இசை வலம்: பாட்டுத் தலைவனுக்கு டிஜிட்டல் அஞ்சலி


மகாகவி பாரதியாரின் நினைவு நூற்றாண்டு இது. கடன் அட்டையின் நிலுவையைச் செலுத்துவதற்கும் வீட்டுக் கடனை அடைப்பதற்குமே உழைத்துக்கொண்டிருக்கும் பெரும்பான்மை இந்தியர்களுக்கு, 100 ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்த பாரதியார் எனும் மனிதன் விட்டுச்சென்ற விழுமியங்கள் என்னென்ன எனத் தெரிய வேண்டும். நாட்டு விடுதலைக்காகவும் மத நல்லிணக்கத்துக்காகவும், சாதி மறுப்புக்காகவும், இயற்கை நேசிப்புக்காகவும் வாழ்ந்த 39 ஆண்டுகளில் எத்தனையெத்தனை சிந்தனைகளை தன்னுடைய கவிதையில், பாட்டில் வடித்திருக்கிறார் பாரதி! அவற்றையெல்லாம் உணர்வதற்கும் புரிந்துகொள்வதற்குமே நமக்கு பல ஆண்டுகள் ஆகும்.

பாரம்பரியத்தின் பெருமையும் புதுமையின் கம்பீரமும் ஒருங்கே கொண்டவை பாரதியின் பாடல்கள். தமிழின் இலக்கிய ஆளுமைகளில் இன்றைய இளைஞர்களிடமும் ஆதிக்கம் செலுத்துகின்ற படைப்பாளராகத் திகழ்பவர் பாரதியார். அவரின் கவி மனம், புதிய பாதைகளில் தடம் பதிக்க நினைக்கும் இளைஞர்களை ஆராதிக்கிறது. அரவணைக்கிறது. பாரதியாரின் நினைவு நூற்றாண்டை ஒட்டி, அவரின் பாடல்களை வித்தியாசமாக தங்களின் பாணி இசையில் பாடி வெளியிட்டிருக்கும் சிலரின் பதிவுகளை இங்கே தருகிறோம்.

பாரதியின் பாடல்களில் ‘காக்கைச் சிறகினிலே’ தத்துவ விசாரம் பொருந்திய பாடல். ஏழை, பணக்காரன் ஏற்றத்தாழ்வுகள் எதுவும் இறைவனுக்கு இல்லை. இறைவன் எல்லாருக்கும் எல்லாவற்றுக்கும் பொதுவானவன் எனும் சிந்தனையை வெளிப்படுத்தும் இந்தப் பாடலை, ‘ஏழாவது மனிதன்’ திரைப்படத்தில் எல்.வைத்தியநாதன் இசையில் கேட்டிருப்போம். பாம்பே ஜெயஸ்ரீ தன்னுடைய பாணியில் தன்னுடைய வசீகரமான குரலில் இந்தப் பாடலை, மிதமான துள்ளல் இசையின் துணையோடு பாடியிருக்கிறார். காட்சியின் தொகுப்பும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் நம்மை வியக்கவைக்கிறது.

நந்தலாலாவை தீண்டும் அனுபவத்தைப் பெற:

https://www.youtube.com/watch?v=o42xCQOmUxU

சாரங்கின் அக்கினிச் சாரல்!

‘அக்கினி குஞ்சொன்று கண்டேன்’ எனும் பாடலையும் அந்தப் பாடலிலேயே வரும் வர்ணனையான, ‘தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ’ என்பதை உறுதிசெய்யும் வகையில் இளைஞர்கள் பாடியிருக்கின்றனர். அக்னி சூர்யா, சஹானா ஆகியோரின் காத்திரமான குரல்கள் பாட்டில் வெளிப்படும் உறுதியைக் கேட்பவர்களின் மனதுக்கும் கொண்டுசேர்க்கின்றன. ஜெஷரனின் டிரம்ஸ் வாசிப்பு, கர்னாடக இசையின் தாள வகைமையில் எடுத்தாளப்படும் ‘கண்டம்’ எனப்படும் தாளகதி இடியைப் போல் ஒலிக்கிறது. சஷாங்க் பாண்டா, குரியன் ஆகியோரின் லீட், பாஸ் கிதார்களின் ரீங்காரம் பாடல் முடிந்த பிறகும் நம் மனதில் ஒலிக்கிறது. தினேஷின் விரல்கள் பியானோவில் பாடலின் வார்த்தைகளுக்கேற்ற `கார்ட்ஸ்’களை ஒலிக்கவிட்டு நம்மை அந்த ஓசைக் கடலில் மூழ்கவைக்கின்றன. கரோனா காலம் என்பதால், ‘சாரங்’ எனும் கல்லூரி கலை விழாவுக்காக, மெய்நிகர் வடிவிலேயே அசத்தலாக இந்தப் பாடல்களை நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் அளித்திருக்கின்றனர். அக்கினிக் குஞ்சுகள் என்றால் சும்மாவா?!

அக்கினிக் குஞ்சுகளின் மெய்நிகர் கானம்:

https://www.youtube.com/watch?v=8V5f-lUEr8Q

பாரதியின் பாமாலை!

திரைப்படப் பாடல்கள்தான் ‘மெட்லி’ எனப்படும் பாணியில் பாடுவதற்கு உகந்தவையா என்ன? நம்முடைய மகாகவி பாரதியின் பாடல்களையும் ‘மெட்லி’ பாணியில் பாட முடியும் என்பதற்கு, கார்த்திக்கின் இந்தக் காணொலியே உதாரணம். கர்னாடக இசை, மேற்குலக இசையில் எடுத்தாளப்படும் ஸ்கேல் சேஞ்ஜ், கவுன்டர்-பாயின்ட் போன்ற வகைமைகளைப் பயன்படுத்தி, பாடலுக்கான இசையை மீட்டுருவாக்கம் செய்திருக்கிறார் சாய் மதுகர்.

இந்தக் காணொலியில் கார்த்திக் ‘மனதில் உறுதி வேண்டும்’, ‘சுட்டும் விழிச்சுடர்தான் கண்ணம்மா’, ‘நல்லதோர் வீணை செய்தே’ ஆகிய 3 பாமாலைகளை ஒரே சரத்தில் தொடுத்திருக்கிறார். கம்பீரம், வாஞ்சை, கழிவிரக்கம் போன்ற உணர்வுகளை அற்புதமாகத் தன்னுடைய குரலின் வழியாக நம் மனதுக்குள் கொண்டுசேர்க்கிறார் கார்த்திக். பாரதியின் பாடல்களை எவர் பாடினாலும் நமக்கு பாரதியே பாடுவது போல் தோன்றும். அந்த அளவுக்கு நம் ஒவ்வொருவரின் மனதிலும் உறைந்திருக்கிறார் பாரதி.

மனம் உறுதியாக: https://www.youtube.com/watch?v=V584mOskHq4

பாரதியின் கனவு மெய்ப்படுமா?

மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தியின் இசைக் கோப்பில், நம் மனதில் விரிந்த பாரதியின் பாடல் ‘சிந்து நதியின்மிசை நிலவினிலே’. இதை ‘மகாகவிஸ் விஷன்’ எனும் தலைப்பில் மெல்லிசை மன்னர்களின் மெட்டுக்கு செய்கூலி, சேதாரம் ஏற்படுத்தாமல் தங்களின் பாணியில் பாடியிருக்கின்றனர் ‘ஸ்டகட்டோ’ குழுவினர்.

இந்தப் பாடலில் பாரதியார் ‘கங்கை நதிப்புரத்து கோதுமைப் பண்டம், காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்’ என இந்தியா எனும் தேசத்துக்கு உள்ளேயே பண்டைய காலத்தில் செழித்து வளர்ந்த பண்டமாற்று முறையைப் பற்றி கூறியிருப்பார். ‘நாம் பிறந்த நாட்டுக்கு எந்த நாடு பெரியது?’ என்று பின்னாளில் வந்த கவிஞர்களின் கவிதை முழக்கத்துக்கு தொடக்கப் புள்ளியாய் பாரதியார் இருப்பது புரியும். இந்திய தேசத்தின் எல்லா நில அமைப்புகளையும் விளைநிலங்களையும் போற்றுதலுக்குரியவையாக பாரதி கொண்டாடுவார். அவரின் சிந்தனை வழியில் இந்தப் பாடலைப் பாடிய இளைஞர்களும் இந்தப் பாடலை உப்பளங்களின் வரப்பில் நின்றுகொண்டு பாடும் காட்சி, நம் மனதில் பல எண்ண அலைகளை உண்டாக்குகிறது.

கௌதம் பரத்வாஜ் குரலில் உருக்கம்.. விக்ரம், மனோஜ், ஷாலு வருண், அபிநந்தன், பாலா, சந்தீப் ரமணன் ஆகியோரின் வாத்திய இசையில் நேர்த்தி.. பாடல் முழுவதும் வெளிப்படுகிறது. ஒரு கிழக்கிந்திய கம்பெனியிடம் இருந்து இந்தியாவை மீட்பதற்கே, சுதந்திரப் பயிரை கண்ணீர் விட்டு வளர்த்தோமே, ‘பல கம்பெனிகளிடம் இந்தியாவை மீண்டும் அடகுவைத்தால் மீட்பது யார்?’ எனும் கேள்வி, சிந்தையில் பலமாக எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

சிந்து நதியின் மிசை நிலவினிலே:

https://www.youtube.com/watch?v=xj4qD974gv8

x