய்வுகளின் மூலம் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். இந்த கடல்கோள் குறித்து, பூம்புகாரைப் பற்றிய இருபெரும் காப்பியங்களான சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலையில் ஏதாவது குறிப்புகள் உள்ளனவா என்பது குறித்து, புவியியல் ஆய்வாளர் மறைந்த சிங்கநெஞ்சம் சம்பந்தம் ஒரு விரிவான ஆராய்ச்சி கட்டுரை எழுதியிருக்கிறார். அது நம் பார்வைக்கு...

தற்போதைய பூம்புகார்

உலகின் பழமையான மொழிகளில் உள்ள இலக்கியங்களிலும், தொன்மைக் கதைகள் பலவற்றிலும், கடல்கோள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. விரிக்கின் மிகும். நாம் இரட்டைக் காப்பியங்கள் எனக் கொண்டாடும் சிலப்பதிகாரத்திலும், மணிமேகலையிலும் கடல்கோள் பற்றிய செய்திகள் கூறப்பட்டுள்ளன. குறிப்பாக மணிமேகலை காப்பியத்தில் கடல்கோள் பற்றிய குறிப்புகள் பல்வேறு காதைகளில் பரவிக் கிடக்கின்றன. நூலின் ஆசிரியர் சீத்தலை சாத்தனார், பல்வேறு கதாபாத்திரங்கள் வாயிலாக காவிரிப்பூம்பட்டினம் கடலால் அழிந்த செய்தியை நமக்குத் தெரிவிக்கிறார்.

பூம்புகார் நகரின் கடற்கரையில் உப்பளத்தின் அருகே மணற்குன்று ஒன்றில் இருந்த மன்னன் கிள்ளிவளவனைப் பார்த்து, பாணர் ஒருவர், “-----உன் மாநகர், கடல் வயிறு புகூஉம்” (24: 62-63) என்று எச்சரித்ததாக, மணிமேகலையின் பாட்டி சித்திராபதி, இராசமாதேவியிடம் கூறுகிறார். இந்தக் குறிப்பு ‘ஆபுத்திரன் நாடு அடைந்த காதை’ யில் காணப்படுகிறது.

தொடந்து, மணிபல்லவத் தீவுக்கு ஆபுத்திரனோடு சென்ற மணிமேகலையிடம், அத்தீவிலிருந்த புத்தபீடிகையை காத்துவந்த தீவதிலகை, “பலர் தொழு பாத்திரம் கையில் ஏந்திய மடவரல் நல்லாய்-நிந்தன் மாநகர் கடல் வயிறு புக்கது”(25: 174-176) என்றும், “வானவன் விழாக்கோள் மாநகர் ஒழிந்தது” (25:197) என்றும், “விரிதிரை வந்து வியன் நகர் விழுங்க, ஒருதனிப் போயினன் உலக மன்னவன்; அருந்தவன் தன்னுடன், ஆய் இழைத் தாயரும் வருந்தாது ஏகி , வஞ்சியுள் புக்கனர்” ( 25: 203-206) என்றும், கூறுகிறாள்.

இவை ‘ஆபுத்திரனோடு மணிபல்லவம் அடைந்த காதை’ யில் வருகின்றன.

தற்போதைய கடல் அரிப்பு

இதை அடுத்து, வஞ்சி மாநகர் சென்று அங்கே தவ வாழ்க்கை மேற்கொண்டிருக்கும் தன் தாத்தா மாசாத்துவானை பார்க்கும் மணிமேகலை, “-------மாநகர் கடல் கொள, அறவண அடிகளும் தாயாரும் ஆங்கு விட்டு, இறவாது இப்பதி புகுந்தது கேட்டு -----“, தான் இங்கு வந்துள்ளதாகக் கூறுகிறாள்.(28:79-82). இதற்கு பதிலளிக்கும் மாசாத்துவான் “காவிரிப்பூம்பட்டிணம் கடல் கொள்ளும்” (28: 135) என அறிந்தே தான் அங்கே செல்லாமல் வஞ்சியிலே தங்கிவிட்டதாகக் கூறுகிறார்.

இக்காட்சிகள் ‘கச்சி மாநகர் புக்க காதையில்’ காணக் கிடைக்கின்றன.

இதைத் தொடர்ந்து வரும் ‘தவத்திறம் பூண்டு தருமம் கேட்ட காதை’யில், வஞ்சி நகர் வந்து தன்னை வணங்கிய மணிமேகலையிடம், அறவண அடிகள் “-----நகர் கடல் கொள்ள , நின் தாயரும் யானும் –இப்பதி படர்ந்தனம்” .(29: 35-36) என்று கூறுவதாக, சாத்தனார் சுட்டிக் காட்டுகிறார்.

இதுகாறும் எடுத்துக்காட்டிய மேற்கோள்களிலிருந்து, சீத்தலை சாத்தனார் வாழ்ந்த காலத்திலோ அல்லது அதற்கு சற்று முன்போ, காவிரிபூம்பட்டினத்தைக் கடல் கொண்டது என்று எண்ணத் தோன்றுகிறது. மணிமேகலையின் கதையை அல்லது வரலாற்றை கூற வந்த சாத்தனார், அந்தக் கடல்கோள் நிகழ்வை கதையோடு இணைத்துக் காப்பியத்தை பாடிஇருக்கிறார். கதை நிகழ்ந்த காலகட்டத்தில் நிலவி வந்த நம்பிக்கைகளுக்கேற்ப , இந்திரன் இட்ட சாபத்தின் காரணமாக கடல் கோள் நிகழ்ந்தது என்று காப்பியத்தின் பல பாகங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.

சங்க காலத்திலும், பின் இந்த இரட்டைக்காப்பியம் எழுந்த காலத்திலும் சிறந்த துறைமுக நகரமாகவும், மிகச் சிறந்த வணிகப் பெருநகரமாகவும் திகழ்ந்த காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்பு பற்றிய குறிப்புகள், அதன் பின் தோன்றிய இலக்கியங்களில் அவ்வளவாக இல்லை. ஆதலின், மணிமேகலை காப்பிய காலத்தில் காவிரிப்பூம்பட்டினம் கடலுக்கு இரையானது என எண்ண இடம் உள்ளது. அந்தப் பட்டினம், துறைமுக நகரமாக இருந்தது என்பதற்குத் தற்போது கிடைக்கும் தொல்லியல் ஆய்வுத் தடயங்கள் சான்று பகர்கின்றன.

சரி, காவிரிப்பூம்பட்டிணம் மறைந்ததற்குக் காரணம் : ஓத ஏற்றங்களா, புயல் அலைகளா, சுனாமி அலைகளா அன்றி ஹோலோசீன் கடல் மட்ட உயர்வா? என ஆராயலாம்.

சாத்தனார் சொல்லும் கடல்கோள் திடீரென வந்து காவிரிப்பூம்பட்டிணத்தை விழுங்கியுள்ளது. ஆதலின், உலகளாவிய ஹோலோசீன் கடல்மட்ட உயர்வால் இது நடந்திருக்க இடமில்லை. ஓத ஏற்றங்களால் விரிதிரை எழும்பாது; ஆக அதுவுமில்லை. புயல் காற்றில் எழும்பிய அலைகளோ அல்லது சுனாமி அலைகளோ தான் பட்டினத்தை அழித்தன என்று நினைக்க வேண்டியிருக்கிறது. புயற் காற்றோ அல்லது சூறாவளியோ வீசியிருந்தால் அதுபற்றிய குறிப்பு நிச்சயமாக காப்பியத்தில் இடம் பெற்றிருக்கும்.

மணிமேகலை ஆசிரியர் சீத்தலை சாத்தனார் இயற்கை வருணனையில் மிக வல்லவர். காப்பியத்தின் பல்வேறு காதைகளில் அவர் படம்பிடித்துக் காட்டும் இயற்கை வனப்புகள் கற்போர் மனதை சொக்க வைப்பன. காப்பியத்தில் புயற்காற்று பற்றிய குறிப்பு சிறப்பாக ஒன்றும் இல்லையாதலின், காவிரிபூம்பட்டினத்தின் அழிவு சுனாமியால் ஏற்பட்டதோ என எண்ண இடம் உண்டு. ( இது ஒரு ஊகம்தான். Palaeo tsunami ஆய்வுகள் மேற்கொண்டால்தான் இதை நிறுவ முடியும்).

இந்த இடத்தில் நாம் கலித்தொகை வரிகளை மணிமேகலை வரிகளுடன் ஒப்பு நோக்குவோம்.கலித்தொகையில்

“மலிதிரை ஊர்ந்து மண் வௌவியது “

மேகலையில் “ விரிதிரை வந்து வியன் நகர் விழுங்கியது.”

இனி மேகலையில் , “-------மாநகர் கடல் கொள, அறவண அடிகளும் தாயாரும் ஆங்கு விட்டு, இறவாது இப்பதி புகுந்தது கேட்டு -----“, என மணிமேகலை சொல்வதன மூலம், நகரை விரிதிரை விழுங்கியபோது, சில உயிரிழப்புகள் நிகழ்ந்திருக்கலாம் என ஊகிக்க முடிகிறது. கலித்தொகையில் உயிரிழப்பு பற்றிய குறிப்பு ஒன்றும் இல்லை.

இப்படி, சுனாமிக்கு ஆதாரமாக மணிமேகலையில் இன்னும் நிறையவே சான்றுகள் உள்ளன. ஆதலால், சுனாமி பேரலையாலேயே புகார் நகரம் கடல்கொள்ளப்பட்டிருக்கும் என்ற முடிவுக்கே வரமுடிகிறது.

x