நல வாரியம் கடன் தந்தாலாவது நாங்கள் பிழைத்துக் கொள்வோம்!


மு.வேலாயுதம்

‘கரோனா காலத்தில் அனைத்துத் தொழில்களும் பேரிடி வாங்கியுள்ளன. அதில் புத்தகங்கள் அச்சிட்டு விற்கும் பதிப்பகங்களின் சோகம் சொல்லி மாளாது. ஏற்கெனவே வாசிப்பு குறைந்ததால் வாசகர்கள் வருகை குறைந்திருக்கும் நிலையில், கரோனாவும் புத்தக விற்பனையை பெருமளவு சிக்கலில் ஆழ்த்தி விட்டது. இதற்கு அரசு ஏதாவது உதவிகள் செய்ய வேண்டும். குறிப்பாக, பதிப்பாளர்கள் நல வாரியத்தில் உள்ள பணத்தை கடனாக பதிப்பகங்களுக்கு கொடுத்தால் கூட, கொஞ்சம் புத்தக வெளியீட்டாளர்கள் ஆசுவாசப்பட்டுக் கொள்ள முடியும்‘ என்கிறார் கோவை விஜயா பதிப்பகம் நிறுவனர் மு.வேலாயுதம்.

கடையில் புத்தகங்கள்

‘‘அச்சகம், நியூஸ் பிரின்ட் எல்லாமே தேக்கம். வாங்குகிறவர்களால் வாங்க இயலவில்லை. பணம் அனுப்பறவங்களுக்கு அனுப்ப முடியவில்லை. தமிழகத்தில் உள்ள அத்தனை பதிப்பகங்களிலும் விற்பனை ரொம்பவும் பாதித்துள்ளது!’’ என்று சொன்ன அவரிடம் “இதற்கு அரசிடம் கோரிக்கை எதுவும் வைத்துள்ளீர்களா?’’ எனக் கேட்டோம்.

‘‘கோரிக்கையை சங்கம்தான் வைக்க வேண்டும். பதிப்பாளர் நல வாரியம் என்று ஒன்று இருக்கிறது. அதில் கோடிக்கணக்கான ரூபாய் இருக்கிறது. எந்தெந்த பதிப்பாளர்களிடம் எவ்வளவு வாங்கியிருக்கிறார்களோ, அதைத் திரும்பக் கொடுத்தால் கூட போதும், சும்மா கொடுக்க வேண்டாம். கடனாக கொடுத்து குறைந்த வட்டி வசூலித்தால் போதும். வட்டியில்லாமல் கூட கொடுக்கலாம். நாங்கள் அரசு நூலகங்களுக்கு விநியோகிக்கும் புத்தகங்களுக்கு இரண்டரை சதவீதம் பதிப்பாளர் நல வாரியத்திற்காக பிடித்தம் செய்கிறார்கள். கலைஞர் ஆட்சிக்காலத்திலிருந்தே இந்தப் பிடித்தம் செய்து வருகிறார்கள். இந்தப் பணம் அரசு கஜானாவில் தூங்குகிறது. இதைக் கேட்பதற்கும், பெரிதாக கோரிக்கை வைத்துக் கேட்பதற்கும் எங்கள் சங்கத்தில் ஆட்கள் இல்லை’’ என்றார் வேலாயுதம்.

x