86 வயது... 330 புத்தகங்கள்!


ஈசாந்திமங்கலம் முருகேசன்

ஒரு மனிதன் தன் வாழ்நாளில் 300 புத்தகங்களை படிப்பதே அரிதாகிப் போன இன்றைய காலக்கட்டத்தில், இதுவரை 330 புத்தகங்களை படைத்திருக்கிறார் குமரிமாவட்டம் ஈசாந்திமங்கலத்தைச் சேர்ந்த முருகேசன்.

தற்போது 86 வயதாகும் ஈசாந்திமங்கலம் முருகேசன் இந்த வயதிலும் வாசிக்கவும், எழுதவும் தினமும் 16 மணி நேரத்தை ஒதுக்குகிறார். தற்போது 12 புத்தகங்களை எழுதிவருகிறார். வரலாற்றுப் படைப்புகள் தொடங்கி, நாவல்கள் வரை நீண்டு விரிகிறது இவரது படைப்புலகம்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய அவர், “எனது தாத்தா இசக்கிமுத்துப்பிள்ளை நாஞ்சில் நாட்டில் பெரிய கவிஞர். அவர் சித்தவைத்தியராகவும் இருந்தார். அவரது கவிதைகளை ஏட்டுச்சுவடி மூலம் படிக்கும் வாய்ப்பு சிறுவயதிலேயே எனக்குக் கிடைத்தது. இலக்கணப் பிழை இல்லாமல் மரபுக் கவிதைகளை அவர் சிறப்பாக எழுதியிருப்பார். 1949-ல் நான் 9 -ம் வகுப்பு படிக்கும்போது, என் முதல் சிறுகதை நாளிதழில் வெளியானது. எனது தமிழாசிரியர் பண்டார நம்பியார் எனக்கு அந்த நேரத்தில் ஊக்குவிப்பாக இருந்தார்.

என் திறமையைக் கண்டறிந்து அனைவர் முன்பும் பாராட்ட வைத்தவர் பண்டார நம்பியார் தான். பள்ளிக்காலத்தில் இயற்கையைப் பற்றி நான் எழுதிய ஒரு கட்டுரையைப் படித்துவிட்டு உச்சிமுகர்ந்து பாராட்டினார். கூடவே முருகேசா, உனக்குத் தமிழ் சோறு போடும் என்றார். இன்றைக்கும் எனக்குத் தமிழ்தான் சோறு போடுகிறது!

1951 முதல் 1953 வரை இன்டர்மீடியட் கோர்ஸ் படித்துக்கொண்டிருக்கும்போது நாவலர் நெடுஞ்செழியனின் ‘மன்றம்’ பத்திரிகையில் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. மன்றத்தில் துணை ஆசிரியராகவும் இருந்தேன். ரசாயன உர கம்பெனியில் வேலைசெய்து கொண்டே எழுதத் துவங்கினேன். மணிமேகலை பிரசுரத்தில் மட்டும் 40 புத்தக்கங்கள் எழுதினேன்.

கம்பராமாயணம் உரைநடைச் சுருக்கத்தை இரண்டே மாதத்தில் எழுதிமுடித்தேன். அது தமிழக்கத்தை விட அமெரிக்காவில் அதிகம் விற்றது. இதுவரைக்கும் மொத்தம் 330 புத்தகங்கள் எழுதியுள்ளேன். 42 பதிப்பகங்களில் என் புத்தகங்கள் வெளியாகியுள்ளன. ஈசாந்தி முருகேசன், ஈசாந்திமங்கலம் முருகேசன், பட்டத்தி மைந்தன், செந்தி மணாளன், கதிரவன் என பல புனைப்பெயர்களிலும் எழுதிவருகிறேன். மேல்நாட்டு அறிஞர்களின் வாழ்க்கை, அரேபியக் கதைகள் என மொழிபெயர்ப்பு நூல்களையும் அதிகம் எழுதியிருக்கிறேன்.

படிக்கவும் எழுதவும் ஒருநாளைக்கு 16 மணிநேரம் ஒதுக்குகிறேன். 86 வயதானாலும் என் மனது இன்னும் இளமையாகவே இருக்கிறது. அதற்குக் காரணம், வாசிப்பும், எழுத்தும்தான்!’’ என்றார்.

இலக்கியம் தான் தனக்கு இந்த வயதிலும் சோறுபோடுவதாக அழுத்தம் திருத்தமாகச் சொல்லும் இவர், இந்த வயதிலும் கண்ணாடி அணியாமல் எழுதவும் படிக்கவும் செய்கிறார். அதுகுறித்துக் கேட்டால், தான் எழுதிய சித்தமருத்துவம் சார்ந்த நூல்களும், தன் தாத்தாவிடம் இருந்து கற்றுக்கொண்ட பாரம்பரிய மருத்துவக் குறிப்புகளைப் பின்பற்றுவதுமே காரணம் என்கிறார் முருகேசன்.

x