இசை வலம்: சிங்களத்துச் சின்னக் குயில்


இலங்கையைச் சேர்ந்த யோகனி டி சில்வா சொல்லிசைக் கலைஞர், பாடகி, இசையமைப்பாளர், நடனக் கலைஞர், விளம்பர மாடல், நீச்சல் வீரர், யூடியூபர் எனப் பல முகங்களைக் கொண்டவர். மேரி கிறிஸ்துமஸ் போன்ற சுயாதீனமான இசைப் பாடல்களின் வழியாக இவர் அறியப்பட்டிருந்தாலும், கவர் வெர்ஷனாக இவர் பாடிய 'மணிகே மகே ஹிதே’ எனும் சிங்களப் பாடல்தான் இவருக்குப் பெரும்புகழ் தேடித் தந்திருக்கிறது.

உலகம் முழுவதும், யூடியூபில் 60 மில்லியன் பார்வையாளர்களை இப்பாடல் ஈர்த்திருக்கிறது. துலான் ஏஆர்எக்ஸ் என்பவர் எழுதி, சாமத் சதீஷ் இசையமைத்துத் தயாரித்திருக்கும் இந்தப் பாடலை, கடந்த ஆண்டில் சதீஷன் ரத்னாயகா பாடி வெளியிட்டார். அதை யோகனி தனது பாணியில் பாடியிருக்கிறார்.

யோகனியின் வசீகரமான குரலும் பாவனைகளும் அர்த்தமே புரியாவிட்டாலும் ரசிகர்களை மீண்டும் மீண்டும் பார்க்கவைத்திருக்கின்றன. அடுத்தடுத்து தமிழ், இந்தி, பஞ்சாபி, நேபாளி, மலையாளம், கொங்கனி மொழிகளிலும் பாடல் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. தமிழிலும் மலையாளத்திலும் யோகனி பாடிய வீடியோவும் அண்மையில் வெளியாகியிருக்கிறது. பிரபல நிறுவனங்களுக்கு விளம்பரத் தூதர், சிங்களத்தின் இசை இளவரசி என கிரீடங்களுக்கு மேல் கிரீடங்கள் இந்தச் சிங்களத்துச் சின்னக் குயிலின் சிரசை அலங்கரிக்கின்றன.

சிங்களத்துச் சின்னக் குயில் தமிழில் பாடுவதைக் கேளுங்கள்:

https://www.youtube.com/watch?v=BpubhA53A-Q

மரபைத் தாங்கும் நவீனம்!

வயலினின் தந்திகளில் வில்லைக் கொண்டு இசை ஓவியங்களைத் தீட்டும் நந்தினி ஷங்கரும், எலக்ட்ரானிக் ஐபாட்டில் ஸ்வரப் புள்ளிகளைக் கோத்து இசைக் கோலம் போடும் மகேஷ் ராகவனும் பரஸ்பரம் வசப்படுத்தி வசமாகி தம்பதியாகிவிட்டனர். இசைமயமான வாழ்வில் திளைக்கும் இருவரும், புத்தாக்க முயற்சிகளைத் தொடர்கின்றனர்.

அண்மையில் நெட்ஃப்ளிக்ஸில் வெளியான ‘நவரசா’ தொடரின் அறிமுகத்துக்காக, பாரம்பரியமாக பாடப்படும் `சோடோ மோரி பாஹியான்’ எனும் உருக்கமான பாடலை, நவீனத் தன்மையான இசையோடு அளித்திருக்கின்றனர் இருவரும். இந்துஸ்தானி இசையில் துருபத், கயல், கஜல் உள்ளிட்ட வகைமைகளில் மிகவும் பழமையான இசை வகைமை துமரி.

இந்த வகைமையில், பாரம்பரியமாகப் பாடப்படும் பாடலைத் தன்னுடைய இனிமையான குரலில் பாடியிருக்கிறார் திரையிசைப் பாடகி சாஷா திரிபாதி. திரையிசைப் பாடல்களைப் பாடும்போது அவரின் குரலில் வெளிப்படும் எந்த ஜோடனைகளும் இந்தப் பாடலில் இல்லை. தெளிந்த நீரோடையைப் போல் அவரது குரல் ஒலிக்கிறது. கேட்பவர்களை மெய்மறக்கச் செய்கிறது.

துமரி இசையில் துய்க்க:

https://www.youtube.com/watch?v=FAHa2qrNFcA

‘வாடா ராசா’ பாடல் காட்சி...

பாட்டுத் திருவிழா!

கிராமத்தின் மண்வாசனையோடு ‘சோனி மியூசிக்’ நிறுவனத்துக்காக, ‘வாடா ராசா’ எனும் பாடலை கென், கிரேஸ் கருணாஸ், ஈஷ்வர் கூட்டணி சேர்ந்து உருவாக்கியிருக்கின்றனர். தெம்மாங்குப் பாடல்களுக்கு உரிய உச்சஸ்தாயி த்வனி கிரேஸின் குரல் வளத்துக்கு அல்வாத் துண்டு போல ருசியுடன் வெளிப்படுகிறது. உழவனின் பெருமை, நம்முடைய பாரம்பரியமான உடையின் உன்னதம், நெசவு, உழவு போன்ற தொழில்களைக் காப்பாற்றுவதற்காக நாம் ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய விஷயங்கள், நம்முடைய பாரம்பரியமான விளையாட்டுகள், உணவுப் பழக்கங்கள் இவற்றை நம்முடைய அடுத்த சந்ததிக்கும் கொண்டுசேர்ப்பதில், நாட்டின் நலமும் வளமும் எப்படி ஒளிந்திருக்கிறது என்பதைப் பிரம்மாண்டமான கிராமத்து திருவிழாவைக் காணும் அனுபவத்தோடு காட்சிப்படுத்துகிறது ‘வாடா ராசா’ பாட்டின் காணொலி. இந்தப் பாடலில் பிரபல தொலைக்காட்சி தொடரின் நாயகி ப்ரீத்தி சர்மாவின் தோற்றம், கிராமத்தின் ஏரிக்கரை பூங்காற்று!

வேட்டியை மடித்துக் கட்டி ஆடவைக்கும் பாடல்:

https://www.youtube.com/watch?v=_EM0k6VPw_k&list=PL_DaWb6RFQc1b64rZiW_PntzXVHwb2HjM

‘அலாவுதீன்’ படத்திலிருந்து...

பறக்கும் பாவைக்காக ஒரு பாட்டு!

சென்னையைச் சேர்ந்த இசைக் கலைஞர்கள் உதயகுமார் – நின்ஸி தம்பதி, இந்த ஊரடங்கு காலத்திலும் மனதுக்குப் பிடித்த பாடல்களை கவர் வெர்ஷனாக வெளியிடுவதிலும் தனிப் பாடல்களுக்கு இசை அமைக்கும் பணிகளிலும் கவனம் செலுத்துவருகின்றனர். இந்தப் பணிகளுக்காக, `ட்ரீம் மியூசிக்’ எனும் யூடியூப் சேனலையும் தொடங்கியிருக்கின்றனர்.

நின்ஸி வின்சென்ட்டுக்கு சொந்த ஊர் கேரளத்தின் கொல்லம். அவருடையது இசைக் குடும்பம். அப்பா தபேலா வாத்தியக் கலைஞர். அம்மாவும் அக்காவும் பாடகிகள். சிறுவயதில் அப்பாவின் ஆர்கெஸ்ட்ரா குழுவில் பாடத் தொடங்கிய நின்ஸி, குறுகிய காலத்திலேயே ஆயிரக்கணக்கான மேடைகளில் இசை நிகழ்ச்சியை வழங்கிய அனுபவத்தைப் பெற்றிருக்கிறார்.

இளையராஜா இசைக் குழுவில் கிதாரிஸ்ட் சந்திரசேகரன், டிரம்மர் புருஷோத்தமன் ஆகியோர் நின்ஸியின் குடும்ப நண்பர்கள். அவர்கள் மூலமாக, 2008-ல் வெளிவந்த `ஜகன்மோகினி’ படத்தில் ராகுல் நம்பியாருடன் டூயட் பாடல் பாடும் வாய்ப்பை இளையராஜா வழங்கியிருக்கிறார்.

அதன் பிறகு, பலரது இசையமைப்பில் நின்ஸி பாடத் தொடங்கினார். தமிழ், தெலுங்கு, மலையாளம் உட்பட 150 படங்களில் பாடியிருக்கும் நின்ஸிக்கு டிஸ்னி நிறுவனத்தின் படங்களில் பின்னணி பாடுவதற்கு வாய்ப்பு வந்தது. அதன் தொடர்ச்சியாக ‘அலாவுதீன்’ படத்தில் பாடியிருக்கிறார். அந்த அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் நின்ஸி.

“அலாவுதீன் படத்தைத் தமிழில் வெளியிடுவதற்கு டிஸ்னி நிறுவனத்தினர் திட்டமிட்டனர். டிஸ்னியில் இருந்து நேரடியாகக் குரல் தேர்வுக்கு வந்திருந்தனர். `ஜாஸ்மின்’ கதாபாத்திரத்துக்கு ஆடிஷனுக்கு வந்திருந்த யாருடைய குரலும் பொருந்தவில்லை. ஏற்கெனவே நான் டிஸ்னி நிறுவனத்துக்காகப் பாடிக்கொண்டிருந்த விவரம் தெரிந்து, என்னையும் ஆடிஷனுக்குக் கூப்பிட்டார்கள். நிறைய திருத்தங்களைச் சொல்லியும் மெருகேற்ற வைத்தும் என்னைப் பின்னணி பாட வைத்தார்கள். `ஜாஸ்மின்’ பாத்திரத்துக்காக முழுமையாக நான் மட்டுமே பாடினேன். அது என்னுடைய புகழை உலகம் முழுவதும் பேசவைத்தது. எனக்குக் கிடைத்த இந்தப் பயிற்சியால், ‘லயன் கிங்’ தெலுங்கில் பாடுவதற்கு எனக்கு பெரிய சிரமம் இருக்கவில்லை. தெலுங்கில் `லயன் கிங்’ படத்தில் `நாலா’ எனும் கதாபாத்திரத்துக்கும் பாடினேன்” என்கிறார் நின்ஸி. ‘என் வான் வேறா…’ எனும் ‘அலாவுதீன்’ பாடலில் காதலின் கிறக்கம், நம்பிக்கை, உறுதி போன்றவை நின்ஸியின் குரலில் ஆற்றொழுக்காய் வெளிப்பட்டிருக்கின்றன.

பறக்கும் அனுபவத்துக்கு நீங்களும் தயாராகுங்கள்:

https://www.youtube.com/watch?v=92t7gstPdFE

x