நாலு மாசத்துல எல்லாமே நாசமாகிடுச்சு


அன்று காலையிலேயே சுறுசுறுப்பாக எழுந்து லேப்டாப், செல்போன் எனப் பார்வையில் பட்ட பொருட்களையெல்லாம் பளபளவென துடைத்து சுத்தபத்தமாக இருந்தது பறக்கும் பைக். “வாசல்ல கோலம் போடுறது மட்டும்தான் பாக்கி...” என்றபடி வந்த பாச்சா, “விநாயகர் சதுர்த்தியும் அதுவுமா அக்கம்பக்கத்து வீடுகள்ல இருந்து கொழுக்கட்டை, சுண்டல் கொண்டுவருவாங்க... அதுக்குத்தானே இந்தப் பகுமானம்?” எனப் பகடி செய்தான்.

“சகவாச தோஷத்துல சாம்பார் சாதம் தொடங்கி சகலத்தையும் திங்கிற பழக்கம் எனக்குத் தொத்திக்கிடுச்சு. அதுக்காக இப்படி ரவுசு பண்றியே” என்று கோபித்துக்கொண்டது பைக். “ரவுசா? சட்டப்பேரவையில எதிர்க்கட்சிகளை ஏட்டிக்குப்போட்டியா ராக்கிங்கே பண்றாங்க திமுககாரங்க. நான் உரிமையோட உன்னை ஓட்டக்கூடாதா?” என்றான் பாச்சா.

“இது உரிமை அல்ல. உரிமைமீறல் என்பதைக் குசும்புமிகு உனக்குக் குத்திக்காட்ட விரும்புகிறேன்” என்று எதிர்க்கட்சி எம்எல்ஏ கணக்காக எகிறிய பைக், “ரைட்டு விடு! இன்னைக்கு யாரை முதல்ல ராக்கிங்... சாரி, இன்டர்வியூ பண்ணப்போறே?” என்று கேட்டது.

“கோடநாடு பழனிசாமி... சாரி எடப்பாடி பழனிசாமி” என்றான் பாச்சா.

முன்னாள் முதல்வர் இல்லம்.

‘கோபம்’, ‘ஆங்க்ரி’, ‘குஸ்ஸா’, ‘தேஸ்யம்’ என அனைத்து மொழிகளிலும் பொங்கிய ஆவேசத்தை அடக்கிக்கொண்டு மெலிதாகப் பெய்த சாரலுக்கு இதமாகக் கோட... சாரி குடையைப் பிடித்தபடி பவ்யமாக அமர்ந்திருந்தார் பழனிசாமி.

“இந்த தடவை ஒரு சேஞ்சுக்கு ஓபிஎஸ்ஸுக்குப் பதிலா தர்மயுத்தத்தை நீங்க ஆரம்பிக்கலாமே சார்... அதுக்கான சிச்சுவேஷன்லாம்தான் அம்சமா அமைஞ்சிருக்கே?” என்றபடியே அவர் முன் ஆஜரான பாச்சா, “ஆனா, எஸ்டேட் விவகாரத்தையெல்லாம் வெச்சுக்கிட்டு எந்த முகத்தோட அம்மா சமாதிக்குப் போக முடியும்னு உள்ளுக்குள்ள உர்ர்றுத்துமே?” என்று துணைக் கேள்வியையும் சேர்த்து அவரைத் துன்புறுத்தினான்.

எடுத்தவுடன் எரிச்சலான ஈபிஎஸ், “எது கோடநாடு விவகாரத்தை வெச்சு கும்மியடிக்கிறாங்களே திமுககாரங்க... அதுக்காகத்தான் நான் அடக்கி வாசிக்கிறேன்னு நீ நினைக்கிறியா?” என்றார் அமரிக்கையான குரலில்.

“மக்கள் நினைக்கிறாங்க சார்” என்ற பாச்சா, “அதிமுக போடுற திட்டத்தையெல்லாம் திமுக முடக்குதுன்னு சங்கடப்பட்டிருக்கீங்களே... தாறுமாறா வர்ற கேஸ்களைத் தவிடுபொடியாக்க அதிமுக போடுற திட்டம்லாம் அநியாயத்துக்கு முடக்கப்படுதுன்னு அர்த்தம் பண்ணிக்கலாங்களா?” என்று கேட்டான்.

“அதையெல்லாம் பார்த்துக்கத்தான் ஆர்.என்.ரவின்னு ஒரு ஆபீஸரை... சாரி ஆளுநரைக் கொண்டுவர்றோமே” என்று தனக்குள்ளே முணுமுணுத்துக்கொண்ட ஈபிஎஸ், “அதையெல்லாம் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மாவோட ஆன்மா பார்த்துக்கும். அதான் எல்லா மேட்டரையும் தெளிவா பிரஸ் மீட்ல சொல்லிட்டேனே” என்றார்.

“தெளிவாவா? அடப் போங்க சார்... முன்னாடியெல்லாம் மடைதிறந்த வெள்ளம் மாதிரி மனசுக்குத் தோணினதையெல்லாம் மளமளன்னு பேசி பிரஸ் மீட்டுல பின்னியெடுப்பீங்க. இப்பெல்லாம் உங்க ஸ்பீச் அடிக்கடி ஜெர்க் வாங்குதே” என்றான் பாச்சா.

‘மானத்தை வாங்குறானே’ என மைண்ட்வாய்சில் மனம்கசந்த ஈபிஎஸ், “புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ஆசியுடன், புரட்சித் தலைவி அம்மாவின் வழியில் மாண்புமிகு எடப்பாடி பழனிசாமியான என் ஆட்சியில சட்டம் ஒழுங்குல ஆரம்பிச்சு சட்டமன்றம் வரைக்கும் எல்லாமே நல்லா இருந்துச்சு. இந்த நாலு மாசத்துல எல்லாமே நாசமாகிடுச்சுன்னு மக்களெல்லாம் மனத்தாங்கல்ல இருக்காங்க. அதை நினைச்சு நினைச்சு டயர்டானதால லைட்டா டங் ஸ்லிப் ஆகுது. அதைப் போய் பெருசா கேட்க வந்துட்ட” என்று ஆதங்கப்பட்டார்.

“நேரமில்லா நேரத்துல கேள்வி கேட்க ட்ரை பண்றீங்க. ஒண்ணுமே நடக்க மாட்டேங்குது... ஒருவேளை உங்களுக்கு ஒட்டுமொத்தமா நேரம் சரியில்லையோ?” என்று பாச்சா கேட்டதும், பதிலற்று அமைதியான பழனிசாமியைப் பார்க்கவே பாவமாக இருந்தது.

‘சசிகலா வர்றாங்கன்னு தகவல் வந்தா சம்பவ இடத்துல இருந்தே எஸ்கேப் ஆகிடுறீங்களே?’ என்றெல்லாம் தயார் செய்திருந்த கேள்விகளைத் தவிர்த்துவிட்டு, விறுவிறுவென விடைபெற்றான் பாச்சா.

“அடுத்து ஜெயக்குமார்” என்று பட்டியலைப் படித்த பறக்கும் பைக், “ஆனாலும் ஒரே கட்சிக்காரங்களை அடுத்தடுத்து நேர்காணல் செய்றது நேர்மையில்லையே?” என்றது.

“அட நீ வேற... கன்டென்ட் யார் கொடுத்தாலும் கபக்குன்னு புடிச்சிக்கிட்டு கடகடன்னு பேட்டி எடுத்துடணும்” என்று சமாதானம் சொன்னான் பாச்சா.

ஜெயக்குமார் இல்லம்.

அதிரிபுதிரியான ‘அண்ணாத்த’ ஃபர்ஸ்ட் லுக்கை யூடியூபில் பார்த்தபடி, யூத்தான யூடியூபர் கணக்காகக் குறிப்புகளை எழுதிக்கொண்டிருந்தார் முன்னாள் அமைச்சர்.

“என்ன சார்... இப்ப சினிமா ரிவ்யூவெல்லாம் பண்ண ஆரம்பிச்சுட்டீங்க... ப்ளூ சட்டை மாறன் மாதிரி ‘வெள்ளை சட்டை ஜெயக்குமார்’னு சேனல் எதும் ஆரம்பிக்கிற ஐடியா இருக்கா?” என்றபடி அவருக்கு சலாம் வைத்தான் பாச்சா.

ஜெர்க்கான ஜெயக்குமார், “என்ன பண்றது? திமுககாரங்க நாடகத்தனமா அரசியல் பண்றாங்க. அது ரொம்ப போரடிக்குது. அதான் தியேட்டர் பக்கம் திரும்பிட்டேன். அதுவும் புரட்சித் தலைவர் - தலைவி பத்தின படம்ங்கிறதால ‘தலைவி’ ஃபர்ஸ் டே ஃபர்ஸ்ட் ஷோ பார்த்துட்டு ஃப்ரெஷ்ஷா பிரஸ் மீட்ல பேசிட்டேன்” என்றார்.

“ஆனா, திமுகவைத் திருப்திப்படுத்த வரலாற்றைத் திரிச்சிட்டாங்கன்னெல்லாம் வருத்தப்பட்டிருக்கீங்களே... படத்துல கேரக்டர் பேரெல்லாம் மாறித்தானே இருக்கு. கேரக்டரே உண்மை இல்லைங்கிறப்போ ஹிஸ்டரியை இஷ்டம் போல வளைச்சு எடுக்கிறதைத் தவிர்க்க முடியாதே சார்?” என்றான் பாச்சா.

“ஆனா உண்மைகளை யாராலும் உதாசீனப்படுத்த முடியாது. அதுவும் எங்க கிட்ட அதையெல்லாம் ஈசியா செஞ்சுட முடியாது” என்ற ஜெயக்குமாரிடம், “கொஞ்சம் கஷ்டப்பட்டா செஞ்சுட முடியும்னு சொல்றீங்களா?” என்று கமல் பாணியில் காமெடி செய்தான் பாச்சா.

“நீ கமல் மாதிரி பேசி கலாய்ச்சாலும்... நான் கண்டிப்பா பின்வாங்க மாட்டேன். சில பல சீன்ஸைப் படத்துல இருந்து எடுக்கணும்னு டைரக்டரை டைரக்டா வார்ன் பண்ணியிருக்கேன்” என்றார் ஜெயக்குமார்.

“நீக்கணும்னு கேட்கிறதோட சரியா, இல்லை... திரையில வந்த கதைக்கு எதிரா தரையில உட்கார்ந்து போராட்டம் பண்ற ஐடியாவும் இருக்கா?” என்று கேட்டதும் முகத்தில் கடுமை காட்டி முன்னகர்ந்தார் முன்னாள் அமைச்சர்.

அடுத்த நொடி அங்கிருந்து அவசரகதியில் அகன்றான் பாச்சா.

அடுத்து கார்த்தி சிதம்பரம்.

காரைக்குடியிலிருந்து காரிலேயே வந்திருந்த களைப்பையெல்லாம் துறந்து, காலாட்டியபடி செல்போனில் மூழ்கியிருந்தார் சிதம்பரம் மகன்.

“என்ன சார், எலக்‌ஷன்னு வந்துட்டா எதிர்க்கட்சிக்காரங்களோட அடிதடியெல்லாம் பண்ணுவேன்னு ஏக உற்சாகத்துல இணைய பேட்டிகள்ல பேசுறீங்க... ஆனா, சமூக வலைதளங்கள்ல உங்க கட்சிக்காரங்களையே சகட்டுமேனிக்கும் சதாய்க்கிறீங்க...” என்று கேட்டான் பாச்சா.

காதில் விழாததுபோல், “என்ன?” என ஏறிட்டுப் பார்த்தார் கார்த்தி சிதம்பரம்.

“அது ஒண்ணுமில்லை... உங்க அப்பா சீற்றமாப் பேசி சென்ட்ரல் கவர்ன்மென்ட்டையே சிதைச்சுட்டு இருக்காரு... ஆனா நேத்துக்குக் கட்சிக்கு வந்த சசிகாந்த் செந்திலை வெச்சு நீங்க சர்காஸம் பண்றீங்களேன்னு கேட்டேன்” என்றான் பாச்சா.

“அய்யா நான் அரசியல்வாதி. எனக்குப் பதவி கொடுத்தா நான் ஏன் உட்கட்சிக்குள்ளே ஒரண்டை இழுக்கப்போறேன்?! மோடிக்கு எதிராவே முண்டா தட்டுவேனே... சரி, வந்ததும் வந்துட்டீங்க. இதைச் சாப்பிடுங்க” என்று ஒரு தட்டு நிறைய கொழுக்கட்டையை நீட்டினார்.

பறக்கும் பைக்குடன் பகிர்ந்துண்டபடி அன்றைய பணிகளுக்கு எண்டு கார்டு போட்டான் பாச்சா!

x