கண்ணூர்-டு-காஷ்மீர்


கரோனா காலத்தில், இருசக்கர வாகனங்களில் தொலைதூரப் பயணங்கள் சகஜமாகிவிட்டன. ஆனாலும், கேரளத்திலிருந்து காஷ்மீர் எல்லைவரை பைக்கில் சென்று திரும்பியிருக்கும் அனீஷாவின் சாதனை ரொம்பவே ஸ்பெஷல்தான்!

ஆசிரியையான அனீஷா, பைக் பிரியரும்கூட. அதனால்தான் இவருக்கு புல்லட் பைக்கைப் பரிசாக அளித்தார் இவரது கணவர் மதுசூதனன். அந்த பைக்கில், தன் மகளையும் அழைத்துக்கொண்டு இந்த சாகசப் பயணத்தை நிகழ்த்தியிருக்கிறார் அனீஷா. இந்தச் செய்தியை அறிந்த மலையாளிகள் ஆச்சரியத்தில் மலைத்து நிற்கிறார்கள்!

மைசூருவுக்கு முதல் ட்ரிப்!

கண்ணூர் மாவட்டத்தின் பையனூர் பகுதியில் இருக்கிறது அனீஷாவின் வீடு. வாசலிலேயே வசீகரத் தோற்றத்துடன் வரவேற்கிறது அனீஷாவின் புல்லட். தினம்தோறும் துடைத்துவிடுவதால், நேற்றைக்கு வாங்கியதைப் போல் பளபளவென அது ஜொலிக்கிறது. புன்னகையுடன் நம்மை வரவேற்றபடி பேசத் தொடங்கினார் அனீஷா.

“பயணம் செல்வது எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், காரில் நீண்ட தூரம் செல்வதில் எனக்குக் கொஞ்சம்கூட விருப்பம் இல்லை. காரில் முழுக்க ஏசியைப் போட்டுக்கொண்டு, எல்லா ஷட்டர்களையும் ஏற்றிக்கொண்டு பயணிப்பதில் என்ன சுகம் இருக்கிறது? ரயிலில் ஏசி கோச்சில் குடும்பத்துடன் ரிசர்வ் செய்து பயணிப்பதைப் போலத்தான் அது! என்னைப் பொறுத்தவரை பயணம் என்பது நல்ல சந்திப்புகளை, பல்வேறு வாழ்க்கைச் சூழல்களை விளக்குவதாக இருக்க வேண்டும். அதற்கு பைக்தான் பொருத்தமானது.

என் கணவர் எங்கள் திருமண நாளுக்குக் கடந்த ஆண்டு புல்லட் பைக்கை பரிசாகக் கொடுத்தார். எனக்கு அது ஒரு இன்ப அதிர்ச்சி. காஷ்மீர் வரை அந்த பைக்கிலேயே செல்வது என அப்போதே முடிவு செய்தேன். என் மகள் மதுரிமாவிடம் என் ஆசையைச் சொன்னேன். கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மதுரிமாவுக்கு என் பயணத் திட்டம் ரொம்பவே பிடித்துவிட்டது. நாங்கள் கிளம்ப நினைக்கையில் கரோனா பொதுமுடக்கம் வந்துவிட்டது. எனவே, அந்தத் திட்டத்தைத் தற்காலிகமாகக் கைவிட்டோம். பொதுமுடக்கம் தளர்த்தப்பட்டதும், பரிசோதனை முயற்சியாக நானும் மதுரிமாவும் முதலில் மைசூரு வரை பைக்கில் சென்றுவந்தோம். அந்தப் பயணம் தந்த உற்சாகத்தில் இப்போது காஷ்மீர் எல்லைவரை சென்று திரும்பியிருக்கிறோம்” என முகம் மலரச் சொன்னார் அனீஷா.

அனீஷா

கவனம் அவசியம்

காஷ்மீர் நோக்கிய பயணத்தில், நாள் ஒன்றுக்கு 250 முதல் 300 கிலோமீட்டர் தூரம் வரை புல்லட்டில் பயணித்திருக்கிறார்கள் தாயும் மகளும். கண்ணூரிலிருந்து காஷ்மீருக்கு 3,210 கிலோ மீட்டர். இந்த நெடும்பயணத்தில் தங்குவது, குளிப்பது போன்றவை தனித்துப் பயணம் செய்யும் பெண்களுக்கு சவாலான விஷயங்கள்தான். அனீஷாவும் மதுரிமாவும் அதை எப்படி எதிர்கொண்டார்கள்?

இதைப் பற்றிக் கேட்டதும், “சமூகப் பொறுப்பு, பாதுகாப்பு என இதில் சொல்வதற்கு நிறைய விஷயங்கள் உண்டு” என்றவாறே பேச்சைத் தொடர்ந்தார் அனீஷா. “பொதுவாகவே இதேபோல் பயணம் செய்பவர்கள், சமூக வலைதளங்களில் தங்கள் பயணம் குறித்துப் பதிவிட்டுக்கொண்டே இருப்பார்கள். தாங்கள் இருக்கும் லொக்கேஷனோடு போட்டோக்களை அப்லோடு செய்வார்கள். நண்பர்களிடமிருந்து கிடைக்கும் லைக்குகளுக்கும் பாராட்டுகளுக்கும் மயங்கியே இப்படிச் செய்வார்கள்.

நாம் குழுவாகச் சென்றால் அப்படிச் செய்யலாம். தப்பில்லை. ஆனால், தனியாகச் செல்லும்போது, குறிப்பாகப் பெண்கள் மட்டும் பயணிக்கும்போது உடனுக்குடன் சமூக வலைதளங்களில் அப்டேட் செய்வது சிலநேரங்களில் சிக்கலைத் தரலாம். எனவே, அதையெல்லாம் முற்றிலுமாகத் தவிர்ப்பது எனத் தீர்மானமாக இருந்தேன். ஓர் இடத்துக்குச் சென்று புகைப்படங்கள் எடுத்தால், ஆயிரம் கிலோ மீட்டர் கடந்து வந்த பின்புதான் அந்தப் புகைப்படங்களைச் சமூக வலைதளங்களில் ஷேர் செய்வேன். அதுதான் நமக்குப் பாதுகாப்பு. அதேபோல் சூரியன் மறைவதற்கு முன்பே பைக் ஓட்டுவதை நிறுத்திவிடுவேன். நல்ல விடுதியாகப் பார்த்து இருவரும் தங்குவோம்.

வீட்டிலிருந்து கிளம்பும்போதே இணையத்தில் நல்ல விடுதிகளைத் தேர்ந்தெடுத்து பட்டியலும் கையில் வைத்திருந்தேன். இப்படியாக இரவுப் பயணத்தை முழுமையாகத் தவிர்த்துவிட்டேன். ஆபத்துகாலத் துணைவனாக பெப்பர் ஸ்பிரேயும் கையில் வைத்திருந்தேன். ஆனால், மொத்தப் பயணத்திலும் அதைப் பயன்படுத்த வேண்டிய அவசியமே ஏற்படவில்லை” என அனீஷா சொன்னதும், உற்சாகம் தொற்றிக்கொள்ள மதுரிமாவும் பேசத் தொடங்கினார்.

பயணத்தின் பலன்கள்

“அம்மா டீச்சர் என்பதால் பயணத்தில் அத்தனை நேர்த்தியைக் கடைபிடிப்பார். அந்த நம்பிக்கை அப்பாவுக்கும் இருந்ததால்தான் எங்கள் இருவரை மட்டும் தைரியமாக அனுப்பிவைத்தார். இந்தப் பயணத்தில் நிறைய மனிதர்களின் வாழ்க்கையைக் கற்றுக்கொள்ள முடிந்தது. இந்த கரோனா காலத்தில் கல்லூரிகளும் ஆன்லைன் வழியாகத்தான் இயங்கிவருகின்றன. ஆசிரியையான என் அம்மாவும் ஆன்லைன் வழியாகத்தான் கற்றுக்கொடுக்கிறார். ஆண்களேனும், கடைகளுக்குச் செல்லவாவது வெளியில் வருகிறார்கள். பெண்களுக்கு அப்படியான சூழலும் இல்லை. இந்நிலையில்தான் எங்களுக்கு ஒரு சுதந்திரமான பயணம் தேவைப்பட்டது.

மைசூருவரை சென்று வந்ததிலேயே அம்மாவின் பைக் ஓட்டும் திறனையும், பயணத் திட்டங்களையும் பார்த்து நிறைய கற்றுக்கொண்டேன். அதன் தொடர்ச்சியாகத்தான் காஷ்மீர் எல்லைவரை சென்று திரும்பினோம். கேரளத்தில் மழை, பஞ்சாபில் வெயில், காஷ்மீரில் குளிர்... எனப் பலதரப்பட்ட பருவநிலைகளையும் எதிர்கொண்டோம். அதேபோல் பல்வேறு வகையான கலாச்சார உணவுகளை ருசித்ததும் மறக்க முடியாத அனுபவம். சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளையும் பலதரப்பட்ட மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து பயனுள்ள தகவல்களை அம்மா சொல்லிக்கொண்டே வந்தார்” என மகள் சொன்னதைக் கேட்டு பெருமிதத்துடன் தலையசைத்த அனீஷா, “பாடக் கல்வியைத் தாண்டிய வாழ்க்கைக் கல்வி மிக அவசியம். அதற்குப் பயணம் மட்டுமே துணை. என் அனுபவத்தில் சொல்கிறேன். பயணம் மட்டுமே பண்பட்ட மனிதனை உருவாக்கும்” என்றார்.

விழிப்புணர்வுடனும் பொறுப்புணர்வுடனும் பயணிப்பவர்

களுக்குத் தொலைவும் துணையாகும் என்பது அனீஷா விஷயத்தில் உண்மையாகியிருக்கிறது.

x