ஆங்... அங்கே பூசு! தோ... இங்கே பூசு!


நாலு மணி ரெயில்ல மச்சான் வரார்னு தகவல் வந்துச்சு. அம்மிணி என்னை எச்சரிச்சு விட்டாங்க. "நம்ம வாச்மேன் அசந்துருவாரு. நீங்க போய் கேட்டைத் தொறந்துருங்க.”

“உனக்கே இது ஓவராத் தெரியலியா”ன்னு கேக்கத் தோணுச்சு. அப்பதான் அம்மிணி சொன்னாங்க. “போன வருசம் எங்க மாமா அரை மணி நேரமா பூட்டுன கேட்டு முன்னாலயே தவம் கெடந்தாரு. ஞாபகம் இருக்கா.”

இனிமேல் எதிர்வாதத்துக்கே வழியில்லை. இருபது வருச டயரியைப் படிச்சுக் காட்டுவாங்க. யார் யார் எப்போ கேட்டு தொறக்கலலைனு நின்னுக்கிட்டிருந்ததை அடுக்கிட்டே போவாங்க.

அலாரம் வச்சு எழுந்திருச்சுட்டேன்.

என்னைத் தவிர மொத்த அபார்ட்மென்டும் குறட்டை விட்டுகிட்டுருந்துச்சு. வாச்மேன் கூட ஆனந்தமா தூங்கிக்கிட்டுருந்தாரு. ஒக்காந்தா தூங்கிருவேன்னு நடக்க ஆரம்பிச்சேன்.

அபார்ட்மென்ட் பின்பக்கம் வரைக்கும் போனா இருட்டுல தரைல யாரோ படுத்துக்கிட்டு முறைச்சாப்ல இருந்துச்சு. ரெண்டு கண்ணும் ஜொலிச்சுது. அரண்டு போய் உத்துப் பாத்தா பெருச்சாளி !

கீழ் வீட்டுக்காரர் ஒருத்தர் முழிச்சுட்டார் போல. இருட்டுல என்னை அடையாளம் தெரியாம, இல்லாட்டி தெரிஞ்சோ “சோர் சோர்...”னு கத்துனாரு. வடக்கே நாலு வருசம் வேலை பார்த்துட்டு வந்தவரு. எப்பவும் இந்தி மிக்ஸ் பண்ணித்தான் பேசுவாரு. துடைக்கிற குச்சி வேணும்னு கேக்க நினைச்சு, “மாப் கீஜியே”ன்னு அவர் சொன்ன தப்பு இந்தியை இப்பவும் சொல்லி சிரிப்போம். “இந்தியை ஒழிக்க இவரு ஒருத்தரே போதும்”னு.

“யோவ் நான்தான்யா”ன்னு சைடு லைட்டைப் போட்டேன். அப்பதான் தெரிஞ்சுது. பெருச்சாளியார் குழியும் குடித்தனமுமா இருந்துருக்கார்னு.

வழக்கம் போல நம்மாளு ஆரம்பிச்சாரு.

“எதுவுமே சரியில்ல. எந்த கம்ப்ளெய்ன்ட் கொடுத்தாலும் யாரும் கவனிக்கல. செப்டிக் டாங்க் பக்கத்துல இவ்ளோ பெரிய ஓட்டை”னு ராகம் பாட ஆரம்பிச்சாரு.

விட்டா ஓசோன் ஓட்டைக்கே நான் தான் காரணம்னு சொல்லிருவாரோன்னு நடுங்கிட்டேன். இந்த கலாட்டால மச்சானை மறந்துட்டேன். மணி ஆறு ஆயிருச்சு. மாடிக்கே போயிட்டாரா.

மேலே போனா அம்மிணி எனக்குப் பின்னாடி எட்டிப் பார்த்தாங்க. “என்ன நீங்க மட்டும் வரீங்க”ன்னு.

“இன்னும் வரலியா”ன்னு அப்புராணியா கேட்டேன். ''கிழிஞ்சுது. இவ்ளோ நேரம் கீழே என்ன பண்ணீங்க. சிட் அவுட்ல படுத்து குறட்டையா”ன்னு மானத்த வாங்கினாங்க.

மச்சான் அப்பதான் உள்ளே வந்தாரு. “ஹிஹி அசந்துட்டேன். இங்கே இறங்காம ஜங்ஷன்ல போய் இறங்கிட்டு பஸ் பிடிச்சு வந்தேன்”னாரு.

அம்மிணி கண் கலங்கிட்டாங்க. “ஓய்வே இல்லாம சுத்தினா ஒன் ஒடம்பு என்னாத்துக்காவும்” ப்ளேட்டை எப்படி எல்லாம் திருப்பிப் போடுறாங்கன்னு வியந்து பார்த்தேன்.

இனி என்னைப் பத்தி யோசிக்க மாட்டாங்கன்னு புத்திக்கு எட்டுச்சு. கொத்தனாரை வரவச்சு பின்னாடி குழியை ரொப்பிரலாம்னு போன் போட்டேன்.

9 மணிக்கு வரேன்னு சொல்லிட்டு 11-க்கு வந்தாரு. நான் கீழே நின்னதும், “ஸார் கொஞ்சம் கேட்டைப் பார்த்துக்குங்க. டீ குடிச்சுட்டு வரேன்”னு வாச்மேன் ஹேப்பியா போயிட்டாரு.

“இன்னிக்கே முடிஞ்சுருமா”ன்னு ஆர்வமா கேட்டேன். கொத்தனாரு அலட்சியமா பார்த்தாரு. “என்னை அவசரப்படுத்தினா வேலைக்கு நான் கேரண்டி இல்ல”ன்னு பஞ்ச் டயலாக் விட்டாரு.

அந்த இடத்தை சுத்திச் சுத்தி வந்தாரு. என்னவோ பள்ளம் பறிச்சு பெருச்சாளி அமெரிக்காவரைக்கும் போயிட்டாப்ல உச் உச்சுனு சவுண்டு விட்டாரு.

“பெரிய ஜல்லி போடணும். சிமின்ட் பூசணும்”னு எனக்குத் தெரியாத விவரம் மாதிரி அடுக்கினாரு.

“எவ்ளோ ஆகும் உத்தேசமா”னு கேட்டேன். “கொத்துன பிறகுதான் தெரியும்”னு சீறுனாரு. நாளைக்கு வரேன்னு போயிட்டாரு.

அபார்ட்மென்ட்காரங்க கொஞ்சம் பேரு வந்துட்டாங்க. ஒருத்தர் வந்து என் கையைப் பிடிச்சு குலுக்கினாரு. “நம்ம ஃப்ளாட் நிரந்தர பொதுச் செயலாளர் நீங்க தான்”னு ஐஸ் வச்சாரு.

ஹிஹின்னு வழிஞ்சப்போ சொன்னாரு. “ஒரு சுமால் ஹெல்ப். எங்க வீட்டுக்குள்ர சின்னதா ஒரு ஓட்டை... பூரான்லாம் வருது. இது பூசும்போது லைட்டா டச்சப் செஞ்சு தர முடியுமா”ன்னு பிட்டைப் போட்டாரு.

சின்ன ஓட்டைதானேன்னு பெருந்தன்மையா தலையாட்டி வச்சேன். “எப்போ பூசுவாரு”ன்னு உடனே களத்துல எறங்கிட்டாரு.

‘யோவ்... இன்னும் வேலையே ஆரம்பிக்கல. அதுக்குள்ர உன் கவலையை சொல்ற’ன்னு நினச்சுக்கிட்டு அவரை அனுப்பி வச்சேன்.

மறுநாள் முழுக்க பெருச்சாளியை விட தீவிரமா பள்ளம் பறிச்சாங்க. அஸ்திவாரம் கணக்கா தோண்டறாங்களேன்னு நடுங்கினா அண்ணாச்சி சொன்னாரு. “சூப்பரா செய்யறாங்க. இனி பெருச்சாளி வேற அபார்ட்மென்டுக்குத்தான் போகணும். பக்காவா போடறாங்க”னு பாராட்டிட்டு “மறந்துராதீங்க. என் வீட்டுக்குள்ர பூச்சு வேலை”ன்னாரு.

அடுத்த நாள் தளம் போடறேன்னாங்க. ஆபிஸ் போவறதால நல்லபடியா முடிச்சிருங்கன்னு சொல்லும்போதே வீட்டுக்குள் பூச்சு ஆளு வந்தாரு. “நீங்க ஒரு வார்த்தை கொத்தனார்ட்ட சொல்லிட்டுப் போயிருங்க”ன்னு. சரிதான்னு சொல்லிட்டேன். “பணம் தர வேணாம். மொத்தக் கணக்குல இருக்கட்டும்”னு சொல்லவும் அவருக்குக் குஷி.

மறுநாள் சாயங்காலம் ஆபிஸ் முடிஞ்சு வந்தா கொத்தனார் காத்துக்கிட்டு இருந்தாரு.

“பூசியாச்சா”ன்னு பொதுவாக் கேட்டேன்.

“இன்னும் ஒரு மூட்டை சிமென்ட் வேணும்”னாரு.

“ஏன் என்னாச்சு”ன்னு புரியாமப் பார்த்தேன்.

“15 வீட்டுக்கு பூசிட்டேன். இன்னும் நாலு வீடு பாக்கி இருக்கு.”

எனக்கு தலை சுத்துச்சு. என்ன சொல்றாரு.

பின்னால பெருச்சாளி தோண்டுன எடத்துல சிமென்ட் பூச்சு வேலை நடக்கல. பூசுனதெல்லாம் வீட்டுக்குள்ர. அந்த ஒருத்தரு எல்லார்கிட்டேயும் போட்டு விட்டுருக்காரு. “ஃப்ரீயா பூசித் தராங்களாம். ஒங்க வீட்டுக்குள்ர எதுவும் ஓட்டை இருந்துச்சுன்னா இப்பவே முடிச்சுக்குங்க”ன்னு.

“ஃப்ளாட் வேலைய முடிச்சுட்டுத்தானே சின்ன வேலைல்லாம் செய்யணும்”னு சவுண்டு விட்டேன். கொத்தனார் அசரல. “இவருக்குப் பூசுங்கன்னு சொல்லிட்டு போயிட்டீங்க. வரிசை கட்டி அத்தினி பேரும் வந்து நிக்கிறாங்க. பெரிய கலாட்டாவா போச்சு. ஒங்க போனுக்கு அடிச்சா லைன் போவல”னாரு.

வேற என்ன செய்ய. “வாங்கிட்டு வந்திருங்க”ன்னு சொல்லிட்டு திரும்பினா, “எங்க வீட்டுக்கு நாளைக்கு பூசிருவாரா”ன்னு மீதி நாலு பேரும் வழி மறிச்சாங்க.

தலை தானா ஆடுச்சு !

x