நிழற்சாலை


மழைக்குருவி

திறந்திருந்த சன்னலில்

நுழைந்த

மழையைக் கொண்டுவந்த

குருவியொன்று

வீட்டுக்குள்

சிலிர்ப்பிவிட்டது

மழைச்சாரலை.

நனைய

அருகில் சென்ற

என்னை நம்பாமல்

கொண்டுவந்த

மழையோடு மீண்டும்

மழைக்கே பறந்த

அந்தச் சிற்றுயிரை

ஒரு தாய்ப் பறவைப்போல

தன் சிறகுகளுக்குள்

அணைத்துக்கொண்டது

மழை.


-வீ.விஷ்ணுகுமார்

-----------------------------------------

பேரன்பின் துளி

குழந்தையின் உள்ளங்கையை

பாவனையாகத் துடைத்து

“எண்ணெ ஊத்தி

தோச மாவு விட்டு

திருப்பிப் போட்டு

தோசைய பிச்சு

பாப்பா-க்கு ஒரு வாய்

அக்கா-க்கு ஒரு வாய்

அப்பா-க்கு ஒரு வாய்

அம்மா-க்கு ஒரு வாய்" எனச் சொன்னவுடன்

பால்கனியில் அமர்ந்திருக்கும்

பறவையைக் காட்டி

"அப்ப அந்த புவா-வுக்கு?"

எனும் குழந்தையின்

மழலைக் கேள்வியில்

கண்முன் விரிகிறான்

குட்டி பாரதி!

- ப்ரணா

-----------------------------------------

தெளிதல்


உனக்கும்

எனக்குமிடையே

என்ன இருக்கிறது

இப்படி கதைக்கிறோம்

இப்படி பிதற்றுகிறோம்

இப்படி உளறுகிறோம்

சிரிப்பதைக் குறைத்து - கொஞ்சம் மௌனித்து

இரு

இங்குதான்

தொடங்கப்பட்டது

உனக்கும்

எனக்குமான மெல்லுரையாடல்


ஆத்மாவின்

பரிசுத்தமான வேலையென்பது

பேரன்பித்துத் திரிவது

பேசச் செய்வது

புட்டியொன்றினை

கையில் கொடுத்து

குமட்ட குமட்ட உள்ளிறங்க வைப்பது

தெளிதல்

யாவர்க்கும்

எளியதொன்றில்லை

தெளிந்து தெளிந்து

குழப்பும்

இவ்வீணையின் நரம்பிழையில்

ஒன்றினை

பலவந்தமாய் பிடுங்கி

சொருகிக்கொள்

உனது

செவியில்...

இன்னுமிருக்கிறது

ஏதோ மிச்சம்.

- கருவை ந.ஸ்டாலின்

-----------------------------------------

நம்பிக்கையின் ரகசியம்

சக்கரம் பொருத்திய

பலகையை

கைகளில் செருப்புத்தேய

நகர்த்தி நகர்த்தி

எரும்புப் பென்சில் விற்கிறான்

சாலையிலொருவன்


பிளாட்பாரத்தில்

ஒளிமயமான எதிர்காலம்

தெரிவதாய்

ஓங்கி ஒலிக்கிறது

பார்வையற்ற சிறுவனின் பாடல்


ஏதோவொன்று

கிடைத்திடும் நம்பிக்கையில்

எல்லா நாளும்

இரைதேடிப் பறக்கின்றன

பறவைகள்


ஒரு பூ உதிர்ந்த

அதே கிளையில்

அடுத்த மொட்டை

அவிழ்க்கிறது செடியொன்று


இன்றே கடைசி எனும்போதும்

மடியும்வரை

மகிழ்ந்தே பறக்கிறது

ஈசல்


விசுவாசத்தின் வேர்களில்

வெந்நீர் ஊற்றப்பட்டதற்கும்

உழைப்பின் கிளைகள்

கருணையற்று

முறிக்கப்பட்டதற்காகவும்

விசும்பாதே


விழுந்த இடத்தில்

வீரியமாய் முளைக்கும்

நல்ல விதை!


- காசாவயல் கண்ணன்

-----------------------------------------

சேதி

வெளிச்சென்றுவிட்டு வீடு நுழைகையில்

கதவிடுக்கின் வழியே போடப்பட் ட

அஞ்சலட்டைகள்

தபால் உறைகள்

காத்திருக்கும் என் வரவிற்காக...


இன்றென்னவோ...

ஒரு பறவையின் இறகொன்று மட்டும்

வாசலில் வீழ்ந்துகிடந்து

ஒரு சேதி சொல்லிற்று

நான் இல்லாதபோது

நிகழ்ந்த உன் வருகையை.


- இரா.ரமேஷ்பாபு

-----------------------------------------

வேப்பம்பூ

தபால்காரருக்கு அடையாளமாகிறது

வேப்பமரத்து வீடு

உதிரும் பூக்களை

அகற்ற மனமில்லை

இது உயிர் இல்லம்


வெட்டுவது என்றால்

என்னை முதலில்

பிறகு இந்த வேப்பமரங்களை

என்ற அப்பாதான்

தன் தங்கையின் கல்யாணச் செலவுக்கென

விலை பேசினார்

வெட்டிய மரங்களிடையில்

முளைத்திருந்த சிறு செடியை

மகளே என்றழைத்து கொஞ்சினார்


கை நிறைய அள்ளிவந்த

அதிஸ்யா குட்டி

தலையில் வைக்க இயலா பூ

என்ன பூ சொல்லென்று

விடுகதை போட்டாள்

தெரியலையே என்றவன் மீது

இதுதானென தூவுகிறாள்


தண்ணீர் இல்லாமலே வளருமே

இதுக்கு எதுக்கு

தண்ணி சுமந்து ஊத்தணும்

யாராவது கேட்டால்

மெதுவாகச் சொல்வாள்

இது எங்க தாத்தா

- க.அம்சப்ரியா

-----------------------------------------

என் இலக்கியச் சிக்கல்


விடியலுக்குக் காரணம்

இருள் என்றேன்.

அப்பிய இருளைக் கழுவி

விடியல் என்கின்றனர்.

இருளில் தவித்த உயிர்கள்

விடியலைக் குடித்துத் தணிகிறது என்றேன்.

இருளில் எல்லாம் மடிந்தன

என்றே வருகிறது பதில்.


கொல்லாமைக் கொள்கைகள்

திரும்பப் பெறப்படுகின்றன

மீட்டப்படும் வீணையில்.

அங்கொரு மரம்

நரம்பறுந்து கதறுகிறதென்றேன்.

இசையருவி வீழ்கிறது

கூச்சலிடாதே என்கின்றனர்.

அதற்கெல்லாம்

தலையாட்டுகின்றன

பூம் பூம் மாடுகள்!

- ச.ஆ.பவித்ரா

-----------------------------------------

கூண்டுக்குள் உலவும் மனங்கள்

சிறகுகளால் அளக்கப்படாத வானம்

கூரிய நகங்களால் இறுக்கிப் பிடிக்கப்படாத மரங்கள்

அலகுகளின் ஸ்பரிசம் படாது

நல்லி சொட்டும் நீர்த்துளி

எச்சங்கள் பெறப்படாத வனம்

பறவைகளின்

நொடி நேரக் குளியலைப் பெறாத

குட்டைகள்

கீச்சொலிகளால் நிசப்தம் கலைக்கப்படாத

பிரபஞ்சவெளி

சிறகுகள் உலர்த்தப்படும் கவிதையை வாசிக்காத இறுகிய மனம்

சிறகடிப்புகளுக்கு பின்னணியாக்கப்படாத மேகங்களென

அத்தனையையும் ஒரு கூண்டில் அடைத்து வைத்திருந்தேன்

என் விழிப்பற்றதொரு கணத்தில்

குழந்தையின் பிஞ்சு விரல்களுக்கு

தன்னை இலகுவாக்கிக்கொள்கிறது

பெருங்கனத்தை சுமந்திருந்த

கூண்டின் தாழ்ப்பாள்.


- மகேஷ் சிபி

-----------------------------------------

பிரபஞ்சத்தை உரசும் விருட்சம்


எனது பால்யத்தில்

இது நான் வளர்த்த மரம்

என்று சொன்னேன்

என் மகளிடம்


அதிசயமாகப் பார்த்தாள்

அந்த மரத்தின்

நிழலில் நின்று

இளைப்பாறினாள்


அந்த மரத்தில் வந்திறங்கிய பறவையை

கண்கள் விரிய பார்த்தாள்


கூடு கட்டி

குஞ்சு பொரித்திருந்தது

அந்தப் பறவை


இந்தப் பறவைக் குஞ்சுகள்

யாருடையவை என்றாள்

சுதந்திரமானவை என்றேன்


மரத்தில் சாய்ந்தபடி

மகள் அமைதியாகச் சொன்னாள்

நான் பறவையாக

விரும்புகிறேன் என்று


நான் மரமாகிக் காத்திருந்தேன்.

- ப.தனஞ்ஜெயன்

-----------------------------------------

காலத்தின் சட்டகம்

கருங்கூந்தலில்

எட்டிப்பார்த்த

நரையினை ஞாபகப்படுத்துகிறது

நீண்ட வயல்வெளியில்

தனித்து நிற்கும்

ஒற்றை நாரை.

- ரகுநாத். வ

-----------------------------------------

தாகம்

வகுப்பில் உள்ள

அனைவரிடத்திலும்

தலைக்கு ஐந்து ரூபாய்

காசு வசூலித்து

வகுப்பறைக்குள்ளேயே

இரண்டு குடம் தண்ணீர்

வைத்தாகிவிட்டது

பாவம் வகுப்பாசிரியரிடத்தில்

இனி அவசரத் தாகமெனக் கூறி

கழிவறைக்கு நாப்கின்

மாற்றச் செல்லத் துடிக்கும்

மாணவிகளுக்குத்தான்

சுலபத்தில் வாய்க்க வேண்டும்

புதிதாக ஏதேனும் ஒரு பொய்.

-வெ.தமிழ்க்கனல்

x