குழந்தைக்கும் பெற்றோருக்கும் : ’மரப்பாச்சி சொன்ன ரகசியம்’


மரப்பாச்சி சொன்ன ரகசியம் - யெஸ்.பாலபாரதி

கற்றவர், கல்லாதவர், சிறுவர், பெரியவர் என்கிற எல்லைகளைக் கடந்து அனைவராலும் ரசிக்கப்படும் கலைப் படைப்புகள் காலத்தை வென்று நிலைத்து நிற்பவை. இசைஞானி இளையராஜாவின் இசையாகட்டும், நகைச்சுவை மன்னர் சார்லி சாப்ளினுடைய படங்களாகட்டும் அப்படிப்படவையே!

தன்னிடம் யாரேனும் அத்துமீற நினைத்தால் தனது மனத்தடையைக் கடந்து உடனடியாக எதிர்ப்பைத் தெரிவிக்கும் தைரியத்தை மரப்பாச்சி ’இளவரசி’ குழந்தைகளுக்கு ஊட்டுவது திண்ணம்.

செவ்வியல் இசை ஜாம்பவான் கேட்டு மெய்சிலிர்த்துப்போகும் ராஜாவின் பாடலை இசை வந்த திசை அறியாதவரும் கேட்டு உருகி மறுகுவார். அதுபோன்று சாப்ளின் படங்கள் பேசும் நுண் அரசியலை ஒரு பார்வையாளர் சிலாகித்துக் கொண்டிருக்கையில் அருகில் அமர்ந்திருக்கும் சுட்டிப் பெண் குழந்தையும் கண்டு கண்டபடி சிரித்து ரசித்துக் கொண்டிருப்பார். இப்படி நுட்பமான கருத்தை அற்புதமான அழகியல் மூலமாக வெளிப்படுத்துவதென்பது தனிக் கலை.

அத்தகைய கலை அண்மையில் கைகூடிய புத்தகங்களில் ஒன்று, ‘மரப்பாச்சி சொன்ன ரகசியம்’. வானம் பதிப்பகத்தின் வெளியீட்டில் 2018-ல் ‘மரப்பாச்சி சொன்ன ரகசியம்’ சிறுவர் நாவல் வெளிவந்தது. இதன் ஆசிரியர் யெஸ்.பாலபாரதிக்கு 2020-ம் ஆண்டுக்கான பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

'மரப்பாச்சி சொன்ன ரகசியம்’ நாவலில் ஒரு காட்சி

பாடத்திட்டத்தில் இருந்தும் மாற்றமில்லையே!

பள்ளிக்கூடம், பொது இடங்களில் மட்டுமல்லாது வீடுகளிலும் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை சட்டரீதியாக பாதுகாக்க இயற்றப்பட்டதே பாக்சோ சட்டம். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இச்சட்டம் 2012-ல் அமலுக்கு வந்தது. இதன் பொருட்டு ‘சரியான தொடுதல்’ (Good Touch), ‘தவறான தொடுதல்’ (Bad Touch) உள்ளிட்டவை குறித்த விழிப்புணர்வைக் குழந்தைகளுக்கு ஏற்படுத்தும் வகையில் பள்ளிப் பாடத்திட்டத்திலும் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது.

இப்பாடத்தைக் கற்பிக்கத் தமிழகத்தில் 1 லட்சம் ஆசிரியர்களுக்குப் பயிற்சியும் அளிக்கப்பட்டது. ஆனாலும், பள்ளி ஆசிரியர்களே பாலியல் குற்றங்களில் ஈடுபடும் சம்பவங்கள் அண்மையில்கூட வெட்டவெளிச்சத்துக்கு வந்ததை யாராலும் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது. இந்த விவகாரத்தில், சமூகப் பொறுப்பு மிக்க ஆசிரியர் பணியை ஏற்றவர்களே இத்தகைய படுபாதகச் செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்பது ஒரு புறம் இருக்கட்டும். மறுபுறம், பெற்றோருக்கும், சமூகத்தினருக்குமே குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்த போதுமான விழிப்புணர்வு இதுவரை கிட்டவில்லை என்பதுதான் வேதனையான உண்மை. ஆகவேதான் பல ஆண்டுகளாக பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்த ஆசிரியர்கள் இப்போதுதான் கையும் களவுமாகப் பிடிபடுகிறார்கள். அது மட்டுமின்றி குழந்தைகளிடம் அத்துமீறுபவர்கள் பெரும்பாலும் உறவினர்களாகவோ, குடும்ப நண்பர்களாகவோ, அக்கம்பக்கத்தாராகவோதான் இருக்கிறார்கள். இதனால் இந்த சிக்கலுக்கு எப்படி எதிர்வினையாற்றுவதெனப் பெற்றோருக்கே தெரிவதில்லை.

இந்நிலையில், ‘மரப்பாச்சி சொன்ன ரகசியத்தை’ வாசிக்கும் வயது முதிர்ந்தவர்கள் தனது சமூகப் பொறுப்பையும் கடமையையும் உணர்வார்கள். அதுவே பத்து வயதை கடந்த சிறுவர்/சிறுமி இந்நாவலை வாசிக்கையில் மாயாஜால உலகிற்குள் அழைத்துச் செல்லப்பட்டு தங்கள் உடல் மீதான உரிமையை மென்மையாக உணரத் தொடங்குவார்கள்.

“சீ...என்ன வார்த்தை பேசுற? வாயை மூடு!”

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை போன்ற சிக்கலான பிரச்சினையைத் தீவிரமான மொழியில் எழுதுவது சுலபம். ஆனால், குழந்தைகளிடம் இந்த சிக்கலை அவர்களது குழந்தைமையைச் சிதைத்திடாத வண்ணம் பேசுவதென்பது பெரும் சவால். அதிலும் புனைவின் வழி எடுத்துரைப்பது இரட்டை சவால். குழந்தையின் மனம் அதிர்ச்சிக்குள்ளானால் அங்கேயே சிக்குண்டுவிடும். சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளைபோல் காதில் கேட்ட ‘கெட்ட’ வார்த்தைகளை நம் வீட்டுக் குழந்தைகள் சில நேரம் சொல்லக் கேட்டிருப்போம். அப்போது, “சீ...என்ன வார்த்தை பேசுற? வாயை மூடு!” என்று பதற்றத்தில் அதட்டிவிடுவோம். நம்முடைய இத்தகைய எதிர்வினை குழந்தை மனத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திவிடும். அதன் பிறகு குழந்தையின் மனம் அந்த சொல்லுக்குள் சிக்கிக் கொள்ளும். “எதற்காக அம்மா அந்த சொல்லுக்குப் படபடத்தாள்” என்று குழந்தை மனம் தேடத் தொடங்கும். மீண்டும் மீண்டும் அச்சொல்லைச் சுற்றியே பிஞ்சு மனம் வட்டமிடும்.

மாயாஜால ‘இளரவசி’!

இத்தகைய அபாயகரமான கட்டம், ‘மரப்பாச்சி சொன்ன ரகசியம்’ நாவலிலும் உள்ளது. அதனைத் தனது கற்பனை வளத்தால் மாயாஜால மரப்பாச்சி ’இளவரசி’ துணை கொண்டு அனாயாசமாகக் கடந்திருக்கிறார் நாவலாசிரியர் யெஸ்.பாலபாரதி. அவரதுகற்பனைக்குக் காட்சி வடிவில் உயிர்கொடுத்திருக்கிறார் ஓவியர் ராஜன். அதிலும் முதன்முதலில் மரப்பாச்சி ’இளவரசி’ உயிர்பெற்று ஷாலுவுடனும், அவளது தம்பி ஹரியுடனும் பேசும் சித்திரம், ஜன்னலை ஒட்டிய கேபிள் டிவியின் வயரைப் பிடித்துத் தொங்கி மரப்பாச்சி பொம்மை தப்பிக்கும் சித்திரம், பால்காரர் முருகனுக்கு வானிலிருந்து மரப்பாச்சி பொம்மை வந்து விழும் சித்திரம் உள்ளிட்டவை வாசகர் மனத்தில் ஒட்டிக்கொள்ளக்கூடியவை.

தன்னிடம் யாரேனும் அத்துமீற நினைத்தால் தனது மனத்தடையைக் கடந்து உடனடியாக எதிர்ப்பைத் தெரிவிக்கும் தைரியத்தை மரப்பாச்சி ’இளவரசி’ குழந்தைகளுக்கு ஊட்டுவது திண்ணம். பாரம்பரிய விளையாட்டுகள் உள்ளிடவை குறித்த அறிவுப்பூர்வமான தகவல்களுடன் நுட்பமான உடலரசியலைக் குழந்தை மொழியில் பேசும் இப்புத்தகம் பெற்றோர், ஆசிரியர்களுக்குமான பால பாடமும்கூட!

’மரப்பாச்சி சொன்ன கதை’ - யெஸ். பாலபாரதி வானம் வெளியீடு, சென்னை. தொடர்புக்கு: 91765 49991

x