குற்றாலத்தில் சாரல் விழா நடத்தப்படுமா? - சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு


தென்காசி: கடந்த ஆண்டு நடத்தப்படாமல் விடப்பட்ட குற்றாலம் சாரல் விழா இந்த ஆண்டாவது நடத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பில் சுற்றுலா பயணிகள் இருக்கிறார்கள்.

தென் மேற்கு பருவமழைக் காலமான ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை தென்காசி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் சாரல் மழை பெய்யும். இதனால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். ஆண்டின் பிற காலங்களில் மழையால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் விழுந்தாலும் சாரல் சீசனில் வரும் நீர் வரத்து சிறப்பு வாய்ந்தது. மலையில் தவழ்ந்து செல்லும் மேகக் கூட்டம், அடிக்கடி பெய்யும் சாரல் மழை, குளிர்ந்த தென்றல் காற்று போன்றவற்றை அனுபவிக்க சாரல் சீசனில் குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதும்.

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழைக் காலம் தொடங்கிவிட்டாலும் தென்காசி மாவட்டத்தில் இன்னும் சாரல் களைகட்டவில்லை. இதனால் அருவிகளில் குறைவான அளவில் தண்ணீர் விழுகிறது. இருப்பினும் கோடை விடுமுறை காலம் என்பதால் குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது.

குற்றாலத்தில் ஆண்டுதோறும் சாரல் சீசனில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் சாரல் விழா கோலாகலமாக நடத்தப் படும். கடந்த 2019, 2020, 2021 ஆடுகளில் சாரல் விழா நடத்தப்படவில்லை. இந்நிலையில், 2022-ம் ஆண்டு அப்போதைய ஆட்சியர் ஆகாஷ் முயற்சியால் குற்றாலத்தில் சாரல் விழா 8 நாட்கள் கோலாகலமாக நடத்தப்பட்டது.

இதில் சுற்றுலாப் பயணிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி, பரிசளிக்கப்பட்டது. ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். சாரல் விழாவுடன் உணவுத் திருவிழா, புத்தகத் திருவிழா, தோட்டக்கலை திருவிழாவும் சிறப்பாக நடத்தப்பட்டது. புதிதாக தென்காசி மாவட்டம் உருவாக்கப்பட்ட பின்னர் ஒரு முறை மட்டுமே சாரல் விழா நடத்தப் பட்டுள்ளது. கடந்த ஆண்டு சாரல் விழா நடத்தப்படவில்லை. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

குற்றாலத்தில் சுற்றுலாவை மேம்படுத்த இந்த ஆண்டு சாரல் விழாவை சிறப்பாக நடத்த வேண்டும் என்றும், அதற்கான ஆயத்த பணிகளை இப்போதே தொடங்க வேண்டும் என்றும், ஒவ்வொரு ஆண்டும் சாரல் விழாவை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுற்றுலாப் பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

சாரல் சீசனில் ஐந்தருவி சாலையில் உள்ள படகு குழாமில் படகு சவாரி, சாரல் விழாவின்போது படகுப் போட்டி நடத்தப்படுவது வழக்கம். கோடை மழையால் ஐந்தருவில் சில நாட்கள் தொடர்ந்து நீர் வரத்து இருந்தபோதிலும் படகு குழாம் நிரம்பாமல் உள்ளது.

படகு சவாரியை தொடங்க ஏதுவாக ஐந்தருவியில் இருந்து வரும் நீரை படகு குழாமுக்கு கொண்டுவரவும், படகுகளை சீரமைத்து தயார்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல் பல ஆண்டுகளாக நீச்சல் குளம் பராமரிப்பின்றி கிடக்கிறது. குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க கூடுதல் வசதிகள், அடிப்படை வசதிகள், பார்க்கிங் வசதிகள் போன்றவற்றை ஏற்படுத்த வேண்டும் என்றும் சுற்றுலாப் பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.