அஞ்சலி: காலத்துடன் கரைந்த கலைத்தோழன்


குமரி மாவட்டத்தின் நாடகக் கலைக்கு நீண்ட வரலாறு உண்டு. அதன் மையப்புள்ளியாகத் திகழ்ந்தவர் இரணியல் கலைத்தோழன். அவரளவுக்கு நாடகங்களை எழுதியவர்கள், இப்போது யாரும் இல்லை எனலாம். அவர் எழுதிய நாடகங்கள் 2,700-க்கும் மேற்பட்ட மேடைகளைக் கண்டிருப்பது, நாடகக் கலையின் மீது அவர் கொண்ட நேசத்திற்கு சாட்சி. தன் வாழ்நாளெல்லாம் நாடகக் கலைக்காகவே அர்பணித்துக்கொண்ட கலைத்தோழன், தனது 91-வது வயதில் காலமாகியிருக்கிறார்.

மாங்குழி கிராமத்தில் பிறந்த இவரது இயற்பெயர் சாமுவேல். இரணியல் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்தபோதே நாடகம், பாடல் என முத்திரை பதித்ததால் இவரது ஆசிரியர் கணபதி, “நீ கலைக்குத் தோழனடா" என அழைக்க, அதையே தனது புனைப்பெயராக்கிக்கொண்டார். தனது கிராமத்திலிருந்து ஒரு மைல் தொலைவில் இருந்த இரணியலில், புகழ்பெற்ற இரணியல் அரண்மனை இருந்ததால் தனது புனைப்பெயரில் இரணியலையும் சேர்த்துக்கொண்டார். தனது ஆசிரியர் குறிப்பிட்டது போலவே, தன் வாழ்நாள் முழுவதும் கலைக்குத் தோழனாகவே இருந்தார்.

குமரி ஆதவன்

கலை மீது காதல் கொண்டவர்

தமிழக அரசின் ‘தமிழ்ச் செம்மல்’ விருது பெற்ற எழுத்தாளர் குமரி ஆதவன், இரணியல் கலைத்தோழன் குறித்த நினைவுகளை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

“குறும்பனை தூய இஞ்ஞாசியார் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார் கலைத்தோழன். அவரது மனைவி கிரேஸ் சுந்தர பாய் 82-வது வயதில் காலமான பிறகு, கலைத்தோழனின் உடல்நிலை நலிவடைய ஆரம்பித்தது. ‘என்னை எழுத உற்சாகப்படுத்தியதோடு, 7 குழந்தைகளையும் கவனித்துக்கொண்டதும் என் மனைவிதான்’ என்று அவர் பகிர்ந்துகொண்டது ஞாபகம் வருகிறது. கலைத்தோழனின் முதல் குழந்தை கலைவாணி. அடுத்ததாகப் பிறந்த 6 பேருக்கும்கூட கலை எனும் வார்த்தை வரும்படி கலைச்செல்வன், கலைமதி, கலைக்குமார், கலை ஆசீர், கலைப் புனிதன், கலை வின்சி எனப் பெயர் சூட்டினார். அந்த அளவுக்கு அவருக்குக் கலை மீது தாகம்.

குமரி கலைத்தோழன் (இளவயதில்)

மாங்குழியான், மாங்குழி மன்னன், குடக்கலைஞன், ரோஜா, எமேயஸ் போன்ற புனைப்பெயர்களில் நாடகம், வரலாறு, கவிதை, சிறுகதை, புதினம் என எழுத்தின் எல்லாவகைகளையும் பரிசோதித்துப் பார்த்தவர் கலைத்தோழன். எந்தவொரு பின்புலமும் ஆதரவும் இல்லாத ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து, தனது திறமையாலும் அயராத உழைப்பாலும் உயர்ந்தவர். சுமார் 75 ஆண்டுகள் தமிழகம் மட்டுமின்றி கேரளம், ஆந்திரம், கர்நாடகம், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் (தமிழர் வாழும் பகுதிகளில்) 2,700-க்கும் மேற்பட்ட மேடைகளில் நாடகங்களை நடத்திய அவரது தமிழ்ப்பணி அளப்பரியது. 87 நாடகங்களைப் படைத்துள்ள அவர், எந்தவொரு நாடக மன்றமும் இல்லாமல், நாடகம் நடத்த விரும்பும் பகுதிகளில் உள்ள சாமானியர்களைத் தேர்வுசெய்து அவர்களுக்கு நாடகத் தமிழ் உச்சரிப்பைக் கற்றுக்கொடுத்து நடிக்கவைக்கும் மகத்தான பணியைச் செய்துவந்தவர். இதனால் நாடகக் கலைஞர்கள் அவரைப் பெரிதும் நேசிக்கின்றனர். அவரால் நாடகக் கலைஞர்களாக உருவான சாமானியர்கள் மிக அதிகம்.

கலைத்தோழன் தீவிரமான வாசகர். சாப்பிட உணவு இல்லாமல்கூட இருந்துவிடுவார். ஆனால், படிப்பதற்குப் புத்தகம் இல்லை என்றால் அவரால் தாங்க முடியாது. அதனால் நூலகங்களுக்குச் சென்று புத்தகங்களை எடுத்து தொடர்ந்து தன்னுடைய வாசிப்பை வளர்த்துக்கொண்டார். இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னரே, அதாவது 1947 ஜனவரி 1-ம் தேதி, பெருங்கோடு இரட்சணிய சேனை ஆலயத்தில் தனது முதல் நாடகமான ‘திருந்திய சகோதரன்’ என்ற நாடகத்தை அரங்கேற்றினார். அன்று தொடங்கிய எழுத்துப் பணி, அவர் இறப்பதற்கு ஒரு சில ஆண்டுகளுக்கு முன்புவரை தொடர்ந்தது” என்று நெகிழ்ச்சியுடன் சொன்னார் குமரி ஆதவன்.

தமிழர் விடுதலைக்காக எழுதியவர்

நாடகத்துக்கான எழுத்து, இயக்கம் என்பதோடு முடிந்துவிடவில்லை கலைத்தோழனின் பணிகள். கன்னியாகுமரி மாவட்டத்தைத் தமிழ்நாட்டுடன் இணைப்பதற்காக மார்ஷல் நேசமணி போராடியபோது, திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸில் இணைந்து மாணவப் பருவத்திலேயே தேடப்படுவோர் பட்டியலில் சேர்க்கப்பட்டார். இதன் காரணமாக, 40 நாட்கள் தலைமறைவு வாழ்க்கையும் நடத்தியிருக்கிறார். தமிழர்களுடைய விடுதலை சார்ந்த பாடல்களை ஏராளமாக எழுதி, மேடைகளில் மாணவப் பருவத்திலேயே பாடியிருக்கிறார்.

இரணியல் கலைத்தோழன் எழுதி இயக்கிய நாடகங்களில், 33 நாடகங்கள் நூல் வடிவம் பெற்றுள்ளன. அவர் எழுதிய மிக முக்கியமான நூல்களான ‘குமரி மாவட்ட நாடக கலைஞர்கள் வரலாறு: பாகம் -1 மற்றும் 2, ‘குமரி மாவட்ட நாடக வரலாறு’ ஆகியவை பெரும் கவனம் குவித்தன.

இதழியல் பணிகள்

இதழியல் உலகிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்திருக்கிறார் இரணியல் கலைத்தோழன். அதைப் பற்றியும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார் குமரி ஆதவன்.

“பல பணிகளுக்கு இடையிலும் ‘ரோஜா’, ‘நாடகக் கலை’, ‘நாடகத் துறை’ ஆகிய மாத இதழ்களை கலைத்தோழன் நடத்திவந்தார். பொருளாதாரச் சூழல் காரணமாக அவற்றைக் கைவிட்டதாகப் பதிவுசெய்திருக்கிறார். பின்னர், ‘உதயதாரகை’, ‘சிறுமலர்’ போன்ற மாத இதழ்களில் ஆசிரியர் குழுவில் பணியாற்றினார். அவரது 75 சிறுகதைகள் பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. 1972-ல் தனது ‘கல் நெஞ்சன்’ என்ற நாடகத்தை, நடைக்காவு என்ற ஊரில் கர்மவீரர் காமராஜர் தொடங்கி வைத்ததை கடைசிவரை கலைத்தோழன் பெருமையாகச் சொல்லிக்கொண்டே இருந்தார்.

அம்பேத்கர் ஃபெல்லோஷிப் விருது

‘நாடக சாகரம்’, ‘நாடகக் கலைமாமணி’, ‘நாடகக் கலை வேந்தன்’, ‘நாஞ்சில் நாடகக் கலைச்சுடர்’, ‘கலை முதுமணி’, ‘கலைச்சுடர்’, ‘கலைச் சக்கரவர்த்தி’, ‘அரங்கேற்ற கலைமணி’ உள்ளிட்ட விருதுகளையும் ‘களரி’ கிராமியக் கலைஞர் விருது, ‘நாஞ்சில் நாதம்’ விருது, வைரமுத்து சமூக இலக்கியப் பேரவை வழங்கிய கவிஞர் தின விருது, திருச்சி கலைக்காவிரி வழங்கிய ‘கலைக் காவிரி விருது’ போன்ற விருதுகளையும் கலைத்தோழன் பெற்றுள்ளார். அதில், டெல்லி பாரதிய தலித் சாகித்ய அகாடமி வழங்கிய ‘அம்பேத்கர் ஃபெல்லோஷிப்’ விருது குறிப்பிடத்தக்கது.

கலைமாமணி உட்பட பெரிய, பெரிய விருதுகள் எல்லாம் பெற்றிருக்க வேண்டியவர் கலைத்தோழன். சினிமாவுக்கு இருக்கும் மோகம் நாடகக் கலைக்கு இல்லாததால், அந்த மாபெரும் கலைஞனின் மரணம் மாவட்டத்தைக் கடந்து பேசுபொருளாகவில்லை. கலைத்தோழன் மறைந்தாலும் அவரால் எழுதி, இயக்கப்பட்ட சமூக நாடகங்கள் அவர் வாழ்வின் சாட்சியாக எப்போதும் அரங்கேற்றப்பட்டுக்கொண்டே இருக்கும்” என்றார் குமரி ஆதவன்.

சமூகம் கவனிக்க மறந்துவிட்ட கலைஞர்களை, காலம் உரிய முறையில் அங்கீகரிக்கும். கலைத்தோழனுக்கும் அப்படியான அங்கீகாரம் காலம் கடந்தேனும் கிடைக்கட்டும்!

x